Friday 23 December 2022

இன்னிசையும் தமிழும்

’’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’’ என திருஞானசம்பந்தர் குறிப்பிடப்படுகிறார். கயிலை ஈசன் இசைக்கு உருகுபவன் என்கிறது நம் மரபு. சம்பந்தர் தமிழ் கேட்க இறைவன் கொண்ட ஆவலை தேவாரப் பதிகங்கள் எடுத்துரைக்கின்றன.  

திருப்பதியில் ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். அங்கே உள்ள பட்டர்கள் அதிகாலையில் பெருமாள் சன்னிதியில் திருப்பாவை பாடுவார்கள். அவர்களில் பலர் நிலவியலின் காரணமாக தெலுங்கினைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தமிழ் படித்து அறியாதவர்கள். ஆனால் பாடலாக திருப்பாவையைப் பயின்று 31 பாடல்களையும் பாடும் திறன் கொண்டிருப்பார்கள். ஆந்திரத்தின் கணிசமான விஷ்ணு ஆலயங்களில் இத்தகைய தன்மை இருப்பதைக் காண முடியும். 

மகாராஷ்ட்ராவில் பண்டரிபுரத்தில் விட்டலநாதன் ஆலயம் உள்ளது. விட்டலநாதன் மீது ஞானேஸ்வர், துகாராம் ஆகியோர் பாடிய இசைப்பாடல்கள் ‘’அபங்’’ எனப்படும். மராத்தியில் ‘’பங்’’ என்றால் ‘’குறை’’ என்று பொருள். ‘’அபங்’’ என்றால் ‘’எந்த குறையும் இல்லாதது’’ ‘’எந்த மாசும் இல்லாதது’’ என்று பொருள். மராத்தியில் உள்ள இந்த பாடல்கள் பக்தர்களால் பாடப்பட்டு வந்தன. பின்னர் அவை ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டன. மேலும் சமீப சில வருடங்களில் கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் இடம் பெற்றன. இதனைப் பாடுபவர்கள் அனைவரும் மராத்தி அறிந்தவர்கள் அல்ல; ‘’அபங்’’ஐ இசையாகப் பயின்றவர்கள். 

சமீபத்தில் காசி யாத்திரை , காசி பாத யாத்திரை - ஒரு பயண மார்க்கம் என்ற இரு கட்டுரையை எழுதினேன். அதனை ஒட்டி ஒரு எண்ணம் எழுந்தது. தமிழ்நாட்டுக்கு வெளியே 5000 கி.மீ தூரம் பயணப் பாதை அமைகிறது. ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் உள்ளன. பாத யாத்ரிகர்களின் சேவைக்காக 125 சத்திரங்கள் இந்த பாதையில் உருவாக்கப்பட்டால் பாத யாத்ரிகர்களின் சேவையுடன் இந்த சத்திரங்கள் வேறு சில பண்பாட்டுப் பணிகளையும் ஆற்ற முடியும். 

அதாவது இந்த 125 சத்திரங்களில் , சத்திரம் உள்ள ஊர்களில் உள்ள மக்களுக்கு தேவாரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றைப் பாட பயிற்றுவிக்கும் விதத்தில் இசை வகுப்புகள் தொடங்கலாம். மேலும் நாதஸ்வரம், தவில் ஆகிய கர்நாடக இசைக் கருவிகளை இசைக்க பயிற்சி தரலாம். அடிப்படைத் தமிழ் கற்றுத் தரும் தமிழ் வகுப்புகளும் நடத்தலாம்.  தெலுங்கு, கன்னடம், ம்ராத்தி , ஹிந்தி ஆகிய மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் தமிழையும் இன்னிசையையும் ஞானசம்பந்தரையும் கொண்டு சேர்க்கும் விதமாக இருக்கும். மராத்தியின் ‘’அபங்’’ இந்தியாவெங்கும் சென்று சேர்ந்தது போல தேவாரத்தையும் திவ்யப் பிரபந்தத்தையும் இந்தியா முழுதுக்கும் கொண்டு சேர்க்க முடியும். 

ஒவ்வொரு சத்திரத்திலும் ஒரு தேவார ஆசிரியர் இருப்பார் ; இசை ஆசிரியர் இருப்பார்; தமிழ் ஆசிரியர் ஒருவர் இருப்பார். தேவார ஆசிரியரே கூட தமிழ் ஆசிரியராகவும் இருக்க முடியும். மேலும் பாத யாத்ரிகர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் பணியாளர்கள் இருப்பார்கள். இவ்வாறான ஒரு ஏற்பாடு சற்று முயன்றால் அமைக்கக் கூடிய ஒன்றே.