Wednesday 2 November 2022

தார்மீக வெற்றி


நூறு தினங்களுக்கு முன்னால், ஊருக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கும் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் அந்த பள்ளி வளாகத்தில் இருந்த உயிர்மரம் ஒன்றினை வெட்டி விற்பனை செய்தார். மரம் வெட்டப்பட்டதற்கு மறுநாள் அந்த பாதையின் வழியாக நான் செல்ல நேரிட்டது. அந்த பகுதியை தனது பெரும் நிழல் பரப்பால் நிறைத்திருக்கும் அந்த மரம் வெட்டப்பட்டிருப்பது கண்டு ஆழ்ந்த அதிர்ச்சியை அடைந்தேன். மரம் வெட்டப்பட்டது குறித்து அந்த பள்ளியைச் சுற்றி குடியிருப்பவர்களிடம் விசாரித்து விபரங்கள் சேகரித்துக் கொண்டேன். 

தமிழ்நாட்டில் , மாநில அரசு ஊழியர்களுக்கு பணமதிப்பு கொண்ட விஷயங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து மிகவும் நன்றாகவே தெரியும். பள்ளி வளாகத்தில் உள்ள அந்த மரம் வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட கிளைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வருவாய்த்துறையின் உத்தரவைப் பெற்றே மரத்தை வெட்டியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பள்ளிக்கல்வித் துறைக்கேனும் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இவை எதுவும் நடைபெறவில்லை. மரத்தை வெட்டியது ஒரு குற்றம் எனில் அதனை விற்பனை செய்தது மரத்தை வெட்டியதை விட பல மடங்கு அடர்த்தி கொண்ட குற்றம். எனினும் இதைச் செய்தவர்களுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. 

வெட்டப்பட்ட மரத்துக்கு நியாயம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன். உண்மையில் எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் இது போன்ற விஷயங்களில் மிகத் தீவிரம் கொள்ள வேண்டாம் என என்னிடம் மன்றாடுகிறார்கள். தொடர்ச்சியாக என்னிடம் வற்புறுத்துகிறார்கள். அதனால் அவர்களிடம் கூட முழு விபரம் தெரிவிக்க முடியாத நிலை சில சமயம் ஏற்படும். 

சாலையில் செல்லும் ஒருவர் கூட வெட்டப்பட்ட மரம் குறித்து அக்கறை கொள்ள மாட்டார் என்ற நினைப்பே இவ்வாறான ஒரு குற்றச் செயலை மேற்கொள்ள ஒருவருக்கு துணிவைத் தருகிறது. அந்த நம்பிக்கையை முதலில் பொய்யாக்க வேண்டும் என்று எண்ணினேன். மரத்தை வெட்டியது தலைமை ஆசிரியர் எனக் குறிப்பிட்டு கிராம நிர்வாக அதிகாரிக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவின் நகலை வட்டாட்சியர் முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை பத்து அலுவலகங்களுக்கு அனுப்பினேன். மத்திய அரசின் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்திலும் பதிவு செய்தேன். 

குற்றத்தின் தன்மை தீவிரமானது என்பதால் நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் வருவாய்த்துறை மிக மிக மெல்லவே செயல்பட்டது. வட்டாட்சியர் இடத்தை ஆய்வு செய்து மரம் வெட்டப்படவேயில்லை என பதில் அளித்தார். மரம் வெட்டப்படவேயில்லை என்பதால் அபராதமும் விதிக்கப்பட வேண்டியதில்லை என்று பதில் சொன்னார். 

மாவட்ட ஆட்சியருக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் வட்டாட்சியரின் கூற்றினைக் குறிப்பிட்டு மனு அனுப்பினேன். 

சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்தில் மாநில அரசு அதிகாரிகள் மேல்நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டிய காலக்கெடு தாண்டிச் சென்றவாறிருந்தது. பத்து நாட்கள் முன்னால் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதாய் தகவல் கிடைத்தது. நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்தவாறு இருந்தேன். 

இன்று வருவாய் கோட்டாட்சியரிடமிருந்து ஒரு தபால் வந்தது. வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். மரத்தை வெட்டியது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ற தகவலை வருவாய் கோட்டாட்சியரே நேரடியாகக் குறிப்பிட்டு உறுதி செய்திருந்தார். உரிய அபராதம் விதிக்க வட்டாட்சியருக்கு அறிவுரை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த கடிதம் மூலம் குறைந்தபட்ச தார்மீக நியாயம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நூறு நாட்களுக்கு மேலாக நிகழ்ந்த ஒரு சமரில் தார்மீக வெற்றி கிடைத்திருக்கிறது. 

குற்றம் இழைத்தவர் அரசு ஊழியர் என்பதால் அபராதம் ரொக்கமாக செலுத்தப்பட அனுமதிக்கக் கூடாது ; விதிக்கப்படும் அபராதம் அவருடைய அரசாங்க ஊதியக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டும். அபராதம் செலுத்தும் அளவு குற்றம் புரிந்திருப்பதால் இந்த குற்றச் செயல் அவருடைய ‘’பணிப் பதிவேட்டில்’’ பதிவு செய்யப்பட வேண்டும். இதுதான் சட்ட பூர்வமான நடைமுறை. இது நிகழ்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கடமை மனுதாரருக்கு உள்ளது. 

ஜனநாயகத்தில் ஒரு குடிமகனுக்கு சட்டம் தன் கடமையை ஆற்றுவதை உறுதிப்படுத்தும் அதிகாரம் உண்டு. ஒரு ஜனநாயக அரசில் குடிமகனால் அதனைக் கண்காணிக்க முடியும். குடிமகனுக்கும் கண்காணிக்கும் உரிமை இருப்பதால்தான் இருக்கும் அமைப்புகளில் ஜனநாயக அமைப்பு மேலானது எனக் கருதப்படுகிறது. 

சம்பவம் நடந்து நூறு நாட்களுக்கு மேலாகியும் எந்த அபராதமும் விதிக்காமல் இருந்த வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரும் இந்த குற்றச் செயலின் பின்னணியில் இணையக் கூடியவர்கள். முதலில் ஒரு தொகை அபராதமாக செலுத்தப்பட்ட பின் அதனையே பூர்வாங்க ஆதாரமாகக் கொண்டு மேற்படி நபர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கையைக் கோரலாம் என இருக்கிறேன். 

மரக்கிரயமாக எவ்வளவு தொகை நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் அபராதம் எவ்வளவு செலுத்தக் கூறுகிறார்கள் என்பதும் கண்காணிக்க வேண்டிய விஷயங்கள். இந்த விஷயத்தில் இன்னும் சில சுற்றுக்கள் இருக்கின்றன. 

இந்த தருணத்தில் ஒரு தார்மீக வெற்றி கிடைத்திருக்கிறது.