Monday, 30 January 2023

தீபங்கள் ஒளிரும் ஆலயம்

இந்திய மரபில் , தீபங்கள் ஏற்றப்படுவது ஓர் அடிப்படையான நற்செயலாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கருதப்படுகிறது. மானுட குலத்தின் வாழ்வின் பெரும் நீளத்தில் தன் வாழிடத்தை தீயினை சிறு தீபமாக ஏற்றி ஒளி கொண்டது மிக முக்கியமான முன்னெடுப்பு ; மானுடப் பிரக்ஞையில் மிக முக்கியமான தாவல். உலகின் எல்லா சமூகங்களுக்குமே தீபம் ஏற்றும் வழக்கம் இருந்திருக்கிறது.  

தீபம் ஏற்றுவது அல்லது தீபங்கள் ஏற்றுவது ஓர் குறியீட்டுச் செயல்பாடு. உடல் மன ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது. இந்தியாவில் தீபம் ஏற்ற நல்லெண்ணெய், இலுப்பையெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள். தீபம் ஏற்ற பயன்படும் இந்த நான்கு பொருட்களும் விவசாய விளைபொருட்கள். ஆலயங்களில் தீபங்கள் அதிகம் ஏற்றப்பட்டால் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயிகளுக்குப் பயன் தரும். 

தமிழ்நாட்டின் சிற்றாலயங்களும் பேராலயங்களும் குறிப்பிட்ட ஆகம விதிப்படி அமைக்கப்பட்டவை. இறையுரு வீற்றிருக்கும் இடத்தை  கர்ப்பகிருகம் என்கிறது ஆலய ஆகமம். கர்ப்பகிருகம் நுண்மையானது. நுட்பமானது. அங்கே அதிக அளவில் தீபங்கள் ஒளிர வேண்டும் என வகுத்துள்ளது ஆகம மரபு. மேலும் முழு ஆலயமும் கூட தீபங்களால் ஒளிர வேண்டும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வழிபாட்டை தீபம் ஏற்றி செய்ய வேண்டும் என்பது ஒரு மரபு. தமிழ்நாட்டின் பல பெரு ஆலயங்களில் தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னர்கள் தங்கள் சொந்த நன்கொடையில் தீபக்கட்டளைகளை நிறுவி உள்ளனர். பல கல்வெட்டுகளின் வாசகங்கள் ஆலயத்தில் தீபம் ஏற்றப்படுவதை அவர்கள் எத்தனை உணர்ச்சிகரமாக எண்ணியுள்ளனர் என்பதைத் தெரிவிக்கிறது. 

செயல் புரியும் ஆலயத்தில் ஒரு விஷ்ணு ஆலயம் உள்ளது. அது ஒரு சிற்றாலயம். வயோதிகரான எனது நண்பர் ஒருவர் அந்த ஆலயத்தைப் பராமரிக்கிறார். ஒவ்வொரு மாதமும் ஏகாதசிக்கு சிறப்பு வழிபாடுகளை ஆலயத்தில் முன்னெடுப்பார். அவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளேன். 

கிராமத்தின் சிற்றாலயத்தை 48 நாட்கள் முழுமையாக தீப ஒளியில் மட்டும் ஒளிர வைப்பது. ஆலயத்தின் கருவறையில் முழுமையாக தீபங்கள் மட்டுமே ஏற்றப்பட்டிருக்கும். ஆலயம் முழுமையும் தீபங்கள் ஒளிரும். மின்விளக்குகள் இன்றி முழுமையாக தீபங்கள் மட்டுமே இருக்கும் வகையில் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன். 

இவ்விதமான முன்னெடுப்புகள் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் நேரடியாகவே பயன் அளிப்பது. ஆலயத்தின் செயல்பாடுகளில் பொதுமக்கள் பெருமளவில் இணைந்து கொள்ள உதவி புரிவது. நுண் அழகியல் தன்மை கொண்டது.