Tuesday, 15 November 2022

கவிதைகளின் தீராக் காதலன் ( மறுபிரசுரம்)

அடிக்கடி சந்திக்க இயலா விட்டாலும் அதிக நேரம் அளவளாவ வாய்ப்பு இல்லையென்றாலும் அகத்துக்கு மிக நெருக்கமாக உணரும் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. ராகவ் அவ்வாறான நண்பர். இலக்கியத்தின் மேல் பேரார்வம் கொண்டவர். தீவிரமான வாசகர். இலக்கிய விவாதங்களை கூர்மையாகக் கவனிப்பவர். இன்று அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். சென்னையில் ஐ டி துறையில் பணிபுரிகிறார். அவரது பூர்வீக நிலம் மெலட்டூரில் உள்ளது. அதன் அறுவடைப் பணிகளை மேற்பார்வையிட ஊருக்கு வந்திருந்தார்.  நான்கு நாட்கள் மெலட்டூரில் இருந்து அறுவடைப் பணிகளை முடித்துக் கொண்டு அவர் சென்னை செல்ல வேண்டும். 

இன்று காலை 8 மணி திருச்சி விரைவு ரயில் வண்டியில் பாபநாசம் சென்று இறங்கிக் கொண்டேன். ராகவ் ரயில் நிலையத்துக்கு வந்து மெலட்டூர் அழைத்துச் சென்றார். தனது ஃபோர்டு காரில் மாயாவியைப் போல பல வித்தைகளைக் காட்டுகிறார். 




அவரது வீட்டுக்குச் சென்றதும் கூடத்தில் கொலு வீற்றிருந்த ஸ்கூபி ராகவ்வின் பின்னால் வரும் என்னைப்  பார்த்ததும் வீடே அதிர்வதைப் போல் பெருங்குரலில் குரைத்தது. நான் அதன் பக்கத்தில் சென்று அதன் தலையைத் தொட்டேன். என் கால் விரல்களை முகர்ந்தது. நான் அதன் தலையைத் தடவிக் கொடுத்தேன். என் உள்ளங்கையை மோப்பம் பிடித்தது. நான் ரயிலில் புறப்படும் முன் எங்கள் தெருவில் வசிக்கும் நான்கு நாய்களுக்கு பிஸ்கட் கொடுத்து விட்டு வந்திருந்தேன். தினமும் அவற்றுக்கு பிஸ்கட் போட்டு விட்டு கொஞ்ச நேரம் அவற்றுடன் விளையாடி விட்டு வருவேன். அவற்றின் வாசனையை ஸ்கூபி அறிந்திருக்கக் கூடும். சரி இவனை ஏதோ ஒரு  விதத்தில் ஏற்றுக் கொள்ளலாம் என அது முடிவு செய்தது. ஸ்கூபி ஏற்றுக் கொண்டதால் பெப்பரும் ஏற்றுக் கொண்டது. நான் ரொம்ப நேரம் அதனுடன் இருந்ததும் ராகவ் , ‘’பிரபு ! ஒருத்தரை ஸ்கூபிக்கு ரொம்ப புடிச்சிருந்தா லேசா கடிக்கும்’’ என்றார். என்னை அதற்கு ரொம்ப பிடிக்கும் முன் நான் விடுபட்டேன். 


திருமதி. ராகவ் தஞ்சாவூர் ஜில்லாவுக்கே உரிய பிரத்யேகத் தன்மை கொண்ட சிறப்பான காஃபி கொடுத்து உபசரித்தார். கடந்த சில மாதங்களாக காஃபி , டீ, பால் என அனைத்தையும் வெற்றிகரமாக தவிர்த்திருக்கிறேன். எனினும் எனது உள்ளுணர்வு இந்த காஃபியை அருந்தச் சொன்னது. எனது வாழ்வில் நான் அருந்திய மிகச் சிறந்த காஃபிகளில் ஒன்று. அக அமைதியும் மனத் திட்பமும் கொண்ட ஒருவராலேயே அவ்வாறாக காஃபி போட முடியும். நான் அருந்திய மிகச் சிறந்த காஃபிகளில் ஒன்று என அவரிடமும் ராகவ்விடமும் கூறினேன். 

நானும் ராகவ்வும் இலக்கியம் பேச ஆரம்பித்தோம். ராகவ் சாய்ந்து கொள்ள திண்டு கொண்டு வந்து தந்தார். நான்  திண்டை முட்டுக் கொடுத்து சோஃபாவில் சாய்ந்து கொண்டு உரையாற்ற ஆரம்பித்தேன். 

அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 

சட்டென , ‘’ராகவ் ! நீங்கள் எழுத வேண்டும் என விரும்பியிருக்கிறீர்களா?’’ என்று கேட்டேன். 

ராகவ் யோசித்துப் பார்த்து விட்டு , ‘’இல்லை பிரபு ! அதிகமாக வாசிக்க வேண்டும் என்று தான் விரும்பியிருக்கிறேன். ‘’ என்றார். 

கேள்வியை நான் வேறு விதமாகக் கேட்டேன். ‘’கட்டுரைகள், நாவல், சிறுகதை எழுத வேண்டும் என்று எப்போதாவது உங்கள் மனதில் எண்ணம் தோன்றியிருக்கிறதா?’’ என்று கேட்டேன். 

அவர் உடனே ‘’இல்லை’’ என்று பதில் சொன்னார். 

நான் ‘’பொயட்ரி’’ என்றேன். 

ராகவ் தரையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார். நான் புரிந்து கொண்டேன். 

‘’பொயட்ரி எழுதியிருக்கீங்களா?’’

‘’எழுதியிருக்கன் பிரபு. ஆனா அது பொயட்ரியான்னு தெரியலை’’

‘’நீங்க எழுதியிருக்கற பொயட்ரியை எனக்கு காட்டுங்க. நான் வாசிச்சுப் பாக்கறன்’’

தனது அலைபேசியில் அவர் எழுதிய கவிதைகள் சிலவற்றை எனக்குக் காண்பித்தார். நான் ஆர்வத்துடன் வாசித்தேன். 

‘’தொடர்ந்து எழுதுங்க ராகவ். நல்லா எழுதறீங்க. நீங்க தொடர்ந்து எழுதினா உங்க கவிதைகள் வழியா உங்களுக்குள்ள ஒரு டிராவல் நடக்கும். ஈஸ்வர ஹிதம் ‘’ என்றேன்.