Sunday 13 November 2022

நான் தாக்கப்படலாம்

இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும்

பதந்திரு இரண்டும் மாறி பழிமிகுந் திழிவுற் றாலும்

விதந்தரு கோடி இன்னல் விளைந்தென்னை அழித்திட்டாலும்

சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே !

-பாரதி

 

ஒரு பொது விஷயத்தில் சட்டபூர்வமான நியாயம் தீர்வாக இருக்க வேண்டும் என்று முயற்சிகளை முன்னெடுத்ததன் விளைவாக இன்று நான் தாக்கப்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது. நான் தாக்கப்படலாம். என் மீது பொய் வழக்குகள் போடப்படலாம். அவ்வாறான ஒரு சூழ்நிலை உண்டாகியிருப்பதால் எதற்காக நான் முயற்சி செய்தேன் என்பதை விரிவாக விளக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது. எனவே இதனை விளக்குகிறேன்.

ஒரு வருடத்துக்கு முன்னால், 09.07.2021 அன்று எனது நண்பர்கள் சிலருடன் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நண்பருக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அலைபேசியில் சகஜமாக அழைப்பை ஏற்று பேசத் துவங்கியவர் சில வினாடிகளில் பதட்டம் அடைந்தார். பதட்டத்துடனே அலைபேசியில் பேசியவரிடம் விபரங்கள் கேட்டார். சில நிமிடங்களில் அவர்கள் உரையாடல் நிறைவு பெற்றது. நண்பரிடம் பதட்டப்படுமளவுக்கு என்ன விஷயம் என்று கேட்டோம்.

நண்பர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில் உள்ள தொன்மையான விஷ்ணு ஆலயம் ஒன்றின் சன்னிதித் தெருவில் அவரது வீடு அமைந்துள்ளது. அந்த விஷ்ணு ஆலய சந்திதித் தெருவாசிகள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் வேம்பு, புங்கன், மலைவேம்பு முதலிய நிழல் தரும் மரங்களை நட்டு வளர்த்திருந்தனர். ஒவ்வொரு மரமும் பெரியவை. ஒவ்வொரு மரமும் ஆறு ஆண்டிலிருந்து பத்து ஆண்டு வரை அகவை கொண்டவை. அந்த வீதியில் அவ்வாறு பதினான்கு (14) மரங்கள் இருந்திருக்கின்றன. சம்பவ தினத்தன்று (09.07.2021), அந்த ஊரின் ஊராட்சித் தலைவர் ஊராட்சியின் வாகனங்கள் மற்றும் பணியாளர்களுடன் தொன்மையான விஷ்ணு ஆலயம் முன்னால் வந்து சன்னிதித் தெருவில் இருந்த மரங்களை ஜே.சி.பி வாகனம் மூலம் வேருடன் சாய்த்து கிளைகளை வெட்டி ஊராட்சி வாகனத்தில் எடுத்துச் சென்று தனக்குச் சொந்தமான செங்கல் காலவாயில் எரிபொருளாகப் பயன்படுத்த எடுத்துச் சென்றிருக்கிறார். மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்ட போது பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் தங்கள் பணிக்குச் சென்றிருந்தனர். வீடுகளில் பெண்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர். ஏன் இவ்வாறு மரங்களை வெட்டுகிறீர்கள் என்று பெண்கள் கேட்ட போது பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டியவர்கள்; அவர்கள் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று ஊராட்சி மன்றத் தலைவர் கூறியிருக்கிறார். பெண்கள் கேள்வி கேட்ட போது அவர்கள் முன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சிகரெட் புகையை ஊதியவாறு அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். தெருவில் இருந்த இளைஞர்கள் சிலர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் தங்கள் எதிப்பைத் தெரிவித்திருக்கின்றனர். அவர்களிடம் ‘’ ஒன்னரை ரூபாய் செலவு செய்து நீங்கள் மரக்கன்று வைத்து விட்டால் உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை வந்து விடுமா ?’’ என்று கேட்டிருக்கிறார். நண்பர் தனக்கு அலைபேசியில் தெரிவிக்கப்பட்ட விபரங்களை எங்களிடம் சொன்னார்.

