’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு நுண் அமைப்புக்குரிய வலிமைகளையும் எல்லைகளையும் தன்னகத்தே கொண்டது. வலிமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதும் எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அதன் விருப்பங்கள்.
நுண் அமைப்பாயினும் அதன் முன் பணிகள் பல வந்து சேர்ந்து கொண்டேயிருக்கின்றன. பல பணிகள் வந்து சேர்கின்றன என்பதற்கு மகிழ்ந்தாலும் அத்தனையையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் நமக்கு இருக்கத்தான் செய்கிறது.
இந்த ஆண்டு ‘’காவிரி போற்றுதும்’’ குறைந்தபட்சமாக சில பணிகளை முழுமையாக நிறைவேற்ற விரும்புகிறது. அவற்றைப் பட்டியலிட்டுக் கொள்வதும் அது குறித்த எண்ணங்களை நண்பர்கள் முன்வைப்பதும் அவற்றைக் குறித்து புறவயமாக சிந்திக்க உதவும் என எண்ணுகிறேன்.
1. இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம்
சுவாமி விவேகானந்தர் கூறுவார் ; ‘’இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கே நாம் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்’’ .
செயல் புரியும் கிராமத்தில் உள்ள 3 வயதிலிருந்து 13 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பும் விளையாட்டு உபகரணங்களை வழங்க ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு முன்னெடுப்பை மேற்கொள்கிறது. விளையாடும் போது குழந்தைகள் மகிழ்கிறார்கள். எல்லா குழந்தைகளையும் கிருஷ்ண சொரூபம் என்கிறது இந்திய மரபு. குழந்தைகள் அடையும் மகிழ்ச்சி என்பது தெய்வங்கள் அடையும் மகிழ்ச்சியே.
ஏப்ரல் மாதம் முழு ஆண்டுத் தேர்வு நிறைவுற்று கோடை விடுமுறை குழந்தைகளுக்குத் தொடங்கும். அந்த காலகட்டம் விளையாட்டு உபகரணங்களை வழங்க ஏதுவாக இருக்கும் என எண்ணுகிறேன். ரிங் பால், வாலிபால், ஃபுட்பால், ஷெட்டில் காக், கிரிக்கெட் பேட் & பால் ஆகியவையே விளையாட்டு உபகரணங்கள். அனைத்தும் மைதானத்தில் ஆடும் விளையாட்டுகள். குழந்தைகளின் உடல் வலிமை பெற உதவுபவை என்பதால் இவை சரியான தேர்வாக இருக்கும் என எண்ணுகிறேன்.
2. ஏழைக்கு எழுத்தறிவித்தல்
காவிரி வடிநிலப் பகுதிகளில் சிக்கல்களில் ஒன்றாக நான் எண்ணுவது அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வேறு வாய்ப்புகள் நோக்கி செல்ல அவர்களுக்கு பலவிதமான தடைகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது மொழித்தடை. அவர்களுக்கு ஹிந்தி குறைந்தபட்ச பரிச்சயம் கூட இல்லாமல் இருப்பதால் அவர்கள் வெளிநாடு செல்லலாம் என எண்ணினால் கூட மும்பையைக் கடப்பது என்பது பெரும் தயக்கமாக மாறி விடுகிறது.
