ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் மந்த்ராலயத்தில் ஒரு நடைமுறை உண்டு. அந்த நடைமுறையை நான் நேரடியாகக் கண்டு பயன்படுத்தியிருக்கிறேன். அதாவது, அங்கே யாத்ரிகளுக்கான யாத்ரி நிவாஸ் உண்டு. மந்த்ராலய நிர்வாகமே அதனை நடத்துகிறார்கள். அந்த யாத்ரி நிவாஸ் என்பது ஒரு பெரிய கூடம். அதன் ஒரு பகுதியில் கதவுடன் கூடிய சிறு கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். அவை பூட்டிக் கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கும்.
யாத்ரி நிவாஸுக்கு செல்லும் யாத்ரிகர்கள் அங்கே தங்கிக் கொள்ள கட்டணம் ஏதும் கிடையாது. நிவாஸுக்கு சென்றதும் அவர்களுக்கு ஒரு பூட்டும் சாவியும் வழங்கப்படும். தரமான கோத்ரெஜ் பூட்டை வழங்குவார்கள். அந்த பூட்டுக்கும் சாவிக்கும் ரூ.300 வசூல் செய்யப்படும். யாத்ரிகர்கள் தங்கள் பயணப்பைகளை அந்த கூண்டுகளில் வைத்து பூட்டிக் கொள்ளலாம். இரவு 9 மணிக்கு அவர்களுக்கு ஒரு பாயும் தலையணையும் ஒரு போர்வையும் வழங்கப்படும். அவர்கள் அதைப் பயன்படுத்தி உறங்கலாம். காலை 5 மணிக்கு அவற்றைத் திருப்பி வழங்கி விட வேண்டும். மிகத் தூய்மையாக பராமரிக்கப்படும் குளியலறைகள் கூடத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டு மூன்று நாட்கள் இதே விதத்தில் தங்கி விட்டு அவர்கள் புறப்படும் போது பூட்டையும் சாவியையும் திரும்ப ஒப்படைக்கும் போது ரூ.300 அவர்களுக்கு திரும்பத் தரப்படும். அதாவது அவர்கள் யாத்ரி நிவாஸில் தங்கியதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. பூட்டைத் தொலைத்து விடக் கூடாது என்பதற்காகவே ஒரு முன்பணம். பூட்டைத் திரும்ப தந்ததும் அந்த பணமும் திருப்பித் தந்து விடுவார்கள். ஆயிரக்கணக்கானோர் இந்த முறையைப் பயன்படுத்தி அங்கே தங்கியிருப்பார்கள். மந்த்ராலய ஆலயத்திலேயே தினமும் இருவேளை அன்ன தானம் வழங்குவார்கள். மதியம் 12 மணிக்கு இரவு 7 மணிக்கு . மக்கள் அனைவரும் ஆலய அன்னதானம் உண்டு யாத்ரி நிவாஸில் தங்கியிருப்பார்கள். எல்லாம் துல்லியமாக பிசிரின்றி நடக்கும். மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கே இருப்பார்கள். எல்லாருமே ஸ்வாமியை சேவிக்க வந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் ஒரு இணக்கமும் பிரியமும் இருப்பதைக் கண்டேன். நான் தங்கியிருந்த போது வேலூரிலிருந்து நண்பர்கள் சிலர் ரயிலில் அங்கே வந்திருந்தனர். இளைஞர்கள். மாதம் ஒருமுறை இதே போன்று ஸ்தலங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். ஒரே கூடத்தில் இரண்டு நாட்கள் இருந்ததால் அந்த இரண்டு நாட்களும் அவர்களுடன் நல்ல பரிச்சயமாகி அவ்வப்போது உரையாடிக் கொண்டிருந்தேன். மந்த்ராலயம், பண்டரிபுரம், மதுரா ஆகிய தலங்களுக்கு அடிக்கடி செல்வோம் என்று கூறினார்கள். அவர்கள் ஒரு டிராவல்ஸ் வைத்திருப்பதாகக் கூறினார்கள். ஆறு கார் அவர்களிடம் உள்ளது என்று சொன்னார்கள். எனினும் தலயாத்திரையை ரயிலில் மேற்கொள்வோம் அது சிக்கனமானது என்பதால் என்று கூறினார்கள். அவர்களுக்கு ராகவேந்திர சுவாமி மீது பக்தி அதிகம். எனவே அடிக்கடி மந்த்ராலயமும் வேலூர் பல வட இந்திய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களின் பாதையில் இருப்பதால் பண்டரிபுரமும் மதுராவும் ஊரிலிருந்து கிளம்புவது எளிது என்றும் தெரிவித்தார்கள். வட இந்தியா வந்து பரிச்சயம் இருப்பதால் வேலூரிலிருந்து பலரை காரில் ஷேத்ராடனமாக காசி வரை வழியில் உள்ள தலங்களை சேவிக்க வைத்து டிராவல்ஸ் மூலமாக அழைத்துச் செல்வதும் உண்டு என்று சொன்னார்கள்.
என்னுடைய இந்தியா என்பது இத்தகைய சாதாரண மக்களிடம் நான் உணர்ந்த நம்பிக்கையும் ஆர்வமும் தான். இந்த மண் பெரும் மகத்துவங்களை தனது மிக எளிய மனிதர்களுக்கும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
அந்த நண்பர்களிடம் நீங்கள் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிறந்த ஊரான புவனகிரிக்கும் அவர் கல்வி பயின்ற கும்பகோணத்துக்கும் வந்திருக்கிறீர்களா என்று கேட்டேன். டிராவல்ஸ் சவாரி மூலம் அடிக்கடி கும்பகோணம் வருவோம் என்று சொன்னார்கள். எனது ஊர் கும்பகோணத்துக்கும் பக்கம் ; புவனகிரிக்கும் பக்கம் என்பதை அறிந்து அவர்களுக்கு மகிழ்ச்சி.
சமீபத்தில் எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. எனக்கு ஒரு விஷயம் குறித்து சிந்திப்பது பிடிக்கும். புதிதாக சிந்திப்பது என்பது உற்சாகமளிக்கும் ஒரு செயல். தமிழ்நாட்டில் பொதுவாக புதிதாக சிந்தித்துப் பார்ப்பதற்கு புதிதாக செயல்படுத்திப் பார்ப்பதற்கான ஆர்வம் குறைவாக இருக்கும். அதற்கான காரணங்கள் பல. அவற்றைக் குறித்தும் சிந்தித்திருக்கிறேன். இருப்பதை மாற்றாமல் இருப்பது என்னும் வழக்கத்தை இங்கே உள்ள மக்கள் தங்கள் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் என்ன செய்வது என்று யோசிப்பார்கள். குறுகிய வட்டத்துக்குள் ஒன்றைச் செய்வது கடினம் என்பதால் சாத்தியமின்மையை ஒரு காரணமாகக் கூறி அப்படியே விட்டு விடுவார்கள்.
கட்டுமானத் துறையில் இருப்பதால் தமிழ்நாட்டில் நிகழும் தலயாத்திரை குறித்து ஒரு விஷயத்தை அவதானித்தேன். அதாவது , இங்கே திருத்தலங்களில் உள்ள தங்குமிடங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2500 வரை கட்டணம் இருக்கிறது. இந்த தொகை ஒப்பு நோக்க அதிகம் . ஒரு குடும்பம் இரண்டு நாட்கள் ஒரு தலத்தில் தங்குகிறது என்றால் இரண்டு அறைகள் அவர்கள் வாடகைக்கு எடுத்தால் ரூ. 4000 வரை செலவு செய்ய நேரிடும். நடுத்தர குடும்பத்தினருக்கு இந்த தொகை அவர்கள் மாத வரவு செலவில் கணிசமானது. தொலைவில் உள்ள திருத்தலத்துக்கு அவர்கள் வந்து சேர வாகனச் செலவும் இருக்கிறது. ரயிலோ அல்லது மோட்டார் வாகனமோ பயன்படுத்தினால் அதற்கு ரூ. 4000 ஆகிறது என்றால் ஒரு குடும்பத்துக்கு ஒரு திருத்தல யாத்திரை செய்ய ரூ.8000 ஆகி விடும். அதனால் தான் பல குடும்பங்கள் வருடத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மட்டுமே யாத்திரை செய்ய நேரிடுகிறது.
வைத்தீஸ்வரன் கோவிலை மையமாக வைத்து எனக்கு ஒரு யோசனை தோன்றியது. வைத்தீஸ்வரன் கோவில் பல தமிழ்க் குடும்பங்களுக்கு குலதெய்வம். சென்னை தொடங்கி மதுரை வரை பல தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் முடி வைத்தீஸ்வரன் கோவிலில் தான் எடுப்பார்கள். குடும்பத்தில் எவரும் நோய்வாய்ப்பட்டால் வைத்தீஸ்வரன் கோவில் வந்து வைத்தீஸ்வரனான சிவனையும் தையல்நாயகி அன்னையையும் வணங்கி நோய் நீக்க வேண்டிக் கொள்வார்கள். தமிழ்நாட்டின் மிக முக்கியமான முருகன் கோயில்களில் ஒன்று வைத்தீஸ்வரன் கோவில். குமரகுருபரர் ‘’முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்’’ பாடியது இங்கே கோயில் கொண்டுள்ள முருகனை நோக்கித்தான். நாட்டுக்கோட்டை நகராத்தார் குடும்பங்களில் பலருக்கு முத்துக்குமாரசுவாமியே குல தெய்வம். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் காரைக்குடியிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வருவார்கள்.
வைத்தீஸ்வரன் கோவில் வரும் யாத்ரிகர்களுக்காக ஒரு விஷயம் செய்ய முடியுமா என்று ஒரு யோசனை தோன்றியது. அதாவது, ஒரு தங்கும் விடுதி கட்ட வேண்டும் என்றால் அதற்கு செலவு அதிகம் ஆகும். அதாவது, 10,000 சதுர அடி கொண்ட ஒரு விடுதியைக் கட்ட ஒன்றரை கோடி ரூபாய் செலவாகும். அது கொஞ்சம் பெரிய பட்ஜெட். அவ்வளவு செலவைக் கோராத ஒரு யோசனை எனக்கு தோன்றியது.
ஐந்து ஏக்கர் நிலம் . கோவிலுக்குச் சொந்தமானது. (வைத்தியநாத சுவாமி தேவஸ்தானம் தமிழ்நாடு அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை ; அது தனியான தேவஸ்தானம்) வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலம் ஆயிரக்கணக்கில் உள்ளது. அவற்றில் ஐந்து ஏக்கர். கிட்டத்தட்ட 2,20,000 சதுர அடி நிலம். இந்த நிலத்தில் அழகியல் உணர்வுடன் வடிவமைக்கப்பட்ட 1000 குடில்களை அமைக்க முடியும். ஒவ்வொன்றும் 150 சதுர அடி அளவு கொண்டவை. தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்டவை. அந்த குடிலின் உள்ளே மின்சார விசிறி, மின் விளக்குகள் ஆகியவற்றை அமைத்துக் கொள்ளலாம். எளிய வசதிகள். அந்த வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய குளியல் வசதிகளை ஏற்படுத்தித் தரலாம். ஒவ்வொரு குடிலுக்கும் ஒருநாள் வாடகையாக ரூ.100 அல்லது ரூ.200 நிர்ணயிக்கலாம். இந்த யாத்ரிகர்கள் ஆலய சேவைகளில் பங்கெடுத்துக் கொள்ள அவர்களுக்குத் தேவையான திரவியங்களை அங்கிருக்கும் அங்காடி மூலம் நியாயமான விலைக்கு வழங்கலாம்.
ஒரு நாளில் ஐயாயிரம் யாத்ரிகர்கள் திருப்தியுடன் ஆலய வழிபாடு செய்யவும் ஒரே ஆண்டில் மீண்டும் மீண்டும் ஆலயத்துக்கு வந்து அந்த ஆலயத்துடனான உணர்வுபூர்வமான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் உதவும்.
இந்த யோசனை எனக்கு சென்ற வாரம் தோன்றியது. மந்த்ராலயம் யாத்ரி நிவாஸ் குறித்த மனச்சித்திரமே இந்த யோசனைக்கு அடிப்படை. இந்த யோசனை தோன்றிய ஓரிரு நாளில் ஆகாசவாணி வானொலியில் ஒரு செய்தியைக் கேட்டேன். அதாவது காசி நகரில் ‘’டெண்ட் சிட்டி’’ என கூடாரங்களால் ஆன ஒரு தங்குமிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கான்கிரீட் கட்டுமானம் இல்லாமல் முழுக்க முழுக்க கூடாரத்துணியால் அமைக்கப்பட்ட கூடாரங்களால் ஆன தங்குமிடங்கள்.
தமிழ்நாட்டில் ஷேத்ராடனங்கள் மேலும் அதிக அளவில் நிகழ அதன் மூலம் நிகழும் சுற்றுலா மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க சகாயமான விலை கொண்ட எளிய தங்குமிடங்கள் மிக முக்கியமான அவசியத் தேவைகள்.
நாடெங்கும் இருந்து யாத்ரிகர்கள் வருகை புரியும் ராமேஸ்வரத்தில் கூட இவ்வாறான ஒரு ‘’கூடார நகரத்தை’’ அமைக்கலாம்.