நான் நண்பரிடம் ஒரு கேள்வி கேட்டேன். ‘’ சன்னிதித் தெருவில் இருந்த மரங்களை வெட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வருவாய் கோட்டாட்சியரிடம் (சப் கலெக்டர்) விண்ணப்பித்து உத்தரவைப் பெற்றிருந்தாரா?’’ என்றேன். நண்பர் ஊருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நான் கேட்ட கேள்வியை அவர்களிடம் கேட்டார். அவர்கள் ஊராட்சிப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு பேசி விபரம் கேட்டிருக்கின்றனர். அவ்வாறான அனுமதிக்கு விண்ணப்பிக்கப் படவும் இல்லை. அவ்வாறு அனுமதி பெறப்படவும் இல்லை என பதில் கிடைத்தது. ‘’அரசு புறம்போக்கு நிலமான தெருவில் இருக்கும் மரம் அல்லது மரங்களுக்கு பொருள் மதிப்பு உண்டு. அவை அரசாங்கத்தின் சொத்துக்கள். அவை எந்த காரணத்துக்கு அகற்றப்பட வேண்டும் என்றாலும் சப் கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர் அந்த மரத்தை நேரடியாக வந்து பார்வையிடுவார். மரம் அகற்றப்பட வேண்டும் என்ற விண்ணப்பம் அளிக்கப்பட்டிருப்பது உசிதமானதா என ஆராய்வார். அந்த மரம் வெட்டப்படுவது தேவை என்று நினைத்தால் அந்த மரத்தின் பொருள் மதிப்பை முழுமையாக அரசுக் கணக்கில் செலுத்தச் சொல்வார். அவ்வாறு செலுத்தப்பட்ட பின் அந்த மரத்தை வெட்ட அனுமதி அளிப்பார். இவ்வளவு நடைமுறைகள் இந்த விஷயத்தில் ஏற்படுத்தப்பட்டிருப்பதற்கு காரணம் அரசு புறம்போக்கு நிலத்தில் வளரும் எந்த மரத்தையும் வெட்ட எவரும் துணிந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் உங்கள் ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்டி தனது சொந்த செங்கல் காலவாயில் எரிபொருளாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் இந்த விஷயத்தில் செய்துள்ள குற்றங்கள் மூன்று. முதலாவது சப் கலெக்டர் அனுமதி இல்லாமல் 14 மரங்களை வெட்டியது. இது கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் என்னும் சட்டப் பிரிவின் கீழ் குற்றம். இரண்டாவது அதனை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது . இது அதிகார துஷ்பிரயோகம். மூன்றாவது அவர் அரசாங்க சொத்தான் பெரும் பொருள் மதிப்பு கொண்ட 14 மரங்களை வெட்டி அரசாங்க சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியிருக்கிறார். மூன்று குற்றங்களில் ஆகப் பெரிய குற்றம் இது. அரசாங்கம் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளாது;  நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் ’’ என்று நண்பரிடம் பதில் சொன்னேன். நண்பருக்கு நான் சொன்ன இந்த விஷயங்கள் புதிதாக இருந்தன. சம்பவ இடத்தை நான் மறுநாள் காலை நேரில் வந்து பார்ப்பதாகச் சொன்னேன்.

தமிழ்ச் சூழலில் பொதுமக்கள் அரசாங்கம் மீது எந்த விதமான நம்பிக்கையும் இல்லாமல் இருப்பார்கள். எனக்கு எப்போதும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உண்டு. ஒரு ஜனநாயக நாட்டின் அரசாங்க அமைப்பு அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்க முடியும். ஆங்காங்கே தவறுகள் இருக்கலாம். குறைகள் இருக்கலாம். முறைகேடுகள் இருக்கலாம் . அதற்காக ஒட்டு மொத்த அமைப்பின் மேலும் அவநம்பிக்கை கொள்வது சரியானது அல்ல என்ற எண்ணத்தை வலுவாகக் கொண்டவன் நான்.

