நள சரிதம்
கலியபெருமாள் எனது நண்பர். எனது பட்டறைக்கு தனது இரு சக்கர
வாகனத்தைக் கொண்டு வரும் போது பழக்கமானவர். அவர் நல்ல மனிதர் அதனால் நல்ல நண்பரும்
கூட. முதல் நாள் தனது டி.வி.எஸ் 50 வாகனத்தை பழுது பார்க்க பட்டறைக்குக் கொண்டு வந்தார்.
அதே நேரத்தில் ஒரு என்ஃபீல்டு வாகனம் வந்தது. அதில் உள்ள பழுது என்ன என்பதை உற்றுநோக்கிக்
கொண்டிருந்தோம். என்ஜின் சத்தத்தை அவதானித்து தனது அபிப்ராயங்களைத் தெரிவித்தார். அவர்
சுட்டிய திசையில் என்ஃபீல்டு வாகனத்துக்குள் அகழ்ந்து சென்று கொண்டிருந்தோம். அவர்
உத்தேசித்த சிக்கலே இருந்தது. அவர் விரும்பிய வண்ணமே தீர்வும் எட்டப்பட்டது. முதல்
சந்திப்பிலேயே எங்களுக்குள் பரஸ்பர மரியாதையும் புரிதலும் ஏற்பட்டது.
‘’தம்பி ! எனக்கு 18 வயசு இருக்கும் போது எங்க குடும்பத்துல
மூணு வேலி நிலம் இருந்துச்சு தம்பி. அப்பா என்ஃபீல்டு வச்சுருந்தாரு. என் கூட பொறந்தவங்க
3 அக்காங்க. மூணு பேருக்கு கல்யாணம் பண்ணது போக நாலு ஏக்கர் நிலம் மட்டும் இப்ப கையில
இருக்கு. எல்லாரையும் நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்து எல்லாரும் நல்லாயிருக்காங்க.
அப்பா தவறிட்டாரு. வைத்தீஸ்வரன் கோவில்ல ஒரு மாவு அறைக்கிற மில் லீஸுக்கு எடுத்து நடத்துனன்
தம்பி. அதுல கொஞ்சம் நஷ்டம். அப்பா என்ஃபீல்டை விக்க வேண்டியதாயிடுச்சு. அடுத்து என்ஃபீல்டுதான்
வாங்கணும்னு ரொம்ப நாள் வண்டியே வாங்காம இருந்தன். ரொம்ப நாள்னா நாலு அஞ்சு வருஷம்.
அப்புறம் ஒரு டிவிஎஸ் 50 வாங்கிட்டன். என் சம்சாரம் சொல்லுவாங்க. ’’கடந்த காலம் ஞாபகம்.
நம்மோட விருப்பங்களை எதிர்காலத்துல ஏத்திடறோம். ஆனா நிகழ்காலம் மட்டும்தான் சாஸ்வதம்’’
அப்படீன்னு. ‘’
நான் அவரை முதல் சந்திப்பிலேயே அண்ணன் என அழைக்க ஆரம்பித்தேன்.
அவர் முதல் சந்திப்பிலேயே தனது வாழ்க்கை குறித்த ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்து
விட்டார். அவரது கிராமம் எனது டவுனிலிருந்து
பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நேராக எனது பணிமனைக்கு வருவார். பின்னால்
இருந்த தோட்டத்துக்கு சென்று கை கால் முகம் கழுவுவார். கண்ணாடியைப் பார்த்து நெற்றியில்
சந்தனம் வைத்துக் கொள்வார்.
‘’தம்பி. கை கால் முகம் கழுவுனா புதுசு ஆனா மாதிரி இருக்கு
தம்பி. அரைமணி நேரம் முகம் காத்துல பட வந்தது. கிராமத்து வயல்ல ஆளுங்க நாம சொன்ன விதமா
வேலை செஞ்சாங்களா இல்லையான்ற கவலை . வீட்டுக்கார அம்மா கிளம்பும் போது நம்மள இடிச்சு
சொன்ன வார்த்தைகள். தம்பி ! அவங்க அவ்வளவு கடுமையா சொல்றாங்கன்னா தப்பு என் மேல தான்
இருக்கும். இதெல்லாமே இங்க வந்து முகம் கழுவுனால் ஒன்னுமே இல்லாம போய்டுது. நான் ஃபிரெஷ்ஷா
என்னோட வேலையைப் பார்ப்பேன். ‘’
அண்ணன் மனைத்தரகராகவும் இருந்தார்.
