இன்று காலை ஒரு காசோலையை ரொக்கமாக மாற்றுவதற்காக வங்கிக்குச் சென்றிருந்தேன். விவசாயக் குடும்பத்து பெண்மணி ஒருவர் பணம் செலுத்தும் படிவத்தை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். படிவத்தின் விபரங்களை நிரப்பத் தொடங்கினேன்.
அவர் வங்கியில் நகைக்கடன் பெற்றிருக்கிறார். பணத்தினை செலுத்தி நகையை மீட்க வந்திருக்கிறார். வங்கியின் நகை மதிப்பீட்டாளர் அவருடைய நகைக்கடன் சீட்டைப் பார்த்து விட்டு ‘’ வங்கியில் தணிக்கை நடைபெறுகிறது. நகைக்கடன் கணக்கில் இப்போது பணம் செலுத்த முடியாது. நிதி ஆண்டு இறுதியாக இருக்கும் மாதம். உங்களுடைய சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துங்கள். ஏப்ரல் 2ம் தேதிக்குப் பின்னர் சேமிப்புக் கணக்கிலிருந்து நகைக்கடன் கணக்குக்கு மாற்றி நகையை மீட்டுக் கொள்ளுங்கள் ‘’ என்று கூறியிருக்கிறார்.
நான் அந்த பெண்மணியை அழைத்துக் கொண்டு வங்கி மேலாளரிடம் சென்றேன். வங்கி மேலாளரும் அவ்வாறே கூறினார்.
இந்தியாவில் அந்த வங்கியின் எந்த கிளையிலிருந்து வேண்டுமானாலும் மேற்படி நகைக்கடன் கணக்குக்கு தொகையை செலுத்த முடியும். முழுத் தொகையும் பிற கிளைகளிலிருந்து செலுத்த முடியாதே தவிர மொத்த கடன் மற்றும் வட்டியில் ரூ.500 குறைத்துக் கொண்டு செலுத்த முடியும். அதே கிளையில் நிச்சயமாக செலுத்த முடியும்.
இது ஒரு வாடிக்கையாளரின் உரிமையைப் பறிக்கும் செயல். வங்கி ஊழியர்கள் முடிக்க வேண்டிய கடனை அடுத்த நிதி ஆண்டுக்கு நகர்த்துகின்றனர். நகைக்கடன் தொகையை சேமிப்புக் கணக்கில் செலுத்தச் சொல்லி வங்கியின் சேமிப்புக் கணக்குத் தொகையை உயர்த்திக் காண்பிக்கின்றனர். இவ்வாறான செயலைச் செய்வதற்கு வங்கி ஊழியர்கள் வெட்கப்பட வேண்டும். நகைக்கடன் பெற்றவர்கள் கடனைச் செலுத்த தயாராக இருந்த போதும் அவர்களுக்கு 23 நாள் வட்டியை அதிகமாக்கி செலுத்தச் சொல்ல வங்கிக்கு எந்த உரிமையும் இல்லை.
அந்த பெண்மணி சேமிப்புக் கணக்கில் தனது தொகையை செலுத்தி விட்டு சென்றார்.
வீட்டுக்கு வந்து அந்த வங்கியின் பிராந்திய அலுவலகத்துக்கு ஃபோன் செய்து குறிப்பிட்ட வங்கியில் இவ்வாறு நிகழ்கிறது என்று தெரிவித்தேன். இவ்வாறு இன்னொருத்தருக்கு நிகழாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியர்களின் திறனின்மை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.