மறுநாள் நண்பரின் கிராமத்துக்குச் சென்றேன். அவரது வீடு இருந்த சன்னிதித் தெரு எந்த மரமும் இல்லாமல் வெட்டவெளியாய் இருந்தது. மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டதன் பள்ளங்கள் மொத்தம் பதிநான்கு (14) இருந்தன. அவற்றைப் பார்வையிட்டேன். பொதுமக்கள் சிலர் என்னைக் கவனித்து முதல் நாள் நடைபெற்ற சம்பவத்தை என்னிடம் தெரிவித்தனர். அந்த தெருவின் முதியவர்கள் கண் கலங்கி சொன்னதைக் கேட்ட போது மனம் மிகவும் வலித்தது. மரம் வெட்டுவதன் நடைமுறைகள் குறித்து அவர்களுக்குச் சொல்லி நடந்த இந்த விஷயத்தை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினேன். சன்னிதித் தெருவின் பொதுமக்கள் அஞ்சினர் ; தயங்கினர். ’’நன்கு வளர்ந்த 14 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருக்கின்றன.  இதனை நாம் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல; நாம் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்வோம் ‘’ என்று சொன்னேன். மக்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. ‘’நீங்கள் யாரும் இந்த விஷயத்தை கலெக்டரிடம் தெரிவிக்காவிட்டாலும் நான் தெரிவிப்பேன். இங்கே நிகழ்ந்திருக்கும் அநீதியைப் பார்த்து விட்டு இப்படியே திரும்பிப் போய்விட மாட்டேன். வெட்டப்பட்ட மரங்களுக்கு நான் நியாயம் கேட்பேன்’’ என்று சொல்லி விட்டு ஊர் திரும்ப யத்தனித்தேன். அங்கே இருந்த விஷயங்கள் இந்த விஷயத்தின் சட்ட அம்சங்கள் குறித்துக் கேட்டனர். நான் எனக்குத் தெரிந்த விபரங்களைச் சொன்னேன். ஆனால் அவர்கள் அனைவருமே நான் கூறித்தான் இந்த மரங்கள் வெட்டப்பட்டது சட்ட விரோதம் என அறிந்தனர். அதற்கு முன் அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை.

வீட்டுக்கு வந்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனுவை தயார் செய்து கொண்டிருந்தேன். இந்த விஷயம் காட்சி ஊடகட்த்தில் வந்தால் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஒரு அழுத்தம் உருவாகும் என்பதால் ஒரு சேட்டிலைட் தொலைக்காட்சியின் எண்ணை இணையம் மூலம் கண்டறிந்து அவர்களைத் தொடர்பு கொண்டு நிகழ்ந்ததைக் கூறினேன். அவர்கள் உள்ளூர் செய்தியாளரின் எண்ணை எனக்கு அளித்து அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கூறினர். அவரிடம் பேசினேன். அவர் சம்பவ இடத்துக்கு வந்து விடுவதாகக் கூறினார். நான் அங்கே விரைந்து சென்றேன். நான் சென்ற சில நிமிடங்களில் அவரும் வந்து விட்டார். காலையில் மக்களிடம் அதிக நேரம் உரையாடியிருந்ததால் மாலை சென்ற போது அனைவரும் என்னுடைய முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர். ஒரு குடிமகனாக நான் என் கடமையைச் செய்வதாக அவர்களிடம் கூறினேன். டி.வி செய்தியாளர் நிகழ்ந்தவற்றை மக்களிடம் கேட்டு ஒளிப்பதிவு செய்து கொண்டார். அந்த தெருவின் இளைஞர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மரங்களை வெட்டிய போது தெருவாசிகள் அலைபேசி மூலம் எடுத்த வீடியோக்களை அளித்தனர். அவற்றைத் தன் அலைபேசியில் பதிவேற்றம் செய்து கொண்டு புறப்பட்டார். அந்த வீதியின் பொதுமக்கள் அனைவரும் தாங்களே மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்புவதாகக் கூறினர். அந்த தெருவின் பொதுமக்கள் அனைவரும் மனு எழுதத் துவங்கினர். இளைஞர்கள் அவர்களுக்கு உதவினர். தயாரித்து வையுங்கள் என்று கூறி விட்டு நான் ஊர் திரும்பி விட்டேன். பின்னர் மீண்டும் அன்று இரவு சென்று மனுக்களை தபாலில் அனுப்புவதற்காக வாங்கி வந்தேன்.

