எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். பன்மொழிப்புலமை மிக்கவர். நுண்மாண் நுழைபுலம் உடையவர். நல்லறிஞர். அவருக்கு கம்பராமாயணம் மீது சமீபத்தில் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. முழுக் கம்பராமாயணத்தையும் முற்றோதல் செய்ய வேண்டும் என்ற வேட்கை அவருள் உருவாகி விட்டது. கம்பன் பாடல்கள் பத்தாயிரத்துக்கும் மேல். ஒரு நாளைக்கு 50 பாடல்கள் என பாடினால் ஓராண்டுக்குள் முழுக் காப்பியத்தையும் நிறைவு செய்ய முடியும். பெரும்பணி எனினும் எண்ணித் துணிகிறார் நண்பர்.
ஊருக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் விஷ்ணு ஆலயம் ஒன்றனுக்கு நேற்று சென்றிருந்தேன். அங்கிருந்த அர்ச்சகரிடம் நண்பரின் முயற்சி குறித்து சொன்னேன். அர்ச்சகர் மிகவும் மகிழ்ந்தார். தங்கள் ஆலயத்தில் தினமும் ஆலய பக்தர்கள் சிலர் வால்மீகி ராமாயணமும் கம்ப ராமாயணமும் பாராயணம் செய்வதாகக் கூறினார். பல வருடங்களாக இந்த கிராமத்தில் இது நிகழ்கிறது என்றும் கூறினார். ஆலயத்தின் இறைவன் செவிகளில் தினமும் இராமாயணம் ஒலிக்கிறது என்றார்.
ஒரு நாளேனும் அதில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டானது. நேற்றைய வாசிப்பு எத்தனை மணிக்கு நிகழும் என்று கேட்டேன். மாலை 6 மணிக்கு வருமாறு கூறினார். மீண்டும் மாலை சென்றிருந்தேன். யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் வதை முடிந்து இந்திரஜித் களம் காணும் படலம் நடந்து கொண்டிருந்தது. இலக்குவன் இராமனிடம் சூள் உரைத்து இந்திரஜித்தை எதிர்க்கச் செல்ல இருந்த தருணம். ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் இசைக்கப்படும் விதத்தில் கம்பராமாயணத்தை பாடிக் கொண்டிருந்தார்கள். கம்பன் பிரதியுடன் எனக்கு பழக்கம் உண்டு என்பதால் அவர்கள் பாடியதை மனத்தால் தொடர்ந்து கொண்டிருந்தேன். முப்பது பாடல்கள் பாடிய பின் என்னை அதே விதத்தில் பாடுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஒரு உணர்வெழுச்சியில் அவர்கள் இசைத்த விதத்திலேயே நானும் தொடர்ந்தேன். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதங்களில் திருப்பாவையும் பிரபந்தமும் பாடப் படுவதை கேட்ட அகம் அதனை உள்வாங்கி உயிர்ப்புடன் பதிவு செய்திருக்கிறது என்பதை நான் பாடிய போது உணர்ந்தேன். இருபது பாடல்கள் நான் பாடினேன். பின்னர் அர்ச்சகர் பாடினார். நேற்று 100 பாடல்கள் வரை பாடினோம்.
பாடல்கள் நிறைவு பெற்றதும் அர்ச்சகர் என்னைப் பாராட்டினார். நான் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன் அப்போது.
அவர் கையில் வைத்திருந்த புத்தகம் கம்ப இராமாயணம் மர்ரே & ராஜம் பதிப்பு. இந்த நூல் குறித்து பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். 1950களில் வெளிவந்த நூல். கம்பனின் ஒவ்வொரு செய்யுளையும் பதம் பிரித்து எளிய விதத்தில் அனைவரும் வாசிக்கும் முறையில் அமைந்த புத்தகம். கம்பன் செய்யுள்கள் பதம் பிரித்து வாசிக்கப்படுமாயின் தமிழ் அறிந்த எவரும் கம்பனை வாசிக்கலாம். அவரிடம் பி.ஜி. கருத்திருமனின் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூல் குறித்து சொன்னேன். அவர் அந்த நூலை வாசித்திருந்தார். அந்நூலின் முக்கியத்துவம் குறித்து மிகவும் பாராட்டி சொன்னார்.
கம்ப ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரையும் அகர வரிசையில் எழுதி அவர்கள் குறித்த குறிப்புகளை சிறு சிறு வாக்கியங்களாக ஒரு நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தார். அதனை நிறைவு செய்ததும் சிறு நூலாக ஆக்கலாம் என்று சொன்னேன். அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னேன். தன்னால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி , ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை வாசிக்க முடியும் என்று அவர் சொன்னார். இந்த நாட்டில் ஆச்சர்யங்களுக்குக் குறைவேயில்லை ; ஒவ்வொரு நாளும்.