இன்று ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ உள்ள எல்லா வீடுகளுக்கும் நெல்லி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. எனது நண்பரின் நீண்ட நாள் விருப்பம் அது. சரியான பொருத்தமான தருணத்துக்காக காத்திருக்க நேரிட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு பாலம் மட்டுமே. நற்செயல்கள் நிகழ வேண்டும் என எண்ணுபவர்களுக்கும் நாட்டின் சாதாரண பிரஜைகளுக்கும் இடையே நாம் ஒரு பாலமாக இருக்கிறோம். அவ்வளவே. சாமானிய மக்கள் இணைக்கப்படும் போது மகத்தான செயல்கள் நிகழ்கின்றன என்பது ‘’காவிரி போற்றுதும்’’ அனுபவத்தில் உணர்ந்த உண்மை. மக்களின் இணைவு எண்ணம் செயல் ஆகிய இரண்டில் எதில் வேண்டுமானாலும் நிகழலாம். மேலான விஷயங்களை நோக்கி மகத்தானவற்றை நோக்கி ஒவ்வொரு மனிதனும் ஒத்திசைந்து செல்லுதல் என்பதே மானுடம் அடைய வேண்டிய நிலை.
ஒரு கிராமம் என்பதை நாம் ஓர் அடிப்படை அலகாக எடுத்துக் கொள்கிறோம். ஒரு கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருளியல் தன்னிறைவு கிடைக்க வேண்டும் என்பதற்கு இப்போதிருக்கும் நிலையிலேயே அவர்கள் என்னென்ன முயற்சி செய்ய முடியுமோ அந்த முயற்சிகளை அவர்களிடம் எடுத்துச் சொல்வதற்கும் அவர்களுக்கு அதற்கு எந்தெந்த விதங்களில் உடனிருக்க முடியுமோ அவ்வாறு உடனிருப்பதற்கும் நாம் முயல்கிறோம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேக்கு மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என நாம் நினைப்பது அதற்காகவே. ஒவ்வொரு வீட்டின் குழந்தைகளும் விளையாடுவதற்கு தேவையான விளையாட்டுப் பொருட்களை வழங்க வேண்டும் என எண்ணுவதும் அதற்காகவே. அந்த கிராமத்தின் குழந்தைகளுக்கு ஹிந்தி சொல்லித் தர வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதும் அதற்காகவே.
நான் கூறுபவற்றை மக்கள் அனைவரும் முழுமையாகப் புரிந்து கொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்கு எந்த அளவு புரியுமோ அந்த அளவு புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்குமே என் மீது பிரியம் இருக்கிறது. அன்பு இருக்கிறது. அந்த பிரியமும் அன்பும் என்னை எப்போதும் நெகிழச் செய்கிறது.
இன்று மரக்கன்றுகள் வழங்கும் போது ஒரு விஷயம் என் மனதில் தோன்றியது. பொதுப்பணியின் போது இவ்வாறான உள்ளுணர்வுகள் தோன்றும். அந்த உள்ளுணர்வுகளை பின் தொடர்ந்து செல்லும் போது என்ன பணி செய்ய வேண்டும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது மனதுக்குள் வடிவம் பெறும். மனத்தில் வடிவம் பெற்றதையே நான் செயலாக்குவேன். அதாவது , சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியை ஒட்டி அந்த கிராமம் முழுவதும் நாட்டுக் காய்கறிகளின் விதைகளை அந்த கிராமத்துக்கு வழங்கியிருந்தேன். ஏழு காய்கறிகளின் விதைகள் அளிக்கப்பட்டது. விதைகளாக அளிக்கப்பட்டது. இம்முறை அந்த காய்கறிகளின் விதைகளை சாண உருண்டைகளில் இட்டு முளைக்க வைத்து கிராம மக்களுக்கு வழங்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. முளைக்காத விதைகள் எவை என்பது சாண உருண்டைகளிலிருந்து எவை மேலெழுகின்றன என்பதில் தெரிந்து விடும். முளைக்கும் விதைகள் அனைத்தும் மக்களிடம் சென்று சேரும் என்பதால் காய்கறி மகசூல் அதிகரிக்கும்.