மறுநாள் காலை என்னை ஊருக்கு வருமாறு அங்கிருந்த இளைஞர்கள் அழைத்தனர். இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் எனது முயற்சிகள் மகிழ்ச்சி அளித்தன. என் மீது மிகுந்த பிரியம் காட்டத் துவங்கினர். சில இளைஞர்கள் இந்த தெருவில் வசிக்கும் மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுப்போம் என்றார்கள். அதுவும் நல்ல யோசனைதான் என ஒத்துக் கொண்டேன். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. மறுநாள் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள். அதாவது, மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கும் நாள். காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தால் அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் சந்தித்து மனு அளித்து விடலாம் என எண்ணினோம். சேட்டிலைட் தொலைக்காட்சி செய்தியாளர் எங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஊராட்சி மன்றத் தலைவர் மரங்களை வெட்டிய செய்தி திங்கள் கிழமை காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறினார்.  

திங்களன்று காலை அந்த செய்தி சேட்டிலைட் சேனலில் ஒளிபரப்பானது. அந்த பிரதேசம் முழுக்க அந்த செய்தி பரவியது. வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நாடுகளிலிருந்து ஊர்க்காரர்களுக்கு ஃபோன் செய்து என்ன நடந்தது என்று விசாரித்த வண்ணம் இருந்தனர். காலை 10 மணிக்கு கிராம மக்கள் 25 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்திருந்தார்கள். முதியவர்கள் வந்திருந்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்கள் அப்போது குறைவாகவே இருந்தனர். வந்த பணி விரைவில் முடிந்து விடும் என்றே அனைவரும் எண்ணினர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அலுவலக எழுத்தரிடம் மனுவை அளித்து விட்டு செல்லுங்கள் என்றனர். சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சென்று மனு கொடுங்கள் என்றனர். வட்டாட்சியரிடம் மனு கொடுங்கள் என்றனர். மாவட்ட ஆட்சியரிடம் நடந்ததைக் கூற நாங்கள் வந்திருக்கிறோம். எங்களுக்கு இரண்டு நிமிடம் போதும் மனுவை நேரில் பார்த்து கொடுத்து விட்டு செல்கிறோம் என்று கிராம மக்கள் சொன்னார்கள். நேரம் போய்க் கொண்டே இருந்தது. கலெக்டர் வெளியே புறப்படும் போது கார் அருகில் சென்று மனுவைக் கொடுக்கிறோம் என்று மக்கள் சொன்னார்கள். நான் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஊரிலிருந்து வந்தவர்கள் அலுவலக வாசலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நான் அமைதி இழந்தேன். ’’தங்களுக்கு நிகழ்ந்த அநியாயத்தை அரசாங்கத்திடம் தெரிவிக்க இந்த மக்கள் வந்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக நடந்ததைத் தெரிவிப்பதால் இந்த மக்களுக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்கக்கூடும். மக்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை மக்களுடைய குரலில் மாவட்ட ஆட்சியர் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு இரண்டு நிமிடம் போதும் ‘’ என்று உரத்த குரலில் தெரிவித்தேன். உரத்த குரலில் வெளிப்பட்ட எதிர்வினையைக் கண்டதும் வளாகமே ஒரு நிமிடத்துக்கு நிசப்தம் ஆனது. ஐந்து நிமிடத்தில் இரண்டு பேரை மட்டும் கலெக்டர் வரச் சொல்வதாக ஒரு பணியாளர் வந்து சொன்னார். நான் ஒரு பெண்மணியையும் ஒரு இளைஞனையும் செல்லச் சொன்னேன். மக்கள் அனைவரும் என்னையும் உடன் செல்லுமாறு கூறினர். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நடந்ததை அந்த பெண்மணியும் இளைஞனும் கூறினார்கள். ‘’எங்கள் பிள்ளைகளைப் போல பார்த்து பார்த்து வளர்த்த மரங்களை எங்கள் கண் முன்னால் வெட்டி விட்டார்கள்’’ என்று கூறிய போது அந்த பெண்மணி அழுது விட்டார். தாசில்தாரிடம் அறிக்கை கேட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறேன் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். தேவைப்படின் காவல்துறை நடவடிக்கையும் மேற்கொள்வதாகக் கூறினார். வெளியே வந்து மக்களைச் சந்தித்து ஆட்சியரிடம் தெரிவித்த விஷயங்களைக் கூறினோம். குற்றம் இழைத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறி அனைவரையும் ஊருக்கு அனுப்பி வைத்தேன்.

