ஒரு புங்கன் மரம். மாநில நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது. மாநில நெடுஞ்சாலைத் துறையால் வண்ணமிடப்பட்டிருந்தது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கணக்கிலும் வருவாய்த்துறையின் கணக்கிலும் உள்ள மரம். ஆறு மாதங்களுக்கு முன்னால் அந்த சாலையின் வழியே சென்ற போது அந்த மரம் முழுமையாக வெட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். CPGRAMS இணையதளம் மூலம் வெட்டப்பட்ட மரத்தின் புகைப்படத்துடன் புகாரை அளித்தேன். புகார் இவ்வளவு தான் : ’’இன்ன கிராமத்தில் இன்ன மாநில நெடுஞ்சாலையில் உள்ள இன்ன இடத்தில் அமைந்திருக்கும் மரம் வெட்டப்பட்டுள்ளது. மரத்தை வெட்டியவர்கள் முறையான அரசு உத்தரவு பெற்று மரத்தினை வெட்டினார்களா என்பதை உறுதி செய்யவும். அரசு உத்தரவு இல்லாமல் நிகழ்ந்திருந்தால் மரத்தை வெட்டிய்வர்களிடம் அபராதம் வசூலிக்கவும்’’. என்னுடைய புகார் இவ்வளவு தான்.
இது தார்மீகம் தொடர்பான விஷயம் என்றாலும் அதனை நிர்வாகம் சட்டபூர்வமான எல்லைக்குள் ஒரு குறைந்தபட்ச தீர்வு காணட்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு. உண்மையில் அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி இவ்வாறான ஒரு மரம் வெட்டப்பட்டிருப்பதை தனது ஆவணங்களில் பதிவு செய்து வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. என்னுடைய புகார் பதிவு செய்யப்பட்ட பின்னாவது நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். அதுவும் இல்லை.
புகார் அளித்து ஆறு மாதங்கள் கழித்து பதிலைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது அந்த மரத்தை வெட்டியவர் மரத்தின் கிளைகள் மின் கம்பிக்கு இடையூறாக இருந்ததால் மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார் என வருவாய்த்துறையினர் பதில் அளித்துள்ளனர். மின்கம்பிகளுக்கு இடையூறாக இருந்தால் மரத்தின் கிளைகளை கழிக்க வேண்டியது மின்சார வாரியத்தின் பொறுப்பு. மாதம் ஒரு நாள் அவர்கள் பராமரிப்பு பணி மேற்கொள்கிறார்கள். அப்போது செய்யலாம். அவர்களுக்குமே கிளைகளை சிறு அளவில் கழிக்க மட்டுமே அனுமதி உண்டு. வருவாய்த்துறையினருக்கு இந்த நிகழ்வில் உள்ள சட்ட விரோதமும் சட்ட மீறலும் முழுமையாகத் தெரிந்திருந்தும் இவ்வாறான ஒரு பதிலை அளித்துள்ளார்கள்.
நிர்வாகம் என்ன நினைக்கிறது என்றால் புகார் அளித்தவர் ஒரு உணர்ச்சிகரமான சூழலில் உணர்ச்சிகரமான மனநிலையில் புகார் அளித்திருப்பார். அதிகபட்சமாக நாட்களை நகர்த்திக் கொண்டு சென்றால் புகார் அளித்தவர் மனதில் இருந்து அந்த விஷயம் நீங்கி விடும் அதன் பின் அது தொடராமல் நின்று விடும் என்று நினைக்கிறார்கள். இவ்வாறு நினைத்து இவ்வாறு செயல்படுபவர்கள் இதைப் போன்ற விஷயங்களை மேலும் சிக்கலாக்கி விடுகிறார்கள் என்பதே நிஜம்.
ஒரு விஷயம் மிக மோசமாக நடந்திருக்கிறது என்றால் மட்டுமே அதனை நான் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். அதில் உரிய நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றதை அணுகியே ஆக வேண்டும். விஷயம் நீதிமன்றத்துக்கு சென்றால் அதிகாரிகளுக்குத்தான் சிக்கல். பொதுமக்களிடம் பதில் சொல்வது போல அங்கே பதில் சொல்ல முடியாது. எனினும் இந்த இடத்துக்கு விஷயத்தை நகர்த்திச் செல்வது அதிகாரிகளே.
வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற எனது நண்பர்கள் எவ்வாறு சட்ட விரோதமான மரம் வெட்டுதலை வருவாய்த்துறை இவ்வளவு அலட்சியமாகக் கையாள்கிறது என வியக்கிறார்கள். தாங்கள் பணி புரிந்த காலகட்டத்தில் தங்கள் கிராம எல்லைக்குள் ஒரு மரம் அனுமதி பெறாமல் வெட்டப்படும் சம்பவம் நிகழ்ந்தால் கூட அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி வேறு ஊருக்கு பணிமாறுதல் கொடுத்து அனுப்பி விடுவார்கள் . விசாரணையே அந்த குறைந்தபட்ச உத்தரவுக்குப் பின் தான் தொடங்கும். மரத்தை வெட்டியவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தங்கள் அனுபவத்தை நினைவு கூர்கிறார்கள்.
நாளை மாவட்ட ஆட்சியருக்கு நடந்த சம்பவத்தையும் எனது புகாரையும் ஆறு மாதம் கழித்து அந்த புகாருக்கு அளிக்கப்பட்ட பதிலையும் விளக்கி ஒரு விசாரணை மேற்கொள்ளுமாறு கோர உள்ளேன். அதற்கு என்ன பதில் அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்த விஷயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உள்ளேன்.
காலதாமதத்தால் நான் சோர்வடையவில்லை ; மேலும் அடுத்தடுத்த செயல்களைத் தீவிரப்படுத்தவே செய்கிறேன். அதுதான் நியாயம் என்று நினைக்கிறேன்.