Thursday 1 December 2022

ஷாரிணி

இன்று வீட்டுக்கு ஒரு பெண் குழந்தை வந்திருந்தாள். அவளின் பெயர் ஷாரிணி. பாரதி ‘’இன்று புதிதாய்ப் பிறந்தோம்’’ என்று சொன்னதைப் போல புத்தம் புதிதான தன்மையை தனது இயல்பாகக் கொண்டிருந்தாள். கம்பன் இராமனை அன்றலர்ந்த தாமரை முகத்தினன் என்கிறான். ஷாரிணியின் முகம் ஒரு வெண் தாமரையென சுடர் விடும் முகம். சிறு சிறு வாக்கியங்களை மழலை இன்னும் முழுமையாக மாறிவிடாமல் உச்சரிக்கிறாள். அவளது சொற்கள் மெல்லக் கேட்கும் வாத்திய இசை போல் ஒலிக்கின்றன. அவள் வயது இன்னும் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை. ஒற்றை இலக்கத்தின் உச்சபட்ச எண் அவளது வயது.  ராமனை ‘’பூர்வபாஷி’’ என்பார்கள். அதாவது, அவர் புதிதாக எவரையும் சந்தித்தால் அவர்கள் உரையாடலைத் தொடங்கட்டும் என இருக்க மாட்டாராம். முதற்சொல்லை உச்சரித்து  உரையாடலைத் தானே துவங்கி விடுவாராம். ஷாரிணியும் அப்படிப்பட்டவள். ஷாரிணி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். ‘’புவியைக் காப்பவள்’’ என்று சொன்னாள். உண்மையில் அவளது ஒளியும் ஜீவனும் இந்த புவியைக் காக்கும் திறனும் வல்லமையும் கொண்டது. 

அந்த குழந்தையின் பூர்வீகம் மயிலாடுதுறை. அவளது பெற்றோர்கள் சிங்கப்பூரில் பணி புரிவதால் சிங்கப்பூரில் படிக்கிறாள். சிங்கப்பூரில் பள்ளிக் குழந்தைகள் புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்பது அங்குள்ள கல்விக் கொள்கை என்பதால் நூல்களை வாசித்தல் - வாசித்த நூல்கள் குறித்து எழுதுதல் என்பது அங்கே எல்லா குழந்தைகளும் பயின்றிருக்கும் ஒன்று. ஷாரிணிக்கும் அவ்வாறான நூல் வாசிப்பு அங்குள்ள கல்விச் சூழல் காரணமாக அறிமுகமாகியிருக்கிறது. சமீபத்தில் தான் வாசித்த பேய்க்கதை ஒன்றை என்னிடம் கதையாக சொன்னாள். அவளுடைய சித்தரிப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. அவளுடைய மொழித்திறன் வியப்புக்குரியது. சொன்ன கதை எல்லாரையும் திகிலடைய வைக்கும் கதை. 

தனக்கு விளையாட்டில் தான் அதிக ஆர்வம் என்றாள் ஷாரிணி. வாலிபால், பேஸ்கட்பால், பேட்மிட்டன் ஆகியவை தனக்கு மிகவும் ஆர்வம் மிக்க விளையாட்டுகள் என்கிறாள். அவளது உடல்மொழி ஒரு விளையாட்டு வீராங்கனைக்குரியது. ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் செயல் புரியும் கிராமத்தில் உள்ள 8 வயதிலிருந்து 13 வயது வரையான குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்களை வழங்க உத்தேசித்திருக்கும் திட்டம் குறித்து அவளிடம் கூறினேன். அவளுக்கு அந்த திட்டம் மிகவும் பிடித்திருந்தது. அவள் எனக்கு ஒரு ஆலோசனை சொன்னாள். 8 லிருந்து 13 வயது என்பதை 3 லிருந்து 13 வயது வரை என்று ஆக்கி விடுங்கள் என்று சொன்னாள். குழந்தைக்கு விளையாட்டு என்பது பள்ளி செல்லும் முன்பிருந்தே தொடங்கி விட வேண்டும் என்பதால் ஃபுட்பால், பேஸ்கட் பால், வாலிபால் ஆகிய பந்துகள் மூன்று வயதுக் குழந்தைகளுக்கே வழங்கப்பட்டுவிட வேண்டும் என்று சொன்னாள். நான் அவள் பரிந்துரையை உடனே ஏற்றுக் கொண்டு விட்டேன் என்று அவளிடம் சொன்னேன். அந்த கிராமத்துக்கு என்னையும் அழைத்துச் செல்கிறீர்களா என்று கேட்டாள். அவளது ஆர்வம் என்னை சிலிர்க்கச் செய்தது. 

உரையாடிக் கொண்டிருந்த ஒரு மணி நேரத்தில் அவளது உலகம் முழுமையையும் என்னிடம் சொன்னாள். அவளது தோழிகள் குறித்து சொன்னாள். அவளது எதிர்காலக் கனவுகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டாள். பால்ய சினேகிதர்களைப் போல நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். 

ஷாரிணி கிருஷ்ண பக்தை. பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறாள். வாய்ப்பாட்டு வகுப்புகளுக்கு செல்கிறாள். அவளது சாரீரம் இனிமையானது. இங்கே ஊரில் நிறைய விஷ்ணு ஆலயங்கள் உள்ளன ; நான் உன்னை அங்கே அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னேன். உங்களிடம் என்ன பைக் உள்ளது என்று கேட்டாள். ஹீரோ ஹோண்டா என்று சொன்னென். காவிரியிலிருந்து கங்கை வரை நான் மோட்டாட்சைக்கிளில் பயணித்திருக்கிறேன் என்று சொன்னேன். 

குழந்தைகள் தெய்வ ஆசியின் ரூபங்கள். எல்லா குழந்தையும் கிருஷ்ண சொரூபங்கள்.