அடுத்த சில நாட்களில் அங்கிருந்த இளைஞர்களைச் சந்தித்து மரங்கள் வெட்டப்பட்ட அதே தெருவில் நாம் மீண்டும் மரங்களை நட வேண்டும் என்று சொன்னேன். அதுவே காந்திய வழிமுறை. ஆக்க பூர்வமான விஷயங்களை எப்போதும் முன்னெடுத்தவாறே இருப்பது. 14 மரங்கள் வெட்டப்பட்டதற்கு மாற்றாக அந்த தெருவில் 100 மரங்கள் நடப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். இளைஞர்களும் பொதுமக்களும் அவ்வாறே செய்வோம் என்றனர். மரக்கன்றுகளையும் மரக்கன்றுகளுக்குத் தேவையான இரும்புக்கூண்டுகளையும் வழங்கினேன். நூறு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொன்மையான விஷ்ணு ஆலயம் உள்ள சன்னிதித் தெரு என்பதால் பாரிஜாதம், மகிழம், மந்தாரை ஆகிய பூமரக் கன்றுகளும் இயல்வாகை, சொர்க்கம், நாவல் ஆகிய நிழல்மரக்கன்றுகளும் நடப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் மனுக்களை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பினார். உரிய மேல்நடவடிக்கை எடுத்து மேல்நடவடிக்கை விபரத்தை மனுதாரர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார். எனினும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் எந்த தபாலும் வரவில்லை. நூறு மரக்கன்றுகளையும் மக்கள் ஆர்வமாகப் பராமரித்து வந்தனர். செடிகள் வளரத் துவங்கியது அனைவருக்கும் நன்னம்பிக்கையை அளித்தது. மேலும் ஒரு மாதம் ஆனது. அப்போதும் தகவல் இல்லை. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று விசாரித்தோம். வட்டாட்சியர் அலுவலகம் சென்று கேட்டோம். நாங்கள் தகவலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி விட்டோம் என்று சொன்னார்கள். அலைக்கழிப்பு அதிகம் ஆனதால் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி விபரங்கள் கோருவது என்று முடிவு செய்தோம்.

வட்டாட்சிய்ருக்கும் கோட்டாட்சியருக்கும் விபரங்கள் கேட்டோம். சில தகவல்களை அளித்தனர். நாங்கள் கோரிய பல விபரங்களை அளிக்கவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மேல்முறையீடு செய்தோம். ஒரு மனுவுக்கு பதில் அளிக்க தகவல் பெறும் உரிமைச் சட்டம் 30 நாள் கெடு அளிக்கிறது. ஆனால் அந்த கெடுவிலிருந்து பத்து நாட்கள் அதிகமாக எடுத்துக் கொண்டு முக்கியத்துவம் கொண்ட தகவல்களை அளிக்காமல் துணை விபரங்களை மட்டும் அளித்துக் கொண்டிருந்தனர். அந்த தெருவின் மக்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மறைமுகமாக சில நெருக்கடிகளை அளித்தார்.

