Tuesday 31 January 2023

நிலம் பிசாசு கடவுள்


சீர்காழி பிடாரி வடக்கு வீதியிலும், உ.வே.சா பணியாற்றிய கும்பகோணம் அரசுக் கல்லூரி மைதானத்திலும் என இரண்டு முறை முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. ராஜிவ்காந்தியை நான் பார்த்திருக்கிறேன். முதல் முறை பார்த்த போது எனக்கு ஏழு வயது. அவர் அப்போது நாட்டின் பிரதமர். சீர்காழியே திரண்டு வந்திருந்தது போல ஒரு பெரும் கூட்டம். நான் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் பணி நிமித்தம் பாபநாசத்துக்கு மாற்றல் ஆனது. பாபநாசத்தில் இருந்த போது அந்த தொகுதியின் சட்டசபை வேட்பாளரான ஜி.கே. மூப்பனார் அவர்களை தமிழக முதல்வராக்க தமிழக மக்களிடம் வாக்கு கேட்டு அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி கும்பகோணத்துக்கு வந்திருந்தார். சீர்காழிக்கு அவர் வந்தது ஜீப்பில். கும்பகோணத்துக்கு அவர் வந்தது ஹெலிகாப்டரில். இரண்டு முறை அவரைப் பார்த்ததும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. மூன்றாவது முறை அவரைப் பார்க்க ஒரு வாய்ப்பு அமைந்தது. மயிலாடுதுறை ராஜன் தோட்ட விளையாட்டு மைதானத்தில் ஒரு தேர்தல் பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. 1991ம் வருடம் மே மாதம் 21ம் தேதி. அன்று மதியம் கூட்டம் ஒரு நாள் தள்ளிப் போகக் கூடும் என்ற உறுதிசெய்யப்படாத தகவல் வந்தது. அடுத்த நாள் காலை ஆகாசவாணியும் தூர்தர்ஷனும் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட ராஜிவ் குறித்த செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

சீர்காழியில் பார்த்த போதும் குடந்தையில் பார்த்த போதும் ராஜிவ்வின் மேல் இருந்த ஈடுபாடு பின்னர் ‘’தேசிய முன்னணி’’யின் மீது திரும்பியது. அந்த பெயரில் உள்ள தேசியம் எனக்கு உவப்பானதாக இருந்தது. ராஜிவ் வி.பி.சிங்கை கடுமையாக விமர்சித்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இத்தனை நாள் உடன் இருந்தவர் ; ஒன்றாகப் பணி புரிந்தவர் ; சிறந்தவர் எனப் பாராட்டப் பட்டவர். எப்படி சட்டென ‘’துரோகி’’ ஆவார் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிய்வில்லை. ‘’தேசிய முன்னணி’’ மீது ஆர்வம் உண்டான அதே காலகட்டத்தில் தான் சென்னையில் சூளைமேட்டில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் தலைவர் பத்மநாபா சுட்டுக் கொல்லப்பட்டார். பத்மநாபா கொல்லப்பட்டதை எனது மனம் ஏற்கவில்லை. தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்மநாபாவைக் கொன்றவர்கள் ஜனநாயக விரோதிகள் எனக் கூறியது கவனத்துக்கு வந்தது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜிவ்வின் உடல் துயர் அளித்த வண்ணம் இருந்தது. அன்றைய தினம் ஊரெங்கும் சைக்கிள் எடுத்துக் கொண்டு திரிந்தேன். பார்த்த முகங்களிலெல்லாம் வருத்தம். துயரம். ராஜிவ் கொல்லப்பட்டார் என்பதினும் அவர் கொல்லப்பட்டவிதம் சாமானிய மக்களை பெரும் வருத்தம் கொள்ளச் செய்திருந்தது என்பதை உணர முடிந்தது. வீட்டில் உள்ளோரின் வாக்குகள் பாபநாசத்தில் இருந்தன. தேர்தல் தினத்தன்று ஊரிலிருந்து திருச்சி பயணிகள் ரயிலேறி பாபநாசம் சென்று வாக்களித்தார்கள். நானும் உடன் சென்றிருந்தேன். வாக்குச் சாவடியெங்கும் ஆண்களும் பெண்களும் ராஜிவ் மீதான அனுதாபத்துடன் இருந்ததை உணர முடிந்தது. வாக்குச்சாவடியில் அத்தனை பேர் குழுமியிருந்தும் மிகையான ஒரு சத்தமும் ஒரு ஒலியும் இல்லை. குண்டூசி விழுந்தால் கேட்கக்கூடிய அளவுக்கு அமைதி. அது 1991ம் ஆண்டு. வாக்குச்சாவடிக்கு மக்கள் சைக்கிளிலோ அல்லது நடந்தோ வந்து அமைதியாக ராஜிவ்காந்திக்கு தங்கள் அனுதாபத்தை வாக்காகச் செலுத்தி விட்டு சென்றார்கள்.

ராஜிவ் கொலை செய்யப்பட்டதை கொலை செய்யப்பட்ட விதத்தை தமிழக மக்கள் மன்னிக்கவேயில்லை.

