Tuesday, 9 May 2023

5ஜி தொழில்நுட்பமும் அமைப்பாளரும் (நகைச்சுவைக் கட்டுரை)

இந்த கட்டுரைக்குள் செல்லும் முன் நாம் சில யதார்த்தங்களை உள்வாங்கிக் கொள்வது நலம் என கட்டுரையாளர் நினைக்கிறார். அமைப்பாளரின் எண்ணமும் அதுவே. 

யதார்த்தம் 1 : அமைப்பாளரிடம் ஒரு ஜி.எஸ்.எம் அலைபேசி மட்டுமே உள்ளது. அலைபேசிகள் இந்தியச் சந்தைக்கு வந்த புதிதில் அறிமுகமான தொழில்நுட்பம் இந்த ஜி.எஸ்.எம். 

யதார்த்தம் 2 : அவரிடம் இருக்கும் அலைபேசி ஜி.எஸ்.எம் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் அவருடையது சாதாரண வகை. ‘’ஸ்மார்ட்ஃபோன்’’ வகை இல்லை. அதாவது அமைப்பாளரிடம் ‘’ஸ்மார்ட்ஃபோன்’’ இல்லை.  

யதார்த்தம் 3 : அமைப்பாளர் ஆரம்பப் பள்ளி மாணவராயிருந்த போதே அவர் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். அதில் பத்து ரூபாய் பணம் போடுவது அடுத்த நாள் ஐந்து ரூபாய் எடுப்பது மறுநாளே மேலும் ஐந்து ரூபாய் சேர்த்து பத்து ரூபாய் போடுவது என ஆர்வமாக செயல்பட்டுக் கொண்டிருப்பார். 

அமைப்பாளர் கட்டுமானத் தொழிலுக்கு வந்த போது அவர் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். அதில் ஒரு வங்கியில் நடப்புக் கணக்கும் இருந்தது. அவற்றில் அளவான தொகையை டெபாசிட் செய்து வைத்திருந்தார். தனது ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரரான கணக்குத் தணிக்கையாளரை அமைப்பாளர் முதல் முறையாக சந்தித்த போது தணிக்கையாளருக்கும் அமைப்பாளருக்கும் நல்ல நட்பு உருவாகி விட்டது. தணிக்கையாளர் அமைப்பாளரிடம் ‘’பிரபு ! நீங்க முதல் வேலையா என்ன செய்யறீங்க. உங்களுக்கு இப்ப ரெண்டு பேங்க்ல அக்கவுண்ட் இருக்குல்ல. அதுல ஒன்னை மட்டும் மெயிண்டன் பண்ணுங்க. இன்னொரு பேங்க் அக்கவுண்ட்ட குளோஸ் பண்ணிடுங்க’’ என்றார். 

அமைப்பாளர் தன்னிடம் யாராவது தனிப்பட்ட அறிவுரை ஒன்றைச் சொன்னால் அதை உடனே நிறைவேற்றி விடுவார். இந்த புடவியின் 700 கோடி மனிதர்களில் இந்த ஒரு மனிதர் மட்டும் தன்னிடம் அறிவுரை கூறுகிறார் என்றால் அது எத்தனை அரிய ஒரு நிகழ்வு என வியந்து உடனே நிறைவேற்றுவார். 

சில நாட்களில் தணிக்கையாளரைச் சந்தித்த அமைப்பாளர் அவரிடம் கூறினார் : ‘’ சார் ! நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுட்டன். இன்னொரு விஷயம் சேத்தும் செஞ்சுட்டன். அதாவது ரெண்டு பேங்க் அக்கவுண்ட்ல ஒரு பேங்க் அக்கவுண்ட் குளோஸ் பண்ணச் சொன்னீங்கள்ல நான் ரெண்டு பேங்க் அக்கவுண்ட்டையும் குளோஸ் பண்ணிட்டன். இனிமே தான் புதுசா ஒரு அக்கவுண்ட் வேற பேங்க்ல ஆரம்பிக்கணும்’’

ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ( அதாவது அமைப்பாளர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பார். ) ஒரு கணக்கைத் துவங்கினார். அந்த ஒரு கணக்கை மட்டும் வைத்துக் கொண்டு ஏழிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. 

அமைப்பாளர் வசிக்கும் தெருவில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஒருவர் வசித்து வந்தார். அவர் அமைப்பாளர் சிறுவனாக இருந்த போது ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘’பிரபு ! பேங்க்-ல பெபாசிட் செய்யறதை விட போஸ்ட் ஆஃபிஸ்ல டெபாசிட் செய்யறது தான் நல்லது. போஸ்ட் ஆஃபிஸ் தன்னோட வாடிக்கையாளர்கள் கொடுக்கற பணத்தை சென்ட்ரல் கவர்மெண்ட் பிராஜெக்ட்டுக்கு மட்டும் தான் கடனாக் கொடுக்குது. அதனால பணம் டெபாசிட் பண்ணா போஸ்ட் ஆஃபிஸ்ல தான் பண்ணனும்’’. இந்த விஷயம் அமைப்பாளர் மனத்தில் பதிந்ததால் ஒரு போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்புக் கணக்கை பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் துவக்கினார். 

