Sunday, 2 April 2023

நண்பர் - மரங்கள்

25 ஆண்டுகளுக்குப் பின்னால் சந்தித்த நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது உரையாடல் மரங்கள் குறித்து திரும்பியது. நண்பர் நகரின் தென்பகுதியில் பிரதான சாலையை ஒட்டி உள்ள பகுதி ஒன்றில் இடம் வாங்கி வீடு கட்டியிருக்கிறார். அவரது வீட்டைச் சுற்றி இன்னும் பக்கத்து வீடுகள் கட்டப்படவில்லை. வாங்கிப் போட்ட மனைகளாகவே உள்ளன. அந்த மனை உரிமையாளர்கள் தங்கள் மனைகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்திருக்கிறார்கள். நண்பரின் வீட்டிலும் வேம்பு , கொய்யா, தென்னை ஆகிய மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு பெரிய விருட்சங்களாக உள்ளன. நண்பரின் தாயார் மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். வேப்ப மரம் வளரும் போது பக்கக் கிளைகளை கழித்து விட்டு நேராக வளர்ந்து மேலெழ அந்த மரத்துக்கு உதவியிருக்கிறார். மரம் உயர வளர்ந்து குறிப்பிட்ட உயரத்துக்குப் பின் கிளை பரப்பியிருக்கிறது. பக்கக் கிளைகள் இல்லாததால் மரம் பருத்திருக்கிறது. மூன்றடி சுற்றளவு இருக்கும். செயல் புரியும் கிராமங்களில் வளரும் தேக்கு மரங்கள் இந்த பருமன் கொண்டிருந்தால் அங்கிருக்கும் விவசாயிகளுக்கு பயன் தருமே என்ற எண்ணம் ஏற்பட்டது.  

மரங்களுக்கு நம் மனதில் சிறு இடம் கொடுத்தால் கூட அவை நம் மனமெங்கும் நிறைந்து விடும். மரங்கள் எப்போதும் நிழலையும் நம்பிக்கையையும் பலன்களையும் அளிப்பவை. அவற்றுக்குத் தீங்கிழைப்பவர்களுக்குக் கூட நன்மையே செய்பவை. தன்னை வெட்ட வருபவர்களுக்கும் அது நிழல் கொடுக்கிறது. அந்த தன்மையின் மூலம் அது மனித குலத்துக்கு ஒரு பாடத்தை நடத்துகிறது. 

நண்பர் வீட்டில் இருந்த வேப்பமரத்தை தழுவிக் கொண்டேன். என் உள்ளங்கைகளை அந்த மரத்தின் மேல் வைத்து சில நிமிடங்கள் நின்றேன். மனம் அமைதியடைந்தது. மரங்களுடனான உறவு என்பது ஆத்மார்த்தமானது. 

‘’14 மரங்கள்’’ விஷயத்தை நண்பரிடம் சொன்னேன். 

நேற்று மாலை ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் கடற்கரைக்கு நானும் நண்பரும் பைக்கில் சென்றோம். பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்திருப்பதைக் கொண்டாடும் விதமாக. அப்போது ‘’14 மரங்கள்’’ வெட்டப்பட்ட வீதியையும் அதன் பின் அங்கே வைக்கப்பட்டு வளர்ந்திருக்கும் 100 மரங்களையும் நண்பருக்குக் காட்டினேன். 100 ம்ரங்களும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. பல மரங்கள் 15 அடி உயரம் சென்றுள்ளன. அவற்றைக் கண்டது பெரும் மகிழ்ச்சி தந்தது. 

எல்லா உயிர்களையும் தன்னில் ஒரு பாகமாக இணைத்துக் கொள்ளும் தன்மையை மரங்கள் தன் இயல்பாகக் கொண்டுள்ளன. மரங்களுக்கு அடியில் மண்ணில் மண்புழுக்கள் வாழ்கின்றன. மரத்தின் நிழலும் அவை உதிர்க்கும் இலைகளும் மண்புழுக்களுக்கு உணவாகிறது. பல்வேறு விதமான பூச்சிகள் மரக்கிளைகளில் இருப்பு கொள்கின்றன. மரப்பொந்துகளில் கீரிகள் வசிக்கின்றன. எண்ணற்ற பறவைகள் மரக்கிளைகளில் வாசம் செய்கின்றன. மரத்துடன் உணர்வுபூர்வமாக தொடர்புபடுத்திக் கொள்வதன் மூலம் இத்தனை உயிர்க்குலங்களுடனும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது.