Monday 21 November 2022

இன்றைய தினம்

இன்றைய தினம் ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடிப்பதற்கு சற்று முன்னரே விழித்துக் கொண்டேன். ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தேன். நடக்கும் போது மனம் அன்று செய்ய வேண்டிய பணிகளை ஒரு அடுக்கில் தொகுத்துக் கொள்ளும். பின்னர் அதனைச் செயலாக்கினால் போதும்.  தி. ஜானகிராமன் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி. சிறுகதையில் அவர் அரசன். எனக்கு தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் மிகவும் பிடித்தமானது. மானுடத்தின் மீது மனிதர்கள் மீது தீராப் பிரியம் கொண்ட கலை இதயம் கொண்டவர் தி.ஜா. எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட விதி ஒன்று உண்டு. அதாவது, ஒரு சிறுகதையைக் குறித்து பேசும் போது அல்லது எழுதும் போது அந்த கதையை முழுமையாகச் சொல்லிடாமல் மிகச் சிறு அளவில் குறிப்புணர்த்தி எதிர்காலத்தில் வாசிக்கப் போகும் வாசகன் மனத்தில் ஒரு முன் அபிப்ராயம் இல்லாமல் அந்த பிரதியை வாசிக்க உதவ வேண்டும் என ஒரு விதியை எனக்கு நானே உருவாக்கிக் கொண்டேன். அதன் அடியொற்றியே தி. ஜா சிறுகதைகள் குறித்த குறிப்புகளை எழுதி வந்தேன். இடையில் பத்து நாட்கள் இடைவெளி விழுந்து விட்டது. அதனை சரி செய்ய இன்று பகலில் நிறைய சிறுகதைகள் வாசித்து குறிப்பு எழுத வேண்டும் என விரும்பினேன். நடைப்பயிற்சி முடித்து வந்ததும் ஒரு சிறுகதையை வாசித்து குறிப்பை எழுதினேன். 

கிராமத்தில் மேலும் சில வீடுகளுக்கு மளிகைப் பொருட்கள் அளித்து உதவிடுமாறு நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார். ஒரு வருவாய் கிராமம் என்பது அளவில் பெரியது. அதில் குடிசை வீடுகள் பல பகுதிகளில் இருக்கும். மழை, புயல் போன்ற காலங்களில் ஏன் அந்த குடிசைப் பகுதியில் இருப்பவர்களுக்கு உதவிகள் அளிக்க்கப்பட வேண்டும் எனில் குடிசையின் தரை மழை பெய்யும் போது சட்டென ஈரமாகி விடும். காற்றிலும் ஈரப்பதம். வீட்டைச் சுற்றி உள்ள மண்ணிலும் ஈரப்பதம். ஆதலால் சற்று நெருக்கடியில் இருப்பார்கள். தொடர் மழை பெய்யும் போது கிராமங்களில் உள்ள கடைகளுக்கு நகரத்திலிருந்து சரக்கு வருவது ஒப்பீட்டளவில் குறைந்திருக்கும். கையில் பணமிருந்தாலும் அதை பண்டமாக மாற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும். மழைக்காலத்தில் விவசாய வேலைகள் தொண்ணூறு சதவீதம் இருக்காது. எனவே பல நாள் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். இவ்வாறான காலத்தில் பெண்கள் சற்று சிரமத்தில் இருப்பார்கள். நமது பகுதிக்கு அருகில் இருக்கும் பொருள் வசதி குறைந்த மக்கள் சிரமத்தில் இருக்கும் போது அவர்களுக்கு சிறு அளவிலேனும் உதவுவது ஓர் நற்செயலாக இருக்கும். அவர்கள் வீடு தேடிச் சென்று பொருட்களை அளிப்பதன் மூலம் அவர்களின் இக்கட்டில் நாம் அவர்கள் உடனிருக்க விரும்புகிறோம் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்கிறார்கள். அது அவர்களின் சோர்வை நீக்கி இளைப்பாறுதல் தருகிறது. நாம் கொடுக்கும் பொருள் அளவில் சிறிதாக இருக்கலாம் ; ஆனால் அதன் மூலம் அவர்கள் சக மனிதர்கள் மீது அடையும் நம்பிக்கை என்பது மிகப் பெரியது. அந்த பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும் மக்களை இணைக்க பெருமளவில் உதவி புரியும். வினியோகத்தைத் துவங்கும் முன் ஊரில் இருந்த அம்மன் கோவிலில் வழிபட்டோம். முதல் முறையில் விடுபட்டிருந்த குடிசைப் பகுதிகளை இரண்டாம் முறை இன்றைய வினியோகத்தின் போது முழுமை செய்தோம். 

மளிகைப் பொருட்களை வினியோகம் செய்து கொண்டிருந்த போது ஒரு பெண் குழந்தை ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தது. என்ன புத்தகம் என்று வாங்கிப் பார்த்தேன். திருக்குறள். உனக்குப் பிடித்த ஒரு திருக்குறளைக் கூறு என்று கேட்டேன். 

தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றணைத் தூறும் அறிவு. 

என்று சொன்னது. 

தொழில் தொடர்பான சில பணிகள் நிலுவையில் இருந்தன. அவற்றை முற்பகலில் மேற்கொண்டிருந்தேன். ஓரளவு நெருக்கி அவற்றைச் செய்து முடித்தேன். 

நகரில் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருந்த ஒரு புங்கன் மரத்தின் எல்லா கிளைகளும் வெட்டப்பட்டிருந்தன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நகரில் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால் சட்ட விரோதமாக மரம் வெட்டுபவர்கள் அந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த சம்பவத்தை அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மனு தயாரிக்க வேண்டும் . இந்த  ஒரு புது வேலையும் இன்று இணைந்து கொண்டது. நான் மனு அனுப்பும் போது வெட்டப்பட்ட மரத்தின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புவேன். எல்லா கிளைகளும் வெட்டப்பட்ட இலைகள் இல்லாத மரம் என்பது எவர் உள்ளத்தையும் உருக்கும் என்பதால். புகைப்படம் எடுக்க நண்பர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும் ; என்னிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை என்பதால். 

ஒரு சிறுகதைக்கான கரு மனதில் உதித்தது. ஓரிரு நாளில் எழுதக் கூடும்.