இன்று காலை செயல் புரியும் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். தேக்கு பயிரிட்ட விவசாயியின் தோட்டத்துக்குச் சென்றேன். அவர் அங்கு இருந்தார். ஒரு இளைஞன் தேக்கு மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. விஜயதசமி அன்று நடப்பட்ட கன்றுகள் அவை. நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளன. கோடை இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. கோடையின் கட்டியம் மாசி மாத பகல்களில் உணர முடிகிறது. தேக்கு மரக்கன்றுகள் நீருக்கு ஏங்குமே என்னும் ஞாபகம் தான் எப்போதும் எனக்கு. ஆனால் ஒவ்வொரு தடவையும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கூறுவது என்பது நமது குழந்தைக்கு தினமும் உணவு தர வேண்டும் எனக் கூறுவதற்கு சமானமானது. வேறு வழியில்லை. திரும்பத் திரும்ப கூறித்தான் ஆக வேண்டும். அடிப்படையான ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பக் கூறும் போது என் மனதில் எனது தகவல் தொடர்பு முறையில் ஏதேனும் சிக்கல் இருக்கக் கூடுமோ என்ற ஐயம் எழும். அந்த ஐயம் உண்மையல்ல. விவசாயிகள் நெல்லுக்கு தண்ணீர் விடுவதைத் தவிர வேறு எதுவுமே விவசாயம் என்று நினைப்பதில்லை. அந்த நினைப்புடன் தான் நாம் சமர் புரிகிறோம்.
விவசாயியின் திடலுக்கு வடக்கே காவிரியின் கிளை ஆறு ஒன்று ஓடுகிறது. திடலின் மறுகரையில் விவசாயம் புரியும் விவசாயி ஒருவர் தேக்கு நடப்பட்ட திடலுக்கு வந்து இங்கே உள்ள விவசாயியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவரை முன்பே சில முறை சந்தித்திருக்கிறேன். முன்னரே தனது வயலில் நட தேக்கு மரக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டிருந்தார். இன்றும் நினைவு படுத்தினார். ஐந்து ஆறு விவசாயிகளுக்குத் தேவையான மரக்கன்றுகள் நூறு நூற்று ஐம்பது கன்றுகள் தேவைப்படும். எனது காரில் எடுத்து வரலாம். இவர் 20 கன்றுகள் தான் கேட்டார். மற்றவர்களுக்குக் கொண்டு வரும் போது சேர்ந்து எடுத்து வரலாம் என ஒத்திப் போட்டிருந்தேன். தேக்கு நடவு செய்துள்ள விவசாயியின் பக்கத்து திடலில் ஒரு பகுதியை சமீபத்தில் கிரயம் செய்திருக்கிறார். அந்த விபரத்தை என்னிடம் சொன்னார். அவருக்கு இன்றைய தினமே 20 கன்றுகளை வழங்குவது என முடிவு செய்தேன். அவரது அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன். அவருடைய வீடு செயல் புரியும் கிராமத்திலிருந்து இரண்டு கிராமங்களுக்கு முன்னதாகவே உள்ளது. எனவே அவருடைய வீட்டுக்கு வந்து மரக்கன்றுகளைத் தருவதாகக் கூறினேன்.
காலை 11 மணிக்கு புறப்பட்டு 15 கி.மீ தள்ளியிருக்கும் நர்சரிக்குச் சென்று 20 தேக்கு மரக்கன்றுகளை வாங்கி எடுத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. வீட்டில் என்னை அமர வைத்து பக்கத்தில் இருந்த கடையில் பவண்டோ வாங்கி வந்து என்னிடம் கொடுத்தார். எனக்கு மூன்று வாரங்களாக நல்ல இருமல். குடிக்க தண்ணீர் மட்டும் கொடுங்கள் என்று கேட்டேன். கொடுத்தார். பவண்டோ குளிர்ச்சியாக இருப்பதால் அதனை அருந்துவது உகந்தது அல்ல என்று சொன்னேன். பவண்டோவை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள் ; மாலை அதன் குளிர்ச்சி நீங்கியதும் அருந்துங்கள் என்று சொன்னார். பிரியமாக உபசரிக்கிறார் என்பதால் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டேன்.
மரக்கன்றுகளுக்கு என்ன விலை கொடுக்க வேண்டும் என்று கேட்டார். ‘’ஐயா ! இவற்றை நல்ல முறையில் நீங்கள் வளர்த்தாலே போதும். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி. இந்த மரக்கன்றுகளை வளர்க்க நீங்கள் அளிக்கப் போகும் உழைப்பும் கவனமும் தான் விலை மதிப்பில்லாதது. மிகப் பெரியது. அதனுடன் ஒப்பிட்டால் கன்றுகளின் விலை என்பது ஒன்றுமே இல்லை. உங்களுக்கு வழங்க எனக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு தருகிறீர்கள். என்னாலும் உங்களுடன் மரக்கன்றுகளுடனும் உணர்வுபூர்வமாக ஒரு பிணைப்பை உண்டாக்கிக் கொள்ள முடிகிறது. எனக்கு விவசாயம் தொழில் இல்லை. நீங்கள் விவசாயி. தேக்கின் முக்கியத்துவம் குறித்து இன்னும் கிராமத்தின் நிறைய விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களுடன் இணைந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள்.’’ என்று கூறினேன்.
எளிய மக்களின் அன்பும் பிரியமும் உணரும் தோறும் நெகிழச் செய்கிறது.