இந்த விஷயத்தில் நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு உறுதியுடன் இருந்தேன். இந்த மக்கள் மிகவும் எளிய மக்கள். இவர்களை எக்காரணம் முன்னிட்டும் காவல்துறையின் பக்கம் கொண்டு சென்று விடக் கூடாது. ஒரு ஜனநாயக அமைப்பில் நியாயம் பெற எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. மென்மையான முறைகள் மூலமே இந்த விஷயம் முன்நகர வேண்டும் என்ற உறுதியை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இது எந்த தனிநபருக்கும் எதிரான விஷய்ம் இல்லை. குடிமக்களின் உரிமை தொடர்பானது. ஒரு ஜனநாயக  நாட்டில் தங்களுக்கு நடந்த ஒன்றை அரசின் கவனத்துக்குக் கொண்டு வரவும் தங்களுக்கான தீர்வை எதிர்நோக்கவும் எல்லா குடிகளுக்கும் உரிமை உண்டு. இவ்வாறான உரிமையை அவர்கள் கேட்டுப் பெறவே எத்தனையோ பேர் நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது தங்கள் குருதியைக் கொட்டி சுதந்திரம் பெற்றுத் தந்திருக்கின்றனர்.

மீண்டும் மீண்டும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி விபரம் கோரியதன் விளைவாக சில அடிப்படை விபரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அந்த விபரங்கள் எங்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தன.

சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அந்த குற்றம் இழைத்தவருக்கு ‘’சி’’ படிவ அறிக்கை என்ற அறிக்கையை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, வெட்டப்பட்ட மரத்துண்டுகளின் கன அளவு, பொருள் மதிப்பு ஆகிய்வை குறிப்பிடப்பட வேண்டும். முக்கிய விபரங்கள் எதுவும் நிரப்பப்படாமல் முழுமையானதாக இல்லாமல் அந்த அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். இந்த அறிக்கையை அரைகுறையாக அளித்ததன் மூலம் கிராம நிர்வாக அதிகாரி குற்றம் இழைத்தவருக்கு துணை சென்றிருப்பதை அறிந்தோம். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ. 950 என நிர்ணயிக்கப்பட்டு அதற்கு ஒரு மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு வரியுடன் சேர்த்து ரூ. 2052 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூபாய் இரண்டு லட்சத்துக்கு மேல் இருக்கும். அந்த ‘’சி’’ படிவ அறிக்கையின் மீது வருவாய் வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு பல குளறுபடிகளைக் கொண்டிருந்தது. அத்தனை குளறுபடிகளையும் அப்படியே ஏற்ர்றுக் கொண்டு வருவாய் கோட்டாட்சியர் ரூ. 2052 என்ற மதிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த விஷயங்களை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்றோம். சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளம் மூலம் இந்த புகாரை பதிவு செய்தோம். நாளாக நாளாக வருவாய்த்துறை நடைமுறைகள் குறித்து அறிந்த பலரைச் சந்தித்து  இந்த விஷயத்தில் என்னென்ன நிர்வாகக் குளறுபடிகள் நடந்துள்ளன என்பதை முழுமையாக அறிந்தோம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி இந்த விஷயம் தொடர்பான கோப்பின் முழு நகலைக் கோரி விண்ணப்பம் அனுப்பினோம். சி. பி. கி. ரா. ம்.ஸ் தளத்தில் பதிவு செய்ததன் பலனாக வருவாய் கோட்டாட்சியர் மரம் வெட்டிய ஊராட்சித் தலைவர் மீது மேலும் அபராதம் விதிக்குமாறு வட்டாட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பதில் அளித்தார். முழுக் கோப்பை அளிப்பதில் பல சங்கடங்களை அதிகாரிகள் உணர்கிறார்கள்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு உருவாகி வரும் காலகட்டம் இது. எல்லா உலக நாடுகளும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காலகட்டம் இது. மரம் ஒன்றினை வளர்ப்பது என்பது ஒரு சாமானியனை சுற்றுச்சூழலுடன் உணர்வுபூர்வமாக இணைக்கும் குறியீட்டுச் செயல். தமிழ்நாட்டில் பொது இடங்களில் இருக்கும் மரங்களை வெட்டுவது தொடர்பாக பல நடைமுறைகள் இருப்பது மரங்களைக் காக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகவே. ஒவ்வொரு கிராமத்திலும் எந்த நெறிமுறைகளும் இல்லாமல் சுயலாபத்துக்காக மரங்கள் வெட்டப்படும் என்றால் அதனால் உண்டாகும் அழிவு என்பது பேரழிவாகவே இருக்கும்.

