Thursday 1 December 2022

காசி யாத்திரை

காசி இந்தியாவின் இதயம் போன்ற நகரம். குறைந்தபட்சம் நான்காயிரம் ஆண்டு காலம் ஒரு நகரமாகத் திகழ்ந்து வருவது. இவ்வாறான சிறப்பைப் பெற்ற இன்னொரு உலக நகரத்தைக் கண்டடைவது அரிது. இந்திய மரபில் ஒரு சுலோகம் உண்டு. புனிதமான ஏழு நகரங்களை தினமும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலான சுலோகம் அது. ‘’அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா’’ என்ற ஏழு நகரங்கள்.  இதில் மாயா என்பது ஹரித்வாரைக் குறிக்கும். இந்த ஏழு நகரங்களில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்க்கையுடன் தொடர்புடைய்வை மதுரா மற்றும் துவாரகா. காசியும் அயோத்தியும் அதற்கு  முந்தைய காலகட்டத்திலிருந்தே தொன்மையானவை. 

நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினர் காரைக்குடியிலிருந்து காசி வரை பாத யாத்திரையாக நடந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள். மிகச் சமீப காலம் வரை அவர்களுக்கு இந்த வழக்கம் பெரிய அளவில் இருந்திருக்கிறது. இப்போதும் சிறு அளவில் நீடிக்கிறது. இந்த பாதயாத்திரைக்காக அவர்கள் மேற்கொண்ட ஏற்பாடு கவனத்துக்குரியது. முன்னுதாரணமானது. 

அதாவது, காரைக்குடியிலிருந்து காசி 2220 கி. மீ தூரம் கொண்டது. இந்த தூரத்தை நகரத்தார் மக்கள் 50 பேர் கொண்ட குழுவாக அல்லது நூறு பேர் கொண்ட குழுவாக இணைந்து பாதயாத்திரையாக செல்வார்கள். இதற்காக ஒவ்வொரு 40 கிலோ மீட்டருக்கும் இந்த பாத யாத்ரிகர்களின் சேவைக்காக சத்திரங்களை அமைத்தனர். 40 கி.மீ தூரம் என்பது ஒரு பாத யாத்ரிகன் நடக்கக் கூடிய சராசரி தூரம். காரைக்குடியில் காலை ஒரு குழு புறப்பட்டால் அன்று மாலை 6 மணி அளவில் 40 கி.மீ தொலைவில் இருக்கும் புதுக்கோட்டை வந்தடைந்து சத்திரத்தில் தங்கிக் கொள்வார்கள். அங்கே அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்படும். இரவு உறங்கி விட்டு காலை அடுத்த நாள் பயணத்தைத் தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். அன்றைய தினத்துக்கான மதிய உணவு கட்டுச்சோறாக அளிக்கப்பட்டுவிடும். அன்று கிளம்பி திருச்சிராப்பள்ளி செல்வார்கள். அங்கும் இதே முறை. இவ்வாறாக காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை திருச்சி பெரம்பலூர் விருத்தாசலம் விழுப்புரம் திண்டிவனம் காஞ்சிபுரம் சித்தூர் என ஒவ்வொரு 40 கி.மீட்டருக்கும் சத்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். காரைக்குடியிலிருந்து புறப்படும் குழு முன்னரே எந்த தேதியில் எந்த ஊரில் இருப்போம் என தபால் மூலம் தெரிவித்து விடுவார்கள். அதன் படி உணவு ஏற்பாடுகள் நிகழ்ந்திருக்கும். தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் , உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஒவ்வொரு 40லிருந்து 50 கி.மீ க்கு இவ்வாறான சத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

பிற்காலத்தில் இந்த சத்திரங்களை பராமரிப்பவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததால் வெளி மாநிலங்களில் உள்ள நகரங்களில் திருமண மண்டபங்களை ஒரு நாள் தங்குவதற்கு பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர். பின்னர் 2000 கி.மீ தூரம் நடப்பவர்களின் எண்ணிக்கை சிறிது குறையத் தொடங்கியதும் உணவு ஏற்பாடுகளுக்காக ஒரு மோட்டார் வாகனம் ஒவ்வொரு குழுவாலும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. முன்னர் இருந்த சத்திரம் போன்ற அமைப்பு புத்துயிரூட்டப்படும் என்றால் காசிக்கு பாத யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். சராசரியான உடல் வலிமை கொண்ட எவராலும் சற்று முயன்றால் ஒரு நாளில் நாற்பது கிலோ மீட்டர் தூரம் என்பதை நடக்க முடியும். அவ்வாறு ஐம்பது நாட்கள் நீடிக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என்பது அந்த பாதயாத்ரிக்கு வாழ்நாள் அனுப்வமாக இருக்கும். மேலும் தொன்மை மிகுந்த நம் தேசத்தையும் அதன் புண்ணிய நதிகளையும் நேரில் கண்டறிய உதவுவதாக இருக்கும். 

மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்ட போது வட இந்திய யாத்ரிகர்களுக்காக சேது ரஸ்தா என்ற சாலையை அமைத்துக் கொடுத்து அதில் ஒவ்வொரு 40 கி.மீ க்கும் சத்திரங்களை அமைத்திருக்கின்றனர். 

காசி யாத்திரைக்கு புதிதாக சத்திரங்கள் அமைக்கப்பெற்றால் அல்லது பழைய சத்திரங்கள் புத்துயிரூட்டப்பட்டால் தமிழ்நாட்டிலிருந்து அதிகம் பேர் காசிக்கு பாத யாத்திரையாக செல்லக் கூடும். இந்த பயணம் சவாலான பயணம். குறைந்த பட்சம் நூற்று இருபது நாட்களைக் கோருவது. ஒவ்வொரு மாதமும் சில நூறு பேர் அல்லது அதிகபட்சமாக சில ஆயிரம் பேர் செல்லக்கூடும். இப்போது உள்ள தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தி காசி யாத்திரை செல்பவர்கள் மட்டும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு எளிதில் அமைத்துக் கொள்ள முடியும். நர்மதை நதியை வலம் வரும் ‘’நர்மதா பரிக்ரமா’’ என்ற முறை மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. 

காசி யாத்திரை செல்லும் பக்தர்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவு செய்யும் அன்னதானத்துக்கு பொதுமக்கள் பெரிய அளவில் ஆதரவளிப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள சைவ ஆதீனங்கள், மடங்கள், அறக்கொடை அமைப்புகள் ஆகியவை இவ்வாறான ஒரு வழிமுறையை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும்.