பெரும்பாலான இந்தியர்களைப் போலவே தனது செல்வத்தை அமைப்பாளர் நிலமாகவும் மனைகளாகவும் மாற்றி வைத்துள்ளார். தன் கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும் அதில் ஒரு மனையை வாங்கி விடுவார். பின்னர் அதனை வீடாக அல்லது வீடுகளாக கட்டி விற்பனை செய்வார். எனவே சேமிப்புக் கணக்குகளில் பெரிய அளவில் பணம் வைத்திருக்க மாட்டார். 

போஸ்ட் ஆஃபிஸுக்கு செல்லும் போது அங்கே இந்தியா போஸ்ட் பெமெண்ட் வங்கி என அஞ்சல் துறை ஆரம்பித்திருக்கும் வங்கி குறித்து சொன்னார்கள். ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் ஆதார் அட்டையைக் காண்பித்து ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி விடலாம் என்று சொன்னார்கள். அவர்களிடம் அமைப்பாளர் தன்னால் இந்த கணக்கைத் துவங்க இயலாது ஏனெனில் தன்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை என்றார். உங்கள் நண்பர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் கூட இதனைப் பயன்படுத்தலாம் என்றனர். அமைப்பாளர் ஒத்துக் கொண்டார். அமைப்பாளர் நண்பர் ஒருவரின் ஸ்மார்ட்ஃபோனில் மேற்படி பேமெண்ட் வங்கியின் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டார். அமைப்பாளருக்கு சொந்தமாக ஒரு பெரிய ஃபிளாட் இருக்கிறது. அதன் வாடகையை போஸ்டல் பேமெண்ட் வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு வாடகைதாரரிடம் கூறியிருக்கிறார். அவர் வாடகையை வரவு வைத்த மறு வினாடி அமைப்பாளரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்து விடும். 

ஒருநாள் நண்பரின் ஸ்மார்ட்ஃபோனை இயக்கிய போது பேமெண்ட் பேங்க் செயலி இயங்க மறுத்தது. எந்த எண்ணை கணக்கின் விபரங்களில் வாடிக்கையாளர் அளித்தாரோ அந்த எண் கொண்ட ஸ்மார்ட்ஃபோனில் மட்டுமே செயலி இயங்கும் என்ற அறிவிப்பு வந்தது. அமைப்பாளர் போஸ்டல் பேமெண்ட் வங்கிக்கு சென்று தான் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த வாய்ப்பில்லை எனவே கணக்கை க்ளோஸ் செய்யுங்கள் என்றார். பேமெண்ட் வங்கி சாளரத்தில் இருந்த பெண்மணி அதற்கான அவசியம் இல்லை சார் நீங்கள் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் உள்ள மெஷினில் உங்கள் கணக்கை ஆப்பரேட் செய்யலாம். இந்த கணக்கு ஆதார் அடிப்படையிலானது என்பதால் உங்கள் கைரேகையைக் கொண்டே உங்கள் கணக்குக்குள் சென்று விடலாம் என்று சொன்னார். 

மேலும் அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கும் IFSC CODE  கொடுத்து விட்டார்கள். எனவே அஞ்சலக சேமிப்புக் கணக்கை ஒரு வங்கிக் கணக்கு போல அமைப்பாளர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு போஸ்ட் ஆஃபிஸில் அமைப்பாளர் இரண்டு மூன்று நெஃப்ட் இரண்டு மூன்று ஆர்.டி.ஜி.எஸ் ஆகியவை செய்து முடித்து வெளியேறிய போது அந்த கிளை அலுவலகத்தின் போஸ்ட் மாஸ்டர் அவர் உதவியாளரிடம் சொன்னது அமைப்பாளர் காதில் விழுந்தது. ‘’இனிமே பேங்க் கஸ்டமர் எல்லாம் போஸ்ட் ஆஃபிஸுக்கு வந்துடுவாங்க போல இருக்கு.’’

அமைப்பாளருக்கு இப்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது உங்கள் சிம் கார்டை பி.எஸ்.என்.எல் லில் கொடுத்து 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளுங்கள் என. 

அமைப்பாளர் இப்போது யோசிப்பது இந்த அலைபேசியையும் பயன்படுத்தாமல் 1990களைப் போல லேண்ட்லைன் ஃபோன் மட்டும் போதும் என இருந்து விட்டால் என்ன என்று யோசிக்கிறார். மேலும் இப்போது உள்ள ஒரே வங்கிக் கணக்கு மட்டும் போஸ்ட் ஆஃபிஸ் கணக்கை குளோஸ் செய்து விட்டு புதிதாக ஒரே ஒரு போஸ்ட் ஆஃபிஸ் கணக்கு மட்டும் வைத்துக் கொண்டால் என்ன என்றும் யோசிக்கிறார்.