ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுது பேர் தன்னை நீக்கி பிணமென்று பெயரிட்டு காட்டில் சுட்டு நீரில் மூழ்கி நினைப்பொழியும் மயானமும் மயானத்தின் சூழலும் இந்தியர்களின் அகத்துக்கு மிகவும் பக்கத்தில் உள்ள ஒன்று. எதன் பொருட்டும் உண்மையைக் கைவிட மாட்டேன் என்ற உறுதியுடன் மயானத்தின் பிணங்களை எரித்துக் கொண்டிருந்த ராஜா ஹரிச்சந்திரன் கதை இன்றும் தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் இரவுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. யக்ஷப் பிரசன்னத்தில் யக்ஷன் இந்த உலகின் பெருவியப்பு என்ன எனக் கேட்கும் வினாவுக்கு விடையாக யுதிர்ஷ்ட்ரன் மயானத்துக்குச் செல்லும் பிணங்களை தினமும் பார்க்கும் மனிதர்கள் மனித வாழ்க்கையை சாஸ்வதமாகக் கருதுவது உலகின் பெருவியப்பு என பதில் சொல்கிறான்.
‘’அன்னம்’’ சிறுகதை ஒரு மயானத்தின் பின்புலத்தில் விரிகிறது. இலுப்பையும் எருக்கும் மண்டிக் கிடக்கும் மயானம் சீரான புல்வெளிகள் கொண்ட கொன்றைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் குரோட்டன் செடிகள் வளர்க்கப்படும் இடமாக காலகதியில் பரிணாமம் பெற்றிருக்கிறது. சுமங்கலியான ஒரு மூதாட்டி மரணித்த பின் எரியூட்டப்பட மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறாள். தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் பிணம் அங்கே வந்து சேர தாமதமாகி விடுகிறது. உறவினர்கள் அசௌகர்யமான மனநிலையுடன் எரியூட்டல் எப்போது நிகழும் என காத்திருக்கிறார்கள்.
மயானத்தின் தோற்றம் வேறுவிதமாக இருப்பதைக் காணும் கதைசொல்லி அந்த வளாகத்தினுள் நுழைகிறான். அங்கே ஒரு எம்டன் வாத்து இருக்கிறது. அந்த வாத்து தனது இணையை சில மாதங்களுக்கு முன் இழந்திருக்கிறது. தனக்கு நெருக்கமான ஒரு உயிரின் சாவினை சமீபத்தில் எதிர்கொண்டிருக்கிறது.
அந்த வாத்தினை அந்த வளாகத்தின் பணியாளரான ஒரு பெண்மணி வளர்த்து வருகிறார். தான் உண்ணும் உணவை பகுத்தளித்து அந்த வாத்தை வளர்க்கிறாள். பிணங்களின் வாயில் போடப்படும் வாய்க்கரிசியையும் வாத்து உணவாக உண்கிறது.
சற்று தாமதமாக மயானத்துக்கு வரும் நடுவயது இளைஞன் மரணித்த மூதாட்டியின் முன் அமர்ந்து கேட்பவர் முதுகெலும்பு சில்லிடும் வகையில் ஒப்பாரி வைக்கிறான். ஒப்பாரியில் அவன் கூறும் சொற்களிலிருந்து அந்த மூதாட்டி அந்த இளைஞன் சிறுவனாயிருந்த போது அவன் குடும்பத்தாரின் ஆதரவு இல்லாமல் தனித்து விடப்பட்ட போது அன்னமிட்டு வளர்த்தவர் என்பதை அறிய முடிகிறது. அனைவரும் திகைத்துப் போய் நிற்கையில் அந்த வாத்து ஒப்பாரி வைப்பவன் அருகில் வந்து தன் குரலை எழுப்புகிறது. அவனை அழாதே என அந்த வாத்து சொல்வதாக அதன் மொழி புரிந்த வாத்து வளர்க்கும் பெண் சொல்கிறாள்.
இந்த சிறுகதையின் வடிவம் மிக நேர்த்தியாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆங்காங்கே விரவி இருக்கும் உணர்வுப் புள்ளிகளை வாசகன் தனது கற்பனையால் நிரப்பிக் கொள்வானாயின் - விரிவாக்கிக் கொள்வானாயின் அவன் இந்த சிறுகதையின் வடிவ ஒருமையை உணர்வான்.
மயானம் என்பது மீதமின்றி பிடி சாம்பல் ஆகும் இடம். இந்திய மரபில் பிடி சாம்பல் என்பது இறுதி அல்ல. இன்னும் சில இருக்கின்றன. சடங்குப் படி அந்த பிடி சாம்பலான அஸ்தி நீரில் கரைக்கப்பட வேண்டும். எரியூட்டல் என்பது ஜீவனின் அன்னமயகோசத்தை சாம்பலாக்கும் நிகழ்வு. ஜீவனின் அன்னமயகோசம் முற்றிலும் சாம்பலாகிப் போனாலும் அது செய்த புண்ணியம் அப்போதும் அதனைப் பற்றி நிற்கும்.
மயானப் பணியாளரின் அன்னை அன்னத்தையும் பிரியத்தையும் நம்பிக்கையையும் அளித்தவர். பணியாளப் பெண்மணியும் வாத்தை தன் அன்னையின் வடிவமாகக் கண்டு அதற்கு அன்னமிட்டவர். மறைந்த மூதாட்டியும் ஒரு ஆதரவற்ற சிறுவனுக்கு அன்னமிட்டு வளர்த்தவர். இந்த மூவருக்கும் பொதுவாக இருப்பது அன்னம். இந்த மூவரும் அருகருகே வரும் இடமாக அன்னமய உடலை எரித்து சாம்பலாக்கும் சுடுகாடு அமைந்திருப்பது புனைவு ரீதியில் சிறப்பானது.
வாழ்த்துக்கள் சீனு !
புனைவுலகில் நீங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பது நண்பனாக எனது விருப்பம்.