எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது பூர்வீகம் பழைய வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் கணிணி துறையில் பணியாற்றுகிறார். ஆண்டுக்கு ஒருமுறை சொந்த கிராமத்துக்கு வருவார். ஊருக்கு வரும் போதும் அமெரிக்காவில் இருக்கும் போதும் என்னுடன் அலைபேசியில் உரையாடுவார். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு தனது ஆதரவை எப்போதும் அளிப்பவர்.
அவருக்கு கம்பன் பாடல்கள் மேல் தீவிரமான விருப்பமும் ஈடுபாடும் உண்டு. தனது சொந்த ஆர்வத்தில் கம்பனை வாசிக்கத் தொடங்கி கம்பனில் ஆழ்ந்து விட்டார்.
அமெரிக்காவில் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள தமிழ்க் குடும்பங்கள் இணைந்து ஒரு தமிழ்ப் பள்ளியை நடத்துக்கின்றன. வார இறுதி நாட்களில் தங்கள் குடும்பத்தின் குழந்தைகளுக்கு தமிழுடன் தொடர்பு இருக்கும் விதத்தில் தமிழ் வகுப்புகள் நடத்துகிறார்கள். தமிழில் ஆர்வம் உள்ள பெற்றோர் பகுதி நேர ஆசிரியர்களாக குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறார்கள். அந்த பள்ளியில் நண்பர் குழந்தைகளுக்கு கம்பன் பாடல்களை பாடமாக எடுக்கிறார்.
சமீபத்தில் அவர்கள் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றிருக்கிறது. அதில் ஆறு குழந்தைகள் ஒவ்வொருவரும் ஐந்து நிமிடம் கம்பன் பாடல் ஒன்றைச் சொல்லி அதன் விளக்கத்தையும் காவியச் சுவையையும் கூறும் நிகழ்ச்சியின் காணொளியை எனக்கு அனுப்பியிருந்தார்.
மொழிப் பரிச்சயம் என்பது செவி சார்ந்தது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகள் ஒரு நாளின் பெரும் பகுதி பள்ளியில் இருக்க வேண்டியிருப்பதால் அமெரிக்க உச்சரிப்பு பாணி கொண்ட ஆங்கிலமே அவர்கள் மனத்தில் இருக்கும். சக குழந்தைகளுடன் உரையாடும் மொழியே அவர்களின் புழக்க மொழியாக மாறும். நண்பரின் பள்ளியில் வார இறுதி நாட்கள் இரண்டு நாளுமே அங்கிருக்கும் குழந்தைகள் தமிழ் பேச வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. அங்கே உள்ள குழந்தைகள் மொழியில் கம்பன் தமிழைக் கேட்டது பேருவகை அளித்தது. அந்த குழந்தைகள் தமிழையும் கம்பனையும் முழுமையாக உள்வாங்கியிருந்தன என்பது அவர்களின் உடல்மொழி மூலம் அறிய முடிந்தது.
நண்பரின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
ஆர்வத்துடன் பங்கெடுத்த குழந்தைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் அளித்த பெற்றோரும் பாராட்டுக்குரியவர்கள்.