Wednesday 30 November 2022

காவிரி போற்றுதும் - தொடரும் பயணம்

சில ஆண்டுகள் எல்லாருக்கும் எப்போதும் நினைவில் இருக்கும். பிறந்த ஆண்டு. புதிய ஒரு பள்ளியில் சேர்ந்த ஆண்டு. கல்லூரியில் சேர்ந்த ஆண்டு. கல்லூரியில் பட்டம் பெற்ற ஆண்டு. வணிகம் தொடங்கிய ஆண்டு அல்லது பணியில் சேர்ந்த ஆண்டு. இன்னும் பலப்பல. 2020ம் ஆண்டு எல்லாராலும் நினைவு கூரப்படும். அந்த ஆண்டுதான் உலகம் கோவிட்-ஐ எதிர்கொண்டது.  என்னுடைய வாழ்வில் 2020 பலவிதத்திலும் முக்கியத்துவம் கொண்டது. அந்த ஆண்டுதான் ‘’காவிரி போற்றுதும்’’ தனது பயணத்தைத் துவக்கியது. அதன் அமைப்பாளன் என்ற முறையில் நான் மகிழவும் செய்கிறேன். அதே நேரம் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளின் பட்டியல் மிக நீளமாக மிகப் பெரிதாக இருப்பதால் ஒரு நிறைவின்மையையும் உணர்கிறேன். செயலின் பாதையில் நடக்கும் எவருக்கும் மகிழ்ச்சியும் இருக்கும் ; நிறைவின்மையும் இருக்கும். இது இயல்பானதே. 

‘’காவிரி போற்றுதும்’’ கிராமங்களில் மரம் நடுதலை தனது முதன்மையான பணியாகவும் முதல் பணியாகவும் கருதியது. ஒரு மரம் என்பது தன்னளவில் மகத்தானது. ஒரு மரத்தின் இருப்பு என்பது தன்னளவில் பல நற்பண்புகளை மனிதர்களுக்குக் காட்டுகிறது. ஒரு மரம் எத்தனையோ ஜீவராசிகளுக்கு உணவாக உறையுள்ளாகப்  பயன்படுகிறது. விருப்பு வெறுப்பு இன்றி எல்லா ஜீவன்களையும் அது சமமாகப் பார்க்கிறது. இந்திய மரபு இறையை சத்குண பிரம்மம், நிர்க்குண பிரம்மம் என இரண்டாகப் பார்க்கிறது. ஒரு மரம் என்பது சத்குண பிரம்மத்தின் ஒரு வடிவமே. இறை வடிவமான விருட்சங்களுக்கு முதல் வணக்கம். 

‘’காவிரி போற்றுதும்’’  கிராமம் என்ற நுண் அலகில் செயல்படுவது என்று முடிவு செய்தது. கிராமத்தை சமூகத்தின் தேசத்தின் நுண் வடிவமாகக் ‘’காவிரி போற்றுதும்’’ காண்கிறது. இந்தியாவில் ஒரு கிராமத்தில் சாத்தியமாகும் விஷயம் என்பது நாடு முழுதுக்கும் உள்ள எல்லா கிராமங்களுக்கும் பெருமளவு சாத்தியமே. எனவே ஒரு கிராமத்தில் நிகழும் நற்செயல்களை அதே பாணியில் அல்லது சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தி எல்லா கிராமங்களுக்கும் முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ‘’காவிரி போற்றுதும்’’ தனது பயணத்தை வடிவமைத்துக் கொள்கிறது. இந்த நம்பிக்கையை அளிப்பவர்கள் செயல் புரியும் கிராமத்தின் மக்கள். ஒரு அமைப்பாளன் என்னும் முறையில் நான் உணரும் விஷயம் ஒன்று உண்டு. இந்திய கிராமம் ஒன்றின் மக்கள் என்பவர்கள் மகோன்னதமான உலகப் பண்பாடு ஒன்றின் சொந்தக்காரர்கள். அந்த பண்பாட்டின் அடிப்படையான கூறுகள் அவர்களிடம் எஞ்சி இருக்கின்றன. தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற முழு உண்மை அவர்கள் பிரக்ஞையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களே அறியாமல் அவர்கள் ஆழுள்ளம் இன்னும் அந்த பண்பாட்டை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மக்களை அடித்தளமாகக் கொண்டே உலகின் மிகச் சிறந்த பேரரசுகள் இந்திய மண்ணில் உருவாயின. நம் நாடு உலகை வழிநடத்தும் நாள் வரும். அன்றும் இந்த நாட்டின் கிராமங்களே அந்த மாண்புக்குக் காரணமாக அமையும். கிராமங்கள் அனைத்துக்கும் வணக்கம். 

‘’காவிரி போற்றுதும்’’ ஓர் நுண் அமைப்பு. தன்னைத் தானே நிர்மாணித்துக் கொண்டு முன் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் அமைப்பு. ஓர் அமைப்பை நிலை நிறுத்தும் வழி நடத்தும் திறன்கள் என்னிடம் போதுமான அளவு இருக்கிறதா என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு. இருப்பினும் எந்த ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று சொன்னாலும் ஊக்கமூட்டி ஆதரவு அளிக்கும் நண்பர்களே ‘’காவிரி போற்றுதும்’’ன் நாடித்துடிப்புகள். ’’காவிரி போற்றுதும்’’முன்னெடுக்கும் அனைத்து நற்செயல்களுக்கும் ஆதரவளிக்கும் நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும். அவர்களின் ஆலோசனைகளுடன் பங்கேற்புடன்  அமைப்பை மேலும் வலுவாகக் கட்டமைப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது என்று தோன்றுகிறது.  

‘’பெரிதினும் பெரிது கேள்’’ என்கிறான் தமிழ் மூதாதையான பாரதி. ‘’கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’’என்கிறான் வள்ளுவப் பேராசான். நாம் குறைந்தபட்சம் ஒரு கிராமத்திலாவது வாழும் அனைத்து மக்களும் அவர்களால் அடையக்கூடிய அடிப்படையான பொருளியல் சுதந்திரத்தை அவர்கள் அடைய வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளோம். அதற்காகப் பணியாற்றுகிறோம். ஒரு கிராமம் என்பது மரங்கள் நிறைந்த பட்சிகள் நிறைந்த மலர்கள் நிறைந்த நீர்நிலைகள் நிறைந்த ஒரு பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற நிலையை மீண்டும் கொண்டு வர முயற்சிகளை முன்னெடுக்கிறோம். கிராமத்தின் எல்லாக் குழந்தைகளுக்கும் உலகியல் கல்வியும் பண்பாட்டுக் கல்வியும் சமூகத்தின் முழுப் பொறுப்பின் அடிப்படையில் கிடைக்க வேண்டும் என்பது நமது விருப்பம். ஒரு கிராமத்திலாவது அதனை சாத்தியமாக்கிக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றுகிறது ‘’காவிரி போற்றுதும்’’. 

சலனத்தைத் தன் சுபாவமாகக் கொண்டது நதி. நதிகளில் சிறந்தது காவிரி. நாம் அப்புண்ணிய நதியைப் போற்றும் தொண்டர்கள். அன்னை காவிரிக்கு வணக்கம். 

காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும்!