எனக்கு இந்தியா என்பது விதவிதமான நிலங்களின் விதவிதமான வாழ்க்கைமுறைகளின் தொகுதி. அவை அனைத்தையும் இணைக்கும் சரடாக இந்தியப் பண்பாடு இருக்கிறது என்பது எனது முதல் புரிதல். இந்த நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளாக மேலாக இந்த பண்பாடு நிலைபெற்றுள்ளது ; இந்தியர்களின் அன்றாட விழுமியங்கள் இந்த பண்பாட்டிலிருந்து முளைத்தெழுந்தவை. இயற்கையை தெய்வ ரூபமாகக் காணுதல், உணவு உற்பத்தியைப் பெருக்குதல், விருந்தினருக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகிய கூறுகள் நாடு முழுமைக்கும் பொதுவாக உள்ளன என்பது எனது பார்வை. இன்னும் வெவ்வேறு கோணங்களில் மேலும் பல பார்வைகள் இருக்கக்கூடும். அவை அனைத்தும் இணைந்ததே இந்தியப் பண்பாடு.
இந்தியாவின் வரலாற்றைப் பயிலும் எவராலும் இந்திய நிலம் ஐயாயிரம் ஆண்டுகளாக வணிகத்தாலும் வணிகப் பாதைகளாலும் இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஐயாயிரம் ஆண்டுகளாகவே வங்காளம் துறைமுகங்களால் ஆனது. பல நாட்டு வணிகர்கள் வங்காளம் நோக்கி வந்திருக்கிறார்கள். பூம்புகாரும் கொற்கையும் பல நாட்டு வணிகர் வர்த்தகம் மேற்கொண்ட மாநகரங்கள். துவாரகை உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்களை தன்னை நோக்கி ஈர்த்த துறைமுக மாநகரம். வணிகப்பாதைகளுக்காகவே சாலைகள் இந்திய மண்ணில் பெரிதாக எழுந்தன. வனங்கள் நிறைந்த மண் என்பதால் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்துக்குச் செல்வதற்கு சுற்றிச் செல்லும் நீண்ட பாதைகள் அமையப் பெற்றிருக்கின்றன.
( தமிழறிஞர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ’’வேங்கடம் முதல் குமரி வரை’’ என்ற நூலை எழுதினார். பின்னர் ’’வேங்கடத்துக்கு அப்பால்’’ என்ற நூலை எழுதினார். தமிழகத் திருத்தலங்களுக்கும் வட இந்தியத் தலங்களும் நேரில் சென்று அவற்றைப் பற்றி தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தி எழுதப்பட்ட நூல்கள் அவை. இந்த நூல்கள் 1960களில் எழுதப்பட்டவை. அதில் வட இந்தியாவில் இருக்கும் சில திருத்தலங்களுக்கு செல்லும் மார்க்கம் பற்றி அவர் எழுதியதை வாசித்த போது நான் திகைத்துப் போனேன். அதாவது அவர் அந்நூலை எழுதிய போது இப்போது இருக்கும் சாலை மார்க்கங்கள் அப்போது இருந்திருக்கவில்லை. ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு பல ஊர்களைச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியதாயிருந்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்து ஒரு உதாரணம் கூற முடியும். தமிழகம் 960கி.மீ நீளம் கொண்ட கடற்கரையைக் கொண்டது. அந்த நீளம் நெடுக ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு மீனவ கிராமம் என்ற முறையில் மீனவர்கள் கடற்கரையை ஒட்டி வாழ்கிறார்கள். ஆனால் அந்த கிராமங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு என சாலை மார்க்கமான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. 1990ம் ஆண்டுக்குப் பின்னரே சென்னையும் புதுச்சேரியும் கிழக்குக் கடற்கரை சாலையால் இணைக்கப்பட்டன. முன்னரும் அந்த சாலை இருந்தது. மிகச் சிறிய சின்னஞ்சிறு சாலையாக இருந்தது. பட்டுக்கோட்டையிலிருந்து இராமேஸ்வரம் வரையான கடற்கரைச் சாலைக்கு ‘’சேது ரஸ்தா ‘’ என்று பெயர். தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்களால் அமைக்கப்பட்ட சாலை. 2004ம் ஆண்டுக்குப் பின்னரே பெரிய சாலையாக அமைக்கப்பட்டு நாகப்பட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையுடன் இணைக்கப்பட்டது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இப்போதும் பெரும் சாலைகள் அமைக்கும் பணிகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன )
சாலைகள் இல்லையென்றாலும் கூட எங்கெல்லாம் மக்கள் சமூகங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் மானுடம் மேல் மானுட நலன் மேல் அக்கறை கொண்ட துறவிகள் சென்று மெய்மையின் சொற்களை இந்திய நிலமெங்கும் இருக்கும் மக்களுக்கு உரைத்திருக்கிறார்கள் என்பதும் அதுவே இந்தியப் பண்பாடு என உருவாகி நிலைபெற்று இருக்கிறது என்பதும் பெரும் வியப்புக்குரிய ஒன்று.
லௌகிகம் பேரலையென எழுந்து மானுட சமூகத்தை நோக்கி பெருவேகத்துடன் அணுகும் காலகட்டம் இது. கோடிக்கணக்கான மக்கள் நோய்மையால் அவதியுறுகின்றனர். அவர்களின் நோய்மையை சில நூறு பேர் காசாக்கிக் கொள்கின்றனர். இன்னும் உணவுத் தேவை முழுமையாகப் பூர்த்தியாகாத மக்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். உலகின் ஒரு பகுதிக்கு அதிக அளவிலான உணவு உண்பதால் ஏற்படும் மிகைப் பருமன் தீர்க்க முடியாத சிக்கலாக இருக்கிறது. மெல்லக் கொல்லும் நஞ்சை உணவாகப் புசிக்கிறனர் மக்கள்.
விஷயங்களை மேலான விதத்தில் புரிந்து கொள்வதற்கு மக்களுக்கு எவ்வகையிலெல்லாம் உதவ முடியுமோ அவ்விதங்களிலெல்லாம் உதவ வேண்டும். சமூக மாற்றம் அவ்வாறே நிகழும்.