நான் கூறும் விஷயம் நடைமுறை சார்ந்தது. நேரடியாக மக்களிடம் கேட்டு அறிந்தது. ஒரு கிராமத்தில் மக்கள்தொகை 5000 இருக்கிறது எனில் அதில் 30 பேர் வெளிநாடு சென்றிருப்பார்கள். ஆனால் வெளிநாடு செல்ல சாத்தியம் உள்ள எண்ணிக்கை 100 என இருக்கும். தயக்கத்தின் காரணமாக அந்த 70 பேர் செல்லாமல் இருப்பார்கள். அந்த 70 பேரும் ஏழைக்குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
‘’காவிரி போற்றுதும்’’ அந்த 70 குடும்பத்தினரை முதன்மையாக நினைக்கிறது. அவர்களுக்கு ஹிந்தி மொழி தெரியும் என்பது ஒரு தன்னம்பிக்கையை அளிக்கும் என்றால் அதற்கான பணியை தன் பணியாக நினைக்கிறது ‘’காவிரி போற்றுதும்’’
செயல் புரியும் கிராமத்தில் உள்ள ஆர்வமுள்ள எல்லா குழந்தைகளுக்கும் ஹிந்தியை ‘’வித்யா தானம்’’ ஆக வழங்க ‘’காவிரி போற்றுதும்’’ முடிவு செய்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கும் போது கிராமத்தில் ஹிந்தி வகுப்புகளையும் துவங்க முயற்சிகள் நடக்கின்றன.
3. விளையும் பயிர்
சிறிய அளவில் ‘’காவிரி போற்றுதும்’’ கிராம மக்களுக்கு வழங்கும் விருட்சங்களை உருவாக்குவதற்கு ஒரு நர்சரியை உருவாக்க எண்ணம் உள்ளது.
4. விண்மீன் விருட்சங்கள்
எனது நண்பர் ஒருவர் ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பத்தினருக்கும் அவர்கள் பிறவி விண்மீனுக்கு உரிய விருட்சங்களை வழங்க விருப்பம் தெரிவித்தார். பிறவி விண்மீன்கள் அஸ்வினி தொடங்கி ரோகிணி ஈறாக 27. ஒரு கிராமத்தில் 27 விதமான விருட்சங்கள் இருப்பது கிராமத்தின் பல்லுயிர் பெருக்கத்துக்கும் நலத்துக்கும் உகந்தது.
கணக்கெடுப்பு எடுத்து விட்டேன். நண்பர் மிகவும் ஆர்வத்துடன் இது எப்போது நிறைவேறும் என எண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த கிராமத்தின் மக்களும் விருட்சங்களை ஆவலுடன் எதிர் நோக்கி அலைபேசியில் அழைத்து விபரம் கேட்கிறார்கள்.
கூடிய விரைவில் நண்பரின் விருப்பமும் மக்களின் விருப்பமும் நிறைவேறும்.
5. ஒவ்வொரு விவசாயிக்கும் 20 தேக்கு மரங்கள்
ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 20 தேக்கு மரக் கன்றுகள் வழங்குவது என்பது ‘’காவிரி போற்றுதும்’’ முதன்மைப் பணி. வழங்குவதுடன் நம் பணி நிறைவு பெற்று விடாது என ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணுகிறது. செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் தேக்கு மரங்களால் முழுமையான பொருளாதாரப் பயன் கிட்டும் போது மட்டுமே நாம் எண்ணியது நிறைவு பெறும். அதை நோக்கி நாம் சென்று கொண்டேயிருப்போம்.
இலக்கிய வாசகர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. அதாவது, ஒரு கட்டத்தில் அவர்கள் வாங்கி ஆனால் வாசிக்காமல் இருக்கும் நூல்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது முன்னர் வாங்கிய நூல்களை வாசித்து விட்டு அதன் பின்னர் புதிய நூல்கள் வாங்கலாம் என சில காலம் எண்ணுவார்கள். அதன் பின்னர் நூல் வாசிப்பதைப் போன்று புதிய நூல்கள் வாங்குவதும் ஒரு மகிழ்ச்சியான செயல். ஒரு வாசகன் புதிதாக நூல் ஒன்றை வாங்கும் மகிழ்ச்சியை இழக்கக்கூடாது என்ற முடிவுக்கு வருவார்கள்.
மேலே குறிப்பிட்ட ஐந்து பணிகளும் அடிப்படைப் பணிகள். புதிதாக ஏதும் செய்ய நேர்ந்தாலும் அவற்றுக்கும் திறந்த மனத்துடன் இருக்க ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது.
நாம் வளர விரும்புகிறோம். சாத்தியமான எல்லா வழிகளிலும்.