நமது நாட்டில் நவம்பர் முதல் வாரம் ‘’கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்’’ என அனுசரிக்கப்படுகிறது. ஜனநாயக அரசைக் கண்காணிக்கும் அமைப்புகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் உருவாக்க பல ஆண்டுகளாக இந்த வாரம் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் உள்ளது. ஜனநாயகத்தில் மக்களே ஒரு கண்காணிக்கும் அமைப்பு தான். இந்த புரிதல் கண்காணிப்பு விழிப்புணர்வின் முதன்மையான படி ஆகும்.
ஒரு ஜனநாயக அரசு என்பது மக்களுக்காக உருவாக்கப்படது ; மக்களால் உருவாக்கப்பட்டது. அதன் அனைத்து செயல்களும் ‘’மக்கள் நலன்’’ என்ற ஒன்றையே இலக்காகக் கொண்டிருக்க முடியும்.
உலகெங்கும் ஆளும் அதிகார வர்க்கம் என்பது எண்ணிக்கையில் மிகவும் சிறிதான சிறுகுழுவே. அதன் கீழ் அதிகாரப் படிநிலையிலிருந்து உச்ச அதிகாரப் படிநிலை வரை உள்ளவர்களின் எண்ணிக்கை எந்த சமூகத்தின் மக்கள் தொகையிலும் ஒரு சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும்.
ஜனநாயகம் அரசில் மக்களே முதன்மையானவர்கள் என்ற எண்ணத்தில் கருத்தில் உருவான ஒன்று. நமது நாடு சுதந்திரம் அடைந்த போது கோடானுகோடி பொதுமக்களுக்கு மேலான வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இருந்தது. உணவு உற்பத்தி , வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆற்ற வேண்டிய கடமைகள் அரசுக்கு மிகுதியாக இருந்தன. ஒரு பெரும் தேசத்துக்கு உணவு அளிக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கு இருந்தது. அதே காலகட்டத்தில் சீனாவில் மா சே துங் தலைமையில் கம்யூனிச அரசு நடந்து கொண்டிருந்த போது அங்கே லட்சக்கணக்கான சீனப் பொதுமக்கள் சீன கம்யூனிச அரசாங்கத்தால் கொல்லப்பட்டுக் கொண்டிருந்ததோடு இணைந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது.
நமது நாட்டுக்கு ஜனநாயகப் பழக்கம் என்பது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உடையது. இந்தியாவின் நிலவியலை அறிந்த எவராலும் இங்கே கிராமம் என்பதே முதல் கிராம அலகு என்றும் இந்தியாவின் வரலாற்றை அறிந்த எவராலும் அந்த கிராமங்களை கிராம மக்களைத் தொகுத்தலுமே இந்திய அரசுகளின் பணியாக இருந்திருக்கிறது என்றும் உறுதியாகக் கூற முடியும். உலக நாடுகளில் இத்தனை ஆண்டுகளாக ஜனநாயகப் பழக்கம் தொடர்ச்சியாக இருந்த நாடு என்று இந்தியாவைக் கூற முடியும்.
சமூகத்துக்குத் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் தன்மை என்பது அதன் நித்ய தேவைகளில் ஒன்று. இந்திய சமூகத்துக்கும் அது தேவை.
இந்தியாவின் அதிகார வர்க்கம் என்பது இன்று உலகின் மிகப் பெரிய அதிகார வர்க்கங்களில் ஒன்று. அரசியல் கட்சிகள் இந்திய அதிகார வர்க்கத்தில் மிகச் சிறு பகுதியே. எல்லா அரசியல் கட்சிகளையும் ஒன்றாகச் சேர்த்துக் கணக்கிட்டால் கூட அதிகார அமைப்பில் அவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவே. இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்தே மாநில, மத்திய அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுகின்றனர். இந்தியாவில் அதிகார வர்க்கம் என்பது இவர்களே. எண்ணிக்கையில் மிகப் பெரிய வர்க்கம் இது.
ஒரு ஜனநாயக அமைப்பு ஆரோக்கியமாக இயங்க பொதுமக்களின் பங்களிப்பு என்பது மிகவும் அவசியம். நமது நாட்டின் அரசியல் சாசனம் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளை வரையறை செய்துள்ளது. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளின் ஒளியில் புரிந்து கொள்ளும் போதே அதிகார அமைப்பு சிறப்பாக இயங்க முடியும்.
அரசு அலுவலகங்களின் இயங்குமுறையை கண்காணிக்கும் மதிப்பிடும் பொறுப்பு பொதுமக்களுக்கு உண்டு. அரசியல் அதிகாரம் என்பது அதிகாரத்தின் முதல் படியிலிந்தே துவங்கி விடுகிறது. அடிப்படையான ஆரம்ப எளிய விஷயங்களிலிருந்தே மக்களின் பங்களிப்பு துவங்கி விடுவது நல்லது. மக்களின் பங்களிப்பு நிகழத் தொடங்கினாலே நிர்வாகம் என்பது சீராக இருக்கும். ஒரு இடத்தில் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது என்றால் அங்கே மக்கள் பங்களிப்பு இல்லாமல் இருக்கிறது என்று பொருள்.
’’கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்’’ என்பது ‘’கடமை விழிப்புணர்வு வாரம்’’ என்றே கொள்ளத்தக்கது.