Saturday, 6 May 2023

தடையற்ற போதைப்பொருள் புழக்கம்

நேற்று எனது இரு சக்கர வாகனத்தின் என்ஜின் ஆயில் மாற்றுவதற்காக ஒரு டூ-வீலர் பட்டறைக்குச் சென்றிருந்தேன். அங்கே இருந்த மெக்கானிக் காலில் பெரிய கட்டு போட்டு அமர்ந்திருந்தார். ஆயில் மாற்ற வேண்டும் என்று சொன்னதும் பணியாளர் வந்து விடுவார் என்று கூறி சற்று நேரம் காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் காலில் போட்டிருந்த கட்டைக் குறித்து விசாரித்தேன். 

இரண்டு மாதம் முன்பு சாலையின் ஒரு ஓரத்தில் ஒரு ஊருக்கு வழி கேட்டு டூ-வீலருடன் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையின் மறுபக்கத்தில் ஒரு டூ-வீலரில் மூன்று இளைஞர்கள் சென்றிருக்கிறார்கள். மூன்று பேருமே கஞ்சா புகைத்த போதையில் இருந்திருக்கிறார்கள். மிக அதிக வேகத்தில் வண்டியை இயக்கிய போது கட்டுப்பாடு இழந்து வண்டி சாலையில் சாய்ந்திருக்கிறது. மூவருமே சாலையில் விழுந்து மூவருக்குமே கடுமையான அடி. சாலையில் விழுந்த வாகனம் மிதமிஞ்சிய வேகத்தில் வாகனத்தில் இருந்த மூவரும் இல்லாமல் சாய்ந்தவாறு ஐம்பது அடி தள்ளி நின்று கொண்டிருந்த இந்த மெக்கானிக் காலில் மோதி கால் தசைகளைப் பிய்த்து கால் எலும்பை நொறுக்கியிருக்கிறது. எலும்பு முறிவு கடுமையாக ஆகி உலோகத்தால் எலும்புகளை இணைத்துக் கட்டி அறுவைசிகிச்சை செய்திருக்கிறார்கள். இப்போது சற்று உடல் நிலை தேறியிருக்கிறார் என்றாலும் இன்னும் முழுமையான ஆரோக்கிய நிலைக்கு இன்னும் வந்து சேரவில்லை. 

விபத்தை உண்டாக்கியவர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளதால் இந்த விஷயம் மிகக் கடுமையான கிரிமினல் குற்றம். காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததா என்று கேட்டேன். சம்பவம் நடந்து அறுபது நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முதல் தகவல் அறிக்கை தரப்படவில்லை என்றார். புகாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்துக்கு அனுப்பியிருப்பதாகக் கூறினார். 

விபத்துக்குண்டான இழப்பீடு உங்களுக்கு கிடைக்க வேண்டும் ; அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். உங்களுக்கு சட்ட உதவி ஏதும் தேவைப்பட்டால் என்னிடம் சொல்லுங்கள் என்றேன். டூ-வீலர் மெக்கானிக் என்பதால் அவருடைய கஸ்டமர்கள் இரண்டு பேர் வழக்கறிஞர்கள். அவர்கள் உதவுகிறார்கள் என்று சொன்னார். 

கடையில் சற்று பெரிய நாற்காலி ஒன்றில் காலை முதல் மாலை வரை அமர்ந்தே இருக்கும் நிலைமை. அவர் பட்டறையில் இரண்டு பணியாளர்கள் இருக்கிறார்கள். பட்டறைக்கு வரும் வண்டிகளில் என்னென்ன பழுதுகள் அவை எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று இவர் சொல்ல பணியாளர்கள் பணி புரிகிறார்கள். இப்போது இரண்டு மாதம் ஆகிவிட்டது. முழுமையாக குணம் ஆக மேலும் இரண்டு மாதம் ஆகும். சுயதொழில் புரிபவரான அவருக்கு நான்கு மாதங்கள் என்பது பெரிய காலம். 

கஞ்சா புழக்கம் என்பது இங்கே மிகத் தீவிரமாக இருக்கிறது. நகரின் நான்கு திசைகளிலும் நகரின் மையப்பகுதியிலும் கஞ்சா தீவிரமாக விற்கப்படுகிறது. கஞ்சாவுடன் மாத்திரை என்ற போதைப்பொருளும் உலவுவதாகச் சொல்கிறார்கள். 15 வயது முதல் 21 வயது வரையான இளைஞர்கள் மிக அதிகமாக போதை அடிமைகளாக உருமாறுகிறார்கள். 

என்ஜின் ஆயில் மாற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்து நாள் முழுதும் நகர முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் அவருக்கு ஐந்து புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்கக் கொடுத்தேன்.