Monday 21 November 2022

ஆரத்தி

ஒரு இளம்பெண். அக்கால வழக்கப்படி ஒன்பது வயதிலேயே திருமணம் ஆனவள். அப்போது அவளது கணவனுக்கு பதினெட்டு  வயது. ருது ஆகி புகுந்தகம் செல்வதற்காக அப்பெண் காத்திருக்கிறாள். ஓரிரு வருடங்கள் ஆகின்றன. அந்த இடைவெளியில் சில முறை மட்டும் இருவரும் கண்களால் பார்த்துக் கொள்கிறார்கள். மாப்பிள்ளை திருவாரூர் சென்று விட்டு ஊர் திரும்புவதாகக் கூறிச் சென்றவன் வீடு வந்து சேரவில்லை என்று மாப்பிள்ளையின் தாயாரிடமிருந்து கடிதம் வருகிறது. சில நாட்களில் மாப்பிள்ளையிடமிருந்து ஒரு கடிதம். தான் பினாங்கில் இருப்பதாக. ஒரு பெரிய கடையில் வேலை பார்ப்பதாக. சில மாதங்களுக்கு மாதாமாதம் ஒரு நல்ல தொகையை அனுப்பிக் கொண்டிருக்கிறான். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சிங்கப்பூரைக் கைப்பற்றுகிறது. ஆயிரமாயிரம் தமிழர்கள் நாடு திரும்புகிறார்கள். சிங்கப்பூரில் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளை என்ன ஆனான் என யாருக்கும் தெரியவில்லை. இளம்பெண் ருது ஆகிறாள். சுமங்கலியாக வாழ்கிறாள். ஆனால் அவள் இருப்பது பழகுவது அனைத்துமே விதவைகளுடன். அவளுடைய தந்தை அத்தை ஆகியோர் காலமாகிறார்கள். இரண்டு மகாமகக் காலமாக தனது சகோதரன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறாள். ஊரில் மங்கல நிகழ்ச்சிகளில் ஆரத்தி எடுக்கும் கைகளில் அவளது கையும் ஒன்று. அகமும் புறமும் ஒரே இடம் என்னும்படியான நிலை. எப்போதாவது கோடிக்கரை சமுத்திர ஸ்நானம். எப்போதாவது பூம்புகார் கடலாடல். வருடத்துக்கு ஒருமுறை மாயூரம் துலா ஸ்நானம் என நிகழ்கிறது அவள் வாழ்க்கை. சகோதரன் வீட்டில் ஒரு நிகழ்ச்சி. அத்தனை வருடம் ஆரத்தி எடுக்க சொல்லும் நார்த்தனார் இம்முறை வேறு ஒருவரை ஆரத்தி எடுக்கச் சொல்லி விடுகிறாள். தான் சுமங்கலி இல்லை என எல்லாரும் முடிவு செய்து விட்டார்களா என்று வருந்திக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண். ஆலயத்தில் கொற்றவை முன் மகிஷாசுரமர்த்தினி பாடல் பாடிக் கொண்டிருக்கிறார்கள். தேவியை நோக்கி மகிஷனை அழித்தது போல ஒரு கணத்தில் தன்னையும் அழித்து விடு என்று மனதால் சொல்கிறாள். கொஞ்ச நேரத்தில் நார்த்தனார் அவசர அவசரமாக கோயிலுக்கு வருகிறாள். கிளம்பி உடனே கூட வருமாறு அவசரமாகக் கூறுகிறாள். ஏன் அத்தனை அவசரம் என கேட்கிறாள் அந்த பெண். வீட்டுக்குச் சென்று பார்த்தால் பலவருடம் முன்பு விட்டுச் சென்ற கணவன் பரிசுப் பொருட்களுடன் செல்வந்தனாக வந்திருக்கிறான் தன் மனைவியை தன்னுடன் கூட்டிச் செல்ல. இருவரையும் ஊஞ்சலில் அமர வைத்து நார்த்தனார் ஆரத்தி எடுக்கிறாள். ஆரத்தி தீபம் அந்த பெண்ணின் முகத்தில் பிரதிபலிக்கிறது என கதையை நிறைவு செய்கிறார் தி. ஜா.

அவரது ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று ‘’ஆரத்தி’’.