ஒரு புரிதலுக்காக இந்த விஷயத்தை விளக்குகிறேன். கிராமத்தில் ஆயிரம் வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் 5 முளைத்த பூசணி விதைகள் தரப்படுகின்றன எனக் கொள்வோம். அப்போது 5000 பூசணிச் செடிகள் அங்கே முளைக்கும். ஒவ்வொரு பூசணிச் செடியும் குறைந்தபட்சம் 10 காய் காய்த்தது என்றால் அங்கே 50,000 பூசணிக்காய்கள் உற்பத்தியாகும்.
வழக்கமான நிலை என்றால் 1000 வீடுகளில் அதிகபட்சமாக 100 வீடுகளில் சுயமாக தங்கள் ஆர்வத்தின் காரணமாக விருப்பத்தின் காரணமாக ஆடிப்பட்டத்தில் பூசணி போடுவார்கள். மீதி இருப்பவர்கள் ஆர்வம் இல்லாதவர்கள் விருப்பம் இல்லாதவர்கள் என்று அர்த்தம் அல்ல. அவர்கள் காய்கறி விதைகளை ஆடிப்பட்டத்தில் போட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அது செயலாக மாறுவதில் நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கும். நாம் அவர்களைத் தேடிச் சென்று வழங்கும் போது அதனை பெரிதாக வரவேற்று பெற்றுக் கொள்கிறார்கள்.
சென்ற முறை ஆடி மாதக் கடைசியில் முடிவெடுத்து நாட்டுக் காய்கறி விதைகளை வழங்கினோம். இம்முறை ஆனி 15 தேதிக்குள் சாண உருண்டைகளில் விதைகளை இட்டு முளைக்க வைத்து ஆடி 1ம் தேதி அன்று மக்களுக்கு வழங்கிட வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். இன்று ஆயிரம் குடும்பங்களை சந்தித்ததன் விளைவாக உருவான செயல்திட்டம் இது.
இன்று மக்களைச் சந்தித்த போது மேலும் ஒரு விஷயம் தோன்றியது. அதாவது , ‘’காவிரி போற்றுதும்’’ மக்களிடம் அறிமுகம் என்ற நிலை தாண்டி பரிச்சயம் என்ற நிலையில் உள்ளது. அவ்வாறு எனில் அந்த கிராமத்தில் பத்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என எண்ணினேன். மாதம் ஒருநாள் அந்த குழு கூடி ஆலோசித்து செயல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டேன்.
இன்னொரு விஷய்மும் தோன்றியது. நாம் ஒவ்வொரு முறையும் முழு கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளையும் சந்திக்கிறோம். அல்லது அங்கு அதிகம் பரிச்சயம் உள்ளவர்களை அடிக்கடி சந்திக்கிறோம். ஒரு வாரத்துக்கு ஒரு தெரு என எடுத்துக் கொண்டு ஒவ்வொரு விவசாயியையும் நேரில் சந்தித்து அவரிடம் இருக்கும் விவசாய நிலம் எவ்வளவு வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் நிலம் எவ்வளவு விவசாயத்தில் அவர் எதிர்பார்க்கும் வருமானம் என்ன விவசாயம் சார்ந்த வேறு விஷயங்களில் அவருக்கு ஆர்வமிருக்கிறதா என உரையாடி அவர் நிலத்தை தோட்டத்தை நேரடியாக பார்வையிட்டு அவருக்கு ஆலோசனைகள் வழங்குவது தேவையான ஒன்று என்று தோன்றியது.
ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்றால் அவருக்கு காய்கறி விதைகள் வழங்கலாம். வயலில் 20 தேக்கு மரம் வளர்க்க அவருக்கு ஆர்வம் இருக்கும் என்றால் அதனை அவருக்குக் கொடுக்கலாம். தண்ணீர் பாய்ச்சலுக்கு வழியில்லாமல் இருந்தால் வறட்சியிலும் வளரக்கூடிய பூச்செடிகளைத் தரலாம். தேனீ வளர்ப்பில் ஆர்வம் இருந்தால் அதற்கான உதவிகளைச் செய்யலாம். அந்த சந்திப்பால் இத்தனை வாய்ப்புகள் உருவாகும். முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
நண்பர் விரும்பிய விதத்தில் ஆயிரம் நெல்லிகள் மக்களைச் சென்றடைந்துள்ள்ன. நண்பருக்கு கிராம மக்கள் சார்பாக எனது நன்றி.