நாட்களைக் கடத்தினால் தவறுகளிலிருந்து தப்பி விடலாம் என அதிகாரிகள் நினைக்கிறார்கள். மரங்களை வெட்டி தவறிழைத்தவர் ஊராட்சி மன்றத் தலைவர். எனினும் அதற்கு உடந்தையாக பல வருவாய்த்துறை அதிகாரிகள் இருந்திருக்கின்றனர். இப்போது அவர்கள் அனைவருமே புகார் வளையத்தில் உள்ளனர். இந்த விஷயத்தில் ஆவணங்களே முதன்மையான சாட்சியமாக உள்ளன என்பதை குற்றம் இழைத்தவரும் அதற்கு துணை நின்றவர்களும் உணர்கிறார்கள். நிலைமையின் தீவிரம் இப்போதுதான் முழுமையாக அவர்களுக்குப் புரியத் துவங்கியிருக்கிறது.

எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த விஷயத்தால் நான் தாக்கப்படுவேன் என கவலை கொள்கிறார்கள். என் மீது பொய் வழக்கு ஏதும் எப்போது வேண்டுமானாலும் போடப்படும் என வருந்துகின்றனர். அவ்வாறு ஒரு நிலை வந்தால் ஏன் அவ்வாறு நடந்தது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதால் இவற்றை எழுதிப் பதிவு செய்துள்ளேன்.

கடந்த சில தினங்களாக என்னுடைய அலைபேசிக்கு ஊராட்சி மன்றத் தலைவரிடமிருந்து அலைபேசி அழைப்புகள் வருகின்றன. அவ்வாறு வரக் கூடும் என்ற யூகம் இருந்ததால் நான் புதிய எண்களிலிருந்து வரும் அலைபேசி அழைப்புகளை ஏற்காமல் இருந்தேன். ஒரு எண்ணிலிருந்து தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்ததால் ஒருமுறை எடுத்தேன். பேசியவர் தான் யார் என்பதைத் தெரிவித்தார். நான் இணைப்பைத் துண்டித்து அலைபேசியை அணைத்து வைத்து விட்டேன்.

மரங்களை வெட்டியவருக்கு தனது தரப்பை சொல்ல தனது விளக்கத்தை அளிக்க இந்திய அரசியல் சட்டம் வாய்ப்பு தருகிறது. அவ்வாறு வாய்ப்பு தரப்படுவதை நாம் வரவேற்கிறோம். ஒரு தவறோ குற்றமோ நம் கவனத்துக்கு வந்தால் அதனை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டியது ஒரு குடிமகனின் கடமை. நான் அந்த கடமையை மட்டுமே செய்திருப்பதாக எண்ணுகிறேன். ஒரு ஊரில் 14 மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் வெட்டப்படும் ; முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் என அனைவரின் கவனத்துக்கும் சென்ற பின்னும் அந்த விஷயத்தில் எந்த நம்பிக்கையளிக்கும் தீர்வும் ஏற்படாது என்ற நிலை இருந்தால் அது எவ்வாறான நிலை என்பதை நாம் அனைவருமே சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் கிராம மக்களைத் தொடர்ந்து சந்தித்து அவர்களுடைய வீட்டுக் கொல்லையில் வயல் வரப்பில் ஆக சாத்தியமான எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடச் சொல்லி ஊக்கம் அளிப்பவன். கிராம முன்னேற்றத்தையும் சுற்றுச்சூழலையும் இணையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பணி புரிபவன். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பாக இருப்பினும் குறிப்பிடத்தகுந்த சில விஷயங்களை குறுகிய காலகட்டத்தில் சில கிராமங்களிலாவது செய்திருக்கிறது.

