Tuesday, 28 February 2023

ஊர்கோலம்

எனது நண்பர் ஒருவர் பொறியாளர். வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். தீவிர இலக்கியம் வாசிப்பவரல்ல. வெகுஜன இலக்கியம் வாசிப்பார். தினமும் ஏதேனும் வாசிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். அ-புனைவுகள் அதிகம் வாசிப்பார். சிறு வயதில் ஒரு பிரிண்டிங் பிரஸ் தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததாகவும் தான் தினமும் அங்கே சென்று பிரிண்டிங் பிரஸ்ஸில் அச்சிட வந்திருக்கும் துண்டுப் பிரசுரங்களை அந்த அச்சு மை மணத்தின் மீதுள்ள ஆர்வத்தால் வாசிக்கத் தொடங்கி புத்தக வாசிப்புக்குள் வந்ததாக ஒருமுறை கூறியிருந்தார். தமிழ்ச்சூழலில் பலர் இவ்வாறான தற்செயல்கள் வழியாகவே வாசிப்புக்குள் வருகின்றனர். புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்தும் புத்தக வாசிப்பை முக்கியமானதாகக் கருதும் குடும்பங்கள் தமிழ்ச்சூழலில் அனேகமாக இல்லை. தமிழ்ச்சூழல் லௌகிகத்தையே பெரிதாக நினைக்கிறது. தமிழ்ச்சூழல் லௌகிகத்தையே வழிபடுகிறது.

நான் மோட்டார்சைக்கிளை விரும்புபவன் என்பதால் என்னால் வண்டியின் பின்னாலும் லகுவாக அமர்ந்து கொள்ள முடியும். வண்டியை ஓட்டுபவருக்கும் வண்டியில் அமர்ந்திருப்பவருக்கும் ஒரு பொதுப்புரிதல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இரு சக்கர வாகனப் பயணம் இருவர் மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியாக இருக்கும். இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவர் முரண்பட வாய்ப்பு மிக மிகக் குறைவு. மனித மனம் பற்றி இறுதிச் சொல் எதனையும் கூறி விட முடியுமா என்ன?

சாலை ஓரத்தில் ஒரு புரசமரம் பூத்திருந்தது. புரசின் பூக்கள் தீக்கொழுந்துகள் போல் தோன்றும். புரசு ஒரு எரிமலர். நண்பரிடம் ‘’புரச மரம் மிகவும் முக்கியமான மரம் தெரியுமா ?’’ என்றேன். நண்பர் நான் சொல்வதை ஆழமாகக் கவனித்தார். ‘’புரசு இல்லாமல் இந்தியாவில் எந்த சடங்கும் கிடையாது. இந்தியர்களின் எல்லா விதமான சடங்குகளுக்கும் புரசு தேவை. மிகவும் பவித்ரமான மரம்’’ என்று சொன்னேன். நண்பர் என்னிடம் புரசைவாக்கம் என்ற பெயர் புரச மரத்திலிருந்து வந்ததா என்று கேட்டார். ‘’புரசைவாக்கத்தில் ஆயிரம் ஆண்டு தொன்மையான சிவாலயம் உள்ளது. அதன் தல விருட்சம் புரசு ‘’ என்று சொன்னேன். 

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. ஆடு மாடு மேயாத மரங்களின் விதைகளை சேகரிக்க முயற்சி செய்கிறேன் என்று சொன்னேன். பனையை ஆடு மாடு மேயாது என்று சொன்னார். அவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டேன். சற்று முயன்றால் பனை விதைகளை சேகரிக்க முடியும். 

சிதம்பரத்தில் ஒரு இல்லக் கட்டுமானப் பணியை மேற்கொள்கிறார். அதனைக் காண சென்றோம். ஆயிரம் சதுர அடி கொண்ட வீடு . சிறப்பான தரமான கட்டுமானத்தை மேற்கொண்டிருந்தார். அவரை நான் பாராட்டினேன். வீட்டு வாசலில் ஒரு சிறு திண்ணை அமைத்திருந்தார். அதனையும் பாராட்டினேன். எங்கள் பயணத்தில் இடையிடையே மழை பெய்து கொண்டிருந்தது. பிப்ரவரி இறுதியில் மழை பெய்வதெல்லாம் மிகவும் அபூர்வம். 

தமிழ்நாட்டின் வீடுகள் வீட்டு உறுப்பினர்களை மட்டுமே கவனத்தில் கொண்டு அமைக்கப்படுபவை. வீட்டுக்கு நண்பர்களும் உறவினர்களும் வரக் கூடும் என்பதையோ ஒரு வாரம் வரை தங்கக் கூடும் என்பதையோ கவனத்தில் கொள்ளாமல் கட்டப்படுகின்றன. அவ்வாறு கட்டப்படுவதால் அது போதும் என நினைப்பதால் வீட்டுக்கு உறவினர்கள் வந்து தங்குவது பெரிய அளவில் குறைந்து விட்டது. வீட்டு மாடியில் உள்ள இடத்தை வீடு கட்டி வாடகைக்கு விட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் உள்ளதே தவிர விருந்தினர்களுக்கு ஏற்பாடுகள் சிலவற்றை செய்வோம் என்ற எண்ணம் இங்கு இல்லை. ‘’யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ‘’ என்று கூறியவனின் மண் என்பதை நினைக்கும் போது மெல்லிய துயரம் ஏற்படும். 

திரும்பி வரும் போது மிக நேர்த்தியாக வண்டி ஓட்டினார். பைக்கில் ஒரு நாள் இராமேஸ்வரம் சென்று வருவோம் என்று சொன்னேன். இரண்டு நாள் பயணமாக செல்ல திட்டமிட்டோம். காலை 6 மணிக்கு ஊரிலிருந்து புறப்பட்டால் மதியம் ஒரு மணிக்கு ராமேஸ்வரம் சென்று விடலாம். அன்று ராமநாத சுவாமி ஆலயம், தனுஷ்கோடி சென்று வணங்கினால் மறுநாள் காலை 6 மணிக்கு இராமேஸ்வரத்தில் புறப்பட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து விடலாம் என்று திட்டமிட்டோம்.