சாமானியத் தமிழர்கள் இலங்கை விவகாரங்களில் இந்தியா இனி தலையிட வேண்டாம் என எண்ணத் துவங்கினர். அவ்வாறு எண்ணிய தமிழ் மக்கள் மௌனப் பெரும்பான்மை.

ஒரு தசாப்தம் கடந்து சென்றது. இரண்டாயிரத்தை ஒட்டிய ஆண்டுகளில் இலங்கையில் அமைதிக்கான சில முயற்சிகள் நடப்பது இலங்கையில் உள்ள சாமானிய தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையைக் கொண்டு வந்தது. நார்வே சமரசத்தை முன்னெடுப்பதும் சமரசத் தூதர் எரிக் சோல்ஹைம் தீர்வுகளை உருவாக்குவதில் திறன் படைத்தவர் என்பதும் இலங்கையில் சாமானிய மக்கள் அமைதியாக வாழ ஒரு காலம் உருவாகும் என எண்ண வைத்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் புலிகளின் அரசியல் ஆலோசகரும் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகங்களை கூட்டாகச் சந்தித்த போது ‘’தேவைப்படின் தனி நாடு கோரிக்கையை கைவிடுவோம்’’ என்று சொன்னது இலங்கை விஷயத்தில் ஒரு தீர்வு உருவாகி விடும் என்று எண்ண வைத்தது. கல்லூரி மாணவனாயிருந்த போது அந்த நேர்காணலை தொலைக்காட்சியின் முன் காத்திருந்து பார்த்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.

ராஜிவ் படுகொலையின் கொடும் நினைவுகளிலிருந்து தமிழக மக்கள் மெல்ல நீங்கியிருந்தனர். அதே நேரம் விடுதலைப் புலிகளைத் தீவிரமாக ஆதரித்து பரப்புரையாற்றிக் கொண்டிருந்த தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டாலும் ராஜிவ் ஒற்றை உயிர் தானே என்று என சொல்லிக் கொண்டேயிருந்தனர். உண்மைதான். ராஜிவ் ஒற்றை உயிர் தான். ஆனால் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் குடிகள் கோடிக்கணக்கானோர் அவர் மேல் அபிமானம் வைத்திருந்தார்கள். அது அளவைகளுக்குள் அடங்காதது ; ஆனால் உணரப்படக் கூடியது.  

எந்த அமைப்பும் எந்த அரசியல் முன்னெடுப்பும் எந்த அரசியல் நடவடிக்கையும் தன்னை காலத்தின் கைகளில் – எதிர்காலத்தின் கைகளில் ஒப்படைத்தவாறே நிகழ்கிறது. இன்ன செயல்திட்டம் இன்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மிகப் பெரும்பான்மையாக கணிக்க முடியுமே அன்றி முழுமையாக நிர்ணயித்துவிட முடியாது.

சர்வாதிகாரம் பேரழிவை மட்டுமே உண்டாக்குகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் சர்வாதிகார அமைப்புகள் அவற்றுக்கே உரிய வசீகரத்துடன் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன என்பது வரலாற்றின் நகைமுரண்.

சமீபத்தில் அகரமுதல்வன் எழுதிய ‘’கடவுள் பிசாசு நிலம்’’ வாசித்தேன். இரண்டாயிரமாவது ஆண்டை ஒட்டிய அமைதி முயற்சிகள் முதற்கொண்டு இலங்கை இறுதி யுத்தம் வரையிலான காலகட்டத்தின் நிகழ்வுகளை புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையே எழுதியிருந்தார். புஸ்பராஜா எழுதிய ‘’ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’’ செழியன் எழுதிய ‘’ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’’ தமிழினி எழுதிய ‘’கூர்வாளின் நிழலில்’’ ஆகிய இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட படைப்புகளை வாசித்திருக்கிறேன். அவற்றின் தொடர்ச்சியாக ‘’கடவுள் பிசாசு நிலம்’’ வாசித்தேன்.

வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்த எளிய மனிதர்களையும் அவர்கள் கனவுகளையும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் புனைவும் அல்லாத அபுனைவும் அல்லாத புனைவுக்கும் அபுனைவுக்கும் மத்தியில் இருக்கும் ஒரு வடிவத்தில் எழுத்தாக்கியிருக்கிறார் அகரமுதல்வன். ஒரு எழுத்தாளனாக 2000 ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரையான காலகட்டத்தை பிரதானமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தின் வன்னியின் கதையை சொல்ல முனைந்திருப்பது முக்கியமான ஒரு புனைவு உத்தி. அகரமுதல்வன் சொற்களால் உயிர் பெற்று எழுந்து வந்து மீண்டும் அவர் படைப்புக்குள் மரித்துப் போன அத்தனை பேருக்காகவும் மனம் வருத்தம் கொள்கிறது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமாதானத்துடன் அல்லது குறைந்தபட்ச சமாதானத்துடன் , இணக்கத்துடன் அல்லது குறைந்தபட்ச இணக்கத்துடன் உலகெங்கும் வாழும் காலம் ஒன்று வரும். நமது எண்ணங்கள் விருப்பங்கள் செயல்கள் அதை நோக்கி நகரட்டும்.