நேற்று இங்கே நல்ல மழை. அந்த மழையில் செயல் புரியும் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். சென்ற ஆண்டு அந்த கிராமத்தின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக நண்பர்களின் உதவியுடன் ஆறு நாட்களுக்கு ஒரு வேளை உணவளிக்கப்பட்டது. எங்கள் பகுதிகளில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் சமையல் என்பதை ஒருநாளைக்கு ஒரு வேளைதான் சமைக்கிறார்கள். காலை உணவாக முதல் நாள் சமைத்த அன்னத்தில் நீரூற்றி வைக்கப்பட்ட பழையன்னமாக உண்கிறார்கள். பகல் பொழுதுகளில் அதிகம் தேனீர் தான் அருந்துகிறார்கள். கையில் பால் இருப்பு பெரிதாக வைத்துக் கொள்வதில்லை என்பதால் அருகில் இருக்கும் தேனீர்க்கடையில் தேனீர் வாங்கி அருந்துகிறார்கள். அவர்கள் உணவு சமைப்பது என்பது மாலை ஐந்து மணியை ஒட்டித்தான். அப்போது உலை வைப்பார்கள். உலை கொதித்து சோறு பொங்கி மாலை 6.30 மணியை ஒட்டி உணவு தயாராகும். மழைக்காலம் என்றால் வீடு ஒழுகும். தரை ஈரமாக இருக்கும். இவ்வாறான சிக்கலால் உணவு தயாரிப்பதில் சில இடையூறுகள் அவர்களுக்கு இருக்கக் கூடும் என்பதால் செயல் புரியும் கிராமத்தின் குடிசைப் பகுதி ஒன்றில் அங்கிருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் மாலை 6 மணிக்கு சமைத்த உணவை அளித்தோம். ஆறு நாட்களுக்கு அளித்தோம். ‘’காவிரி போற்றுதும்’’ போன்ற நுண் அமைப்பால் அவ்வளவுதான் இயலும். அதனை முழுமையாகச் செய்தோம். இந்த ஆண்டு மழை கொட்டத் தொடங்கியதும் சென்ற ஆண்டு செய்ததைப் போல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. போதுமான நிதி இருப்பு இல்லை. எனினும் ஒரு துவக்கத்தை நிகழ்த்தி விட்டு இரண்டாவது அடி எடுத்து வைக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு வாரம் அவர்கள் சமையல் செய்வதற்கு தேவையான உணவுப் பொருட்களையும் மளிகைப் பொருட்களையும் வழங்கலாம் என முடிவு செய்தேன். குடிசைப் பகுதியைப் பார்த்து மொத்தம் எத்தனை வீடுகள் என கணக்கெடுக்கச் சென்றேன். முற்றிலும் நீர் சூழ்ந்திருந்தது. என்னைக் கண்டதும் மக்களுக்கு மகிழ்ச்சி. ஒரு மனிதனைக் கண்டு இன்னொரு மனிதன் அகமகிழ்கிறான் என்பது ஒரு மகத்தான விஷயம். அனேகமாக நாளை மாலைக்குள் அந்த பகுதி முழுமைக்கும் எல்லா வீடுகளிலும் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களும் மளிகைப்பொருட்களும் வழங்கப்பட்டு விடும்.

’’ஒன்று பரம்பொருள் ; நாம் அதன் மக்கள்’’ என்கிறான் நம் மூதாதையான பாரதி.