Tuesday, 15 November 2022

என் நண்பன் சீனு

சீனுவை முதல் முறையாகச் சந்தித்தது மதுரையில் அலெக்ஸ் அண்ணன் ஏற்பாடு செய்திருந்த அயோத்திதாசர் குறித்த ஜெயமோகன் உரையில் என்று ஞாபகம். நிகழ்ச்சி முடிந்து அதன் பின் மணிக்கணக்காக காலேஜ் ஹவுஸ் விடுதி அறையில் ஜெ பேசிக் கொண்டிருந்தார். உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் அவ்வப்போது தங்கள் அபிப்ராயங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அவ்வாறு அபிப்ராயம் கூறியவர்களில் சீனுவும் ஒருவர். நானும் ஒருவன். அதன் வழியாகவே அந்த குறைந்த நேரத்தில் ஒருவரை ஒருவர் அறிந்தோம். ஜெ வுக்கு அடுத்த நாள் நாகர்கோவிலில் நிகழ்ச்சி இருந்தது. அதனால் அவர் நள்ளிரவு இரண்டு மணிக்கு மாட்டுத்தாவணியில் பஸ் ஏறியாக வேண்டும். அவருடன் நாங்களும் பேருந்து நிலையத்துக்குப் புறப்பட்டோம். பல ஊர்களிலிருந்து வந்திருந்த வாசகர்கள் 25 பேருக்கு மேல் இருந்தனர். ஐந்தாறு பேர் காரில் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் காரில் அனைவரையும் மாட்டுத் தாவணியில் கொண்டு விட்டனர். அப்போது நானும் சீனுவும் ஒரு காரில் பக்கத்து பக்கத்தில் அமர்ந்து பயணிக்க நேர்ந்தது. நான் கணிசமாக பயணம் செய்யக் கூடிய்வன் என்றாலும் ரயில் பயணங்களை தெரிவு செய்பவன். அதனால் ஓரளவு ரயில் நேரங்களைத் தெரிந்து வைத்திருப்பேன். சீனுவிடம் நான் மெல்ல கேட்டேன். ‘’சீனு ! இன்னும் ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ணா ஒரு எக்ஸ்பிரஸ் இருக்கு. நீங்க திருச்சில இறங்கிடுங்க. நான் தொடர்ந்து ஊருக்குப் போயிடறன்’’. 

சீனு தன் அழுத்தமான குரலில் சொன்னார். ‘’ நமக்கு இந்த டிரெயின், டிரெயின் டைமிங் , டிரெயினுக்காக பிளாட்ஃபார்ம்ல காத்திருக்கிறது இதெல்லாம் சரியா வராது. ஒரு இடத்துக்குப் போகணும்னு முடிவு பண்ணா என்னெல்லாம் டிரான்ஸ்போர்ட் உடனே இருக்கோ அதுல கிளம்பி போய்க்கிட்டே இருக்கணும்’’

அதுநாள் வரை ஒழுங்காக ரயில் பிடித்து சென்று கொண்டிருந்தவன் அதன் பின் சீனு மார்க்கத்தில் பயணிக்கத் தொடங்கினேன். 

அன்றைய தினம் மதுரையிலிருந்து திருச்சி வரை பேருந்தில் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு வந்த விஷயங்களும் அந்த பயணத்திலேயே நாங்கள் உணர்ந்த அணுக்கமும் மறக்க முடியாதது. குர் அதுல் ஐன் ஹைதரின் ‘’அக்னி நதி’’யும் கிரிராஜ் கிஷோரின் ‘’சதுரங்கக் குதிரைகள்’’ம் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள். அவற்றை ஒரு துவக்கமாகக் கொண்டு நானும் சீனுவும் இந்திய நாவல்கள் குறித்து விரிவாகப் பேசிக் கொண்டு சென்றோம். வானம் மெல்ல சிவந்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் திருச்சி வந்து தேனீர் அருந்தி விட்டு உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிந்தோம். 

இலக்கியத்தில் ஆர்வமும் ரசனையும் கொண்டவர்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பவர் சீனு. அது ஒரு அரிய குணம். அது ஒரு அரிய மனநிலை. 

அதன் பின்னர் பல சந்திப்புகள் . பல உரையாடல்கள். எப்போதுமே சீனுவை கடலூர் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு மயிலாடுதுறை செல்லும் பஸ் ஏறுவது என்பது மிகுந்த துயர் அளிக்கக் கூடியது. அதுவரை நாங்கள் பேசிய விஷயங்கள் அதன் பின்னரான இரண்டரை மணி நேரப் பயணத்தில் சீனுவின் தீர்க்கமான உச்சரிப்பில் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். 

நாங்கள் மேலும் மேலும் என இன்னும் அடிக்கடி சந்தித்திருக்கலாம் தான். அதிகம் உரையாடியிருக்கலாம் தான். என்னை அவர் அறிவார். அவரை நான் அறிவேன். அது எங்கள் இருவருக்கும் தெரியும். சீனு போல மனிதர்கள் மீது அத்துணை பிரியம் கொள்பவர்களும் மதிப்பளிப்பவர்களும் அத்தனை புரிதலுடன் கனிவுடன் இருப்பவர்களும் அபூர்வம். அவர் எல்லாரிடமும் பேரன்புடனே இருக்கிறார் ; பழகுகிறார். 

இரண்டு நாட்களுக்கு முன்னால், பொது விஷயம் தொடர்பாக நான் எழுதிய பதிவை சீனுவுக்கு அனுப்பியிருந்தேன். அதை வாசித்து சீனு பெரும் வருத்தம் கொண்டார். அவர் அந்த அளவு வருத்தம் கொண்டது என்னை வருத்தம் அடையச் செய்தது. ஓங்கி ஒலிக்கும் சீனுவின் குரல் அன்று அன்பாலும் பிரியத்தாலும் தழுதழுத்திருந்தது. சீனுவை சமாதானம் செய்வது பெரிய வேலையாகி விட்டது. 

நீ எனக்கு அளிக்கும் அனைத்துக்கும் நன்றி நண்பா.