‘’தம்பி ! மெட்ராஸ் பார்ட்டி ஒன்னு டவுன்ல ஒரு கல்யாண மண்டபம்
வாங்கிக் கொடுன்னு கேக்குது. அதுக்குத் தான் டிரை பண்றேன்’’
அவர் இடம் முடிக்கவும் செய்வார். பத்து ஏக்கர் இருபது ஏக்கர்
நிலம் வாங்கித் தருவது அவருக்கு இயல்பான வேலை. பிரதேசத்தின் பல கிராமங்களில் அவருக்கு
வேண்டியவர்கள் இருப்பார்கள். எங்கு சென்றாலும் டிவிஎஸ் 50ல் தான் செல்வார்.
‘’தம்பி அரசியல்ல ரொம்ப தீவிரமா இருந்திருக்கன். ஒரு தடவை
நம்ம தொகுதிக்கு எம்.எல்.ஏ கேண்டிடேட்க்கு கட்சி தலைமைக்கு மூணு பேரு கொண்ட லிஸ்ட்
போச்சு. அந்த லிஸ்ட்ல என்னோட பேரும் இருந்துச்சு.’’
அவரது வாய்ப்பு நூலிழையில் தவறியிருக்கிறது. மீதமிருந்த இரண்டு
பேரில் ஒருவருக்கு சீட் கிடைத்திருக்கிறது.
‘’அந்த தடவை மாநிலம் முழுக்கவே கட்சி தோத்துது தம்பி. நம்ம
தொகுதியிலயும். நான் நின்னிருந்தாலும் ஜெயிச்சிருக்க முடியாது. சம்சாரம் நாலு ஏக்கர்
நிலம் பிழைச்சுதுன்னு சொன்னாங்க. அவங்க சொன்னது உண்மைதான்.’’
கிராமத்திலிருந்து டவுனுக்கு வாரத்துக்கு இரு முறை வருவார்.
யாரையாவது கூட அழைத்துக் கொண்டு வருவார். ஆஸ்பத்திரிக்கு. பள்ளியில் சேர்க்க. கல்லூரியில்
சேர்க்க. ரயில் ஏற்றி விட. ரயில் நிலையம் சென்று அழைத்து வர. இடம் காட்ட . வயல் காட்ட.
அவருக்கு நானாவித அலுவல்கள் இருக்கும்,. பட்டறைக்கு வந்தால் அப்போது பட்டறையில் இருக்கும்
எல்லாருக்கும் தேனீர் ஆர்டர் செய்வார். எனது உதவியாளர்கள் எவரையும் அனுப்ப மாட்டார்.
அவரே சென்று ஆர்டர் சொல்லி விட்டு வருவார். சமயத்தில் தேனீர் கிளாஸ்களை தேனீர் தூக்கில்
வைத்து அவரே எடுத்து வருவார். தேனீருக்கான தொகையை கடைக்குச் சென்று கொடுத்து விட்டு
தனது வேலைகளைப் பார்க்கச் செல்வார்.
அண்ணன் நான்கு ஆண்டுகளாக பட்டறைக்கு வரவில்லை. அவரது மகள்
தஞ்சாவூரில் பொறியியல் கல்லூரியில் பயின்றாள். அதனால் தஞ்சாவூருக்கு தனது ஜாகையை மாற்றிக்
கொண்டார். செமஸ்டர் லீவ் விட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் கிராமத்துக்கு வருவார்.
அப்போது கிராம வேலையே அவருக்கு சரியாக இருக்கும். அவரது பெண்ணுக்கு பொறியியல் பட்டம்
பெற்ற அடுத்த ஆண்டே ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துணை மேலாளராக வேலை கிடைத்தது.
‘’மனசு சந்தோஷமா இருக்கு தம்பி. கிராமத்துல இருந்து பாப்பா
ஒவ்வொரு நாளும் டவுன் பஸ் பிடிச்சு பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போகும் போதெல்லாம்
அப்பாகிட்ட இருந்த மூணு வேலி நிலம் நம்ம கிட்ட இருந்திருந்தா டவுன்ல வீடு எடுத்து அங்க
தங்கிட்டு படிக்க வைச்சிருக்கலாமேன்னு ஒவ்வொரு நாளும் நினைப்பேன். கைக்கும் வாய்க்கும்
பத்தாம நாலு ஏக்கரை வச்சுகிட்டு ஒரே திண்டாட்டம் தம்பி’’
அண்ணன் ஒரே உற்சாகமாக இருந்தார்.
‘’பாப்பா என்கிட்ட சொல்லியிருக்கு. புரபேஷன் பீரியட் முடிஞ்சதும்
ஒரு என்ஃபீல்டு வாங்கித் தரண்ணு. பிடிவாதம் பிடிக்குது தம்பி’’
அண்ணனுக்கு என்ஃபீல்டு வாகனத்தின் மேல் உள்ள ஆர்வம் அனைவரும்
அறிந்தது.
அன்று வந்ததுதான். அதன் பின் மூன்று மாதம் கழித்து தான் வந்தார்.
ஆனால் அடையாளம் தெரியாத அளவு அவரது தோற்றம் மாறியிருந்தது. பட்டறையில் நாங்கள் அனைவரும்
பதறி விட்டோம். விஷப்பூச்சி ஒன்று கடித்து விட்டது என்றும் மருத்துவம் பார்ப்பதாகவும்
சொன்னார். ஒரு விஷப்பூச்சி கடித்து ஒருவர் அடையாளம் தெரியாத அளவு ஆகிவிட முடியுமா என்னும்
அதிர்ச்சி எங்களுக்குள் மிக ஆழமாக இருந்தது. அதன் பின் ஆறு மாதம் கழித்து வந்தார். அவர் தோற்றம்
முழுக்க மாறியிருந்தது. இன்னும் சொல்லப் போனால் அவரது தோற்றம் பொலிந்தும் மேலும் துலக்கம்
பெற்றும் இருந்தது.
‘’தம்பி உங்ககிட்ட விஷப்பூச்சிக்கடின்னு சொன்னேன்ல. கொஞ்சம்
விபரம் மாத்தி சொன்னன். நீங்க கவலைப்படுவீங்கன்னு. என்னை பாம்பு கடிச்சுடுச்சு தம்பி.
அத பாம்புன்னும் சொல்ல முடியாது. பாம்புக்குட்டின்னும் சொல்ல முடியாது. மீடியம் சைஸ்னு
வச்சுக்கங்க. காலைல நாலு மணிக்கு போர்ஷெட்டுக்கு போறன். அப்ப கால்ல ஏதோ கடிச்ச மாதிரி
இருந்துச்சு. நான் நகராக அப்படியே நின்னுட்டன். டார்ச் அடிச்சு பாக்கறன். நல்ல பாம்பு
ஒன்னு என் செருப்பயும் என் காலையும் சேத்து கடிச்சுட்டு இருக்கு. செருப்புல மேஜர் போர்ஷனும்
என் கால்ல மைனர் போர்ஷனும் கடி இருந்துச்சு. அந்த பாம்பை பகல்ல பாக்கனும்னு என் கைக்கெட்டின
தூரத்துல இருந்த சாக்குக்குல்ல அந்த பாம்போட வாலை பிடிச்சு உள்ள போட்டு கட்டி வச்சுட்டேன்.
இந்த மாதிரி பாம்புக்கடியை முறிக்கற மூலிகைச் செடியை வயல்ல வளக்கறன். சர சரன்னு அங்க
போய் அதோட இலையை பரிச்சு வெத்தலையோட சேர்த்து சர சரன்னு மென்னு சாறை முழுங்கிட்டே இருந்தேன்.
வீட்டுக்கார அம்மாவை எழுப்பவும் இல்லை. அவங்க கிட்ட சொல்லவும் இல்லை. பொழுது விடிஞ்சது.
எனக்கு ஒன்னும் செய்யல. சாக்கை அவுத்து பகல் வெளிச்சத்துல பாம்பைப் பார்த்தேன். நல்ல
பாம்புதான். அவுத்து கீழே கொட்டுனதும் சர சரன்னு ஓடிடுச்சு. அத பாத்தப்ப ரொம்ப சந்தோஷமா
இருந்தது தம்பி. அதுவும் நம்மள மாதிரி ஒரு ஜீவன் தானே.’’
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வியப்பும் அதிர்ச்சியும்
சேர்ந்த ஒரு உணர்வு.
‘’ஹாஸ்பிடல் போய் ஊசி போட்டுக்கலயா?’’
‘’இல்லை தம்பி’’
‘’ஏன் ரிஸ்க் எடுத்தீங்க’’
‘’விஷம் முறிஞ்சிருச்சு தம்பி. இல்லன்னா சகஜமா இருக்க முடியாது.
மயக்கம் வரும். நுரை தள்ளும். பாம்பு கடிச்ச எத்தனை பேரை நான் டவுன் ஆஸ்பத்திரிக்கு
கூட்டிட்டு வந்திருப்பன்’’
அதன் பின் மூன்று மாதங்கள் அவர் உடல்நிலையில் எந்த மாற்றமும்
இல்லாமல் இருந்திருக்கிறது.
‘’மூணு மாசம் கழிச்சு தோல் முழுக்க கொப்புளம் கொப்புளமா வந்துருச்சு
தம்பி. உடம்பு முகம் எல்லாம் துளி இடம் கூட பாக்கி இல்லாம புண்ணா ஆகிடுச்சு. பாக்கவே
முடியாத உருவமா ஆயிட்டன்.’’
அதன் பின்னர் தஞ்சாவூருக்கு சென்று ஒரு மருத்துவரைச் சந்தித்திருக்கிறார்.
‘’ரயில்ல தான் போயிருந்தேன் தம்பி. துணைக்கு என்னோட ஃபிரண்ட்
ஒருத்தர கூட்டிட்டுப் போனேன். நீங்க என் கூட பாத்திருப்பீங்க. உயரமா தாடி வச்சுட்டு
ஒருத்தர் என் கூட வருவாரே!’’
நாங்கள் அண்ணனுக்கு என்ன ஆயிற்று என்ற கவலையில் இருந்ததால்
எங்களால் அவர் சொன்ன நபர் யார் என்று கூட சிந்திக்க முடியவில்லை.
‘’ஒரு போர்வையை உடம்பு முழுக்க போத்தியிருந்தன். டாக்டர் என்
முகத்தைப் பாத்தாரு. அவர் ரூம்ல இருந்த அவரோட அசிஸ்டெண்ட் டாக்டர் நர்ஸ் எல்லாரையும்
வெளிய போகச் சொன்னாரு. உடம்பு முழுக்க இருக்கு டாக்டர்னு சொன்னன். அது பகல் நேரம் . அவர் ரூமோட லைட் எல்லாம் ஆஃப் பண்ணாரு.
சூரிய வெளிச்சம் ரூம்ல இருந்தது. ரூம் ஸ்கிரீனை இழுத்து விட்டாரு. ரூம் ஒரே இருட்டா
இருந்தது. இந்த மாதிரி இருட்டுல மூணு மாசம் இருக்கணும். அதான் உங்களுக்கான டிரீட்மெண்ட்னு
சொன்னாரு.’’
‘’பாம்பு கடிச்சதுண்ணு சொன்னீங்களா?’’
‘’என்ன தம்பி அத சொல்லாம இருப்பேனா. எல்லாத்தையும் சொன்னன்
தம்பி’’
மூன்று மாதம் வீட்டில் ஒரு அறையில் முழு இருட்டில் இருந்திருக்கிறார்.
மெழுகுவர்த்தி வெளிச்சம் கூட உடல் மீது படக்கூடாது என்பது மருத்துவரின் அறிவுரை.
‘’அந்த அனுபவம் எப்படி இருந்தது அண்ணன்?’’
‘’தாயோட கர்ப்பத்துல பத்து மாசம் எல்லாரும் இருந்துட்டு தானே
வந்திருக்கோம். அது போல தான் இதுவும். மூணு மாசம்’’
மூன்று மாதம் நிறைந்த பின் மூன்று மாதத்துக்குப் பின் முதல்
முறையாக குளித்திருக்கிறார்.
‘’தோல் மேலே உள்ள புண்ணெல்லாம் செதில் செதிலா பேத்துக்கிட்டு
வந்திடுச்சு தம்பி. அந்த செதில் எல்லாத்தையும் எடுத்தப்பறம் புதுசா இளந்தோல் மட்டும்
இருந்துச்சு. நான் ஒரு புது மனுஷனா ஆயிட்டதா நினைச்சன்.’’
‘’மஹாபாரதத்துல ‘’நள சரிதம்’’னு ஒரு கதை வருது. அதுல நளச்
சக்கரவர்த்திக்கு ஒரு பாம்பு கடிச்சு அவரு உருவம் மாறிடுது. ரொம்ப வருஷம் கழிச்சு தான்
அவருக்கு பழைய உருவம் திரும்ப கிடைக்குது. அந்த கதை மாதிரி தான் இருக்கு உங்க கதை’’
‘’அட ஆமா தம்பி. நீங்க சொல்றது சரிதான்’’
அண்ணனுடைய மகள் அவரை என்ஃபீல்டு வாங்கச் சொல்லி வற்புறுத்துவதால்
ஷோ ரூமுக்கு சென்று ஒரு என்ஃபீல்டு புக் செய்வோம் என்றார் அண்ணன்.
*****