Sunday, 5 February 2023

நிறைதல்

என்னுடைய எழுது மேஜை மற்றும் என்னுடைய கோப்பு அலமாரிகள் காகிதங்களால் நிரம்பிக் கிடந்தன. எழுது மேஜையையும் கோப்பு அலமாரியையும் நான் ஒருவன் மட்டுமே பயன்படுத்துவேன் என்பதால் அவை என்னுடைய ஏகபோகத்தில் இருக்கின்றன. இருப்பினும் அவற்றை அடுக்கி வைக்க வேண்டும் என நினைப்பேன். என்னுடைய சிக்கல்களில் ஒன்று அவ்வாறு அடுக்க முற்படும் போது காணும் காகிதங்களும் கோப்புகளும் என்னை அவை குறித்த சிந்தனைக்கு இட்டுச் சென்று விடும். மனம் பல திசைகளில் சஞ்சரிக்கத் தொடங்கி விடும். நிகழ்காலத்தில் கொண்டு வந்து சேர்ப்பது கடினம். அதற்கு அஞ்சியே அடுக்கத் தொடங்காமல் இருந்து விடுவேன்.  

சமீபத்தில் கோப்பு அலமாரியை அடுக்கும் ஜப்பானிய முறை ஒன்றைக் கேள்விப்பட்டேன். அந்த முறை எப்படி எனில் நாம் அடுக்கப் போகும் இடத்தை வஜ்ராசனத்தில் அமர்ந்து கண்களை மூடி சில நிமிடங்கள் வணங்க வேண்டும். பின்னர் நமது மேஜை அமைந்திருக்கும் இடத்தின் தரையை சில கணங்கள் நம் கைகளால் தொட வேண்டும். அந்த இடத்துடன் உணர்வுபூர்வமான ஒரு தொடர்பை உருவாக்கிக் கொள்ள அவ்வாறு செய்ய வேண்டும். பின்னர் அந்த இடத்தை அடுக்கி வைக்க அந்த இடத்திடம் அனுமதி கேட்க வேண்டும். பின்னர் பணி துவங்க வேண்டும். 

எழுது மேஜையை மூன்றாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள், காகிதங்கள் மற்றும் இதர பொருட்கள். 

புத்தகங்களை புத்தக அலமாரியில் மட்டுமே வைக்க வேண்டும். எழுதுமேஜையில் வைக்கக் கூடாது. எனவே எழுதுமேஜையில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் கொண்டு போய் புத்தக அலமாரியில் வைக்க வேண்டும். பின்னர் காகிதங்களைத் தொகுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதர பொருட்களில் பேனா, பென்சில், ஸ்டேப்ளர் ஆகியவற்றை கைகளுக்கு அருகில் இருப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு எந்த பொருட்களால் மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அவற்றை மட்டுமே மேஜை மேல் வைக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் படி செயல்பட வேண்டும். 

அடுக்கி முடித்ததும் அந்த இடத்துக்கு வஜ்ராசனத்தில் அமர்ந்து நன்றி தெரிவிக்க வேண்டும். 

இந்த முறையைப் பின்பற்றிய போது இந்திய மரபில் உள்ள சாங்கிய தரிசனம் நினைவுக்கு வந்தது. சத்வ, ரஜோ, தமோ என்னும் முக்குணங்களால் ஆனது இந்த உலகம். அவை மூன்றும் சமநிலையில் இருந்த போது உலகம் எந்த அசைவும் இல்லாமல் இருந்தது. அந்த மூன்று குணங்களில் சிறு மிகச் சிறு சமன்குலைவு உண்டான போதே உலகம் தோன்றியது. அவ்வா|று தோன்றிய உலகின் எல்லா இருப்புகளிலும் சத்வ ரஜோ தமோ குணங்கள் வெளிப்படலாயின. 

ஒரு அடுக்கை உருவாக்க இடத்திடம் அனுமதி கேட்கும் முறை சாங்கிய தரிசனத்தை நினைவூட்டியது. 

இன்று மாலை பணியைத் துவங்கினேன். இரவு 9 மணி ஆகி விட்டது பணி நிறைவு பெற. 80 % பணிகள் நிகழ்ந்துள்ளன. மீதி காலையில் நிறைவடையும். 

தேவையற்ற அனைத்தும் நீங்கியது மனத்தை நிறையச் செய்தது.