விதவிதமான வாழ்க்கைகளை எழுதிப் பார்க்க விருப்பப்படுகிறான் கலைஞன். காலத்தின் கோலத்தால் எவராலும் உறுதியாகக் கூறிட முடியாத வாழ்வின் நிச்சயமின்மையால் மனிதர்களில் சிலருக்கு அல்லது பலருக்கு ஏகப்பட்ட விதமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகி விடுகிறது. எல்லாருமே ஏதோவொரு காலத்தில் அல்லது எதிர்காலத்தில் எல்லாம் சரியாகும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையுடன் ஒவ்வொரு புதிய நாளுக்கும் தயாராகிறார்கள். அன்றாடங்காய்ச்சிகளுக்கு ஒருநாள் என்பது ஒவ்வொரு நாளுமே சவால். அவர்கள் எதிர்பாராத ஒன்று எப்போதாவது நிகழலாம். எதிர்பார்க்கும் குறைந்தபட்ச விஷயங்கள் நடக்காமல் போகலாம். இவ்வாறான ஒரு அன்றாடங்காய்ச்சியின் ஒரு நாளை கதைக்களமாகக் கொண்டு தி. ஜா படைத்த சிறந்த ஆக்கங்களில் ஒன்று ‘’புண்ணிய பேங்க்’’.