Friday, 19 May 2023

கல்வி

 கல்லுதல் என்னும் வினைச்சொல்லிலிருந்து ‘’கல்வி’’ என்னும் பெயர்ச்சொல் உருவானது. கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். நிலத்தைத் தோண்டி அதன் உள்ளிருப்பதை அறிவது போல அகத்தைத் தோண்டி அறிவினை அறிவதே கல்வி எனப்படுகிறது. நிலத்தைத் தோண்டுதல் என்னும் செயல் விவசாயத்துடன் தொடர்புடைய ஒன்றாகவே பொருள்கொள்ளப்படுகிறது. ஒரு மரத்தினை நட மண்ணைத் தோண்டி குழி எடுக்கிறோம். ஒரு செடியினை நடவும் அச்செயல் தேவை. விதையினைத் தூவக் கூட மண்ணை பதப்படுத்த வேண்டியுள்ளது. 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் தொடர்பாக நான் சந்திக்கும் நபர்களில் பலரிடம் உரையாடுவதுண்டு. அவர்களிடம் நாம் எவ்விதமான பணிகளை முன்னெடுக்கிறோம் என்பது குறித்து சுருக்கமாகவோ விரிவாகவோ எடுத்துரைப்பேன். எல்லா மனிதர்களும் சமூகத்தின் சிறு சிறு பகுதிகளே. சமூகத்தின் கூட்டு நனவிலியின் ( collective conscious) சிறு துளிகளே தனி மனிதர்களின் அகமும். எனவே சமூக மனநிலையை அறியவும் நான் உரையாடலைப் பயன்படுத்துவேன். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகளைத் துவக்கிய போது நான் சில விஷயங்களை அவதானித்தேன். அதாவது நமது சமூகத்தில் எல்லா மனிதர்களுக்குமே ஏதேனும் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. செய்யும் செயல்கள் அனைத்துமே எண்ணிய வண்ணம் விரும்பிய வண்ணம் நிகழ்ந்து விட வேண்டும் என்றும் விருப்பம் இருக்கிறது. அது இயல்பானது. ஒரு செயல் செய்ய அது முதல் படி. எனினும் அதில் அடுத்தடுத்த சில சில படிநிலைகள் உள்ளன. சிருஷ்டி ஸ்திதி சம்ஸ்காரம் என வகைப்படுத்துகிறது. சிருஷ்டி என்பது துவக்கம். அதன் பின் துவங்கிய ஒன்று நிலைப்பெற வேண்டும். பின்னர் அது தன் இயல்பான அடுத்த வளர்ச்சிக்கு செல்ல வேண்டும். எந்த பொதுப்பணியும் சமூகத்தை நோக்கியே செய்யப்படுகிறது. எனவே அந்த செயலைச் செய்பவர் எவ்விதம் அதில் முதன்மையான ஒரு தரப்போ அதே போல சமூகமும் அந்த செயலில் உள்ள முக்கியமான தரப்பு. சமூகப் பழக்கம், சமூக மனநிலை ஆகியவை பொதுப்பணியில் பெரும் பங்கை வகிக்கும். பொதுப்பணி ஆற்றுபவன் எந்த செயலையும் இந்த அடித்தளத்திலிருந்தே பிரக்ஞைபூர்வமாக எழுப்புவான். 

பலர் சோர்வடையும் இடம் இது. நாம் நல்லெண்ணத்துடன் நற்செயலைத் துவக்கினோமே ஏன் நாம் நினைத்த விதத்தில் அது நடக்கவில்லை என சோர்ந்து விடுவார்கள். பொதுப்பணி ஆற்றுபவர்கள் எப்போதும் எந்நிலையிலும் சோர்வடையவே கூடாது. தங்கள் முயற்சியையும் கைவிடக்கூடாது. சில முயற்சிகள் நாம் எதிர்பார்த்ததை விட நல்ல பலன்களைத் தரும். நமது எதிர்பார்ப்பு சில முயற்சிகளில் ஈடேறாமல் போகும். நாம் அவை அனைத்தையும் கூர்ந்து நோக்கியவாறே இருக்க வேண்டும். 

’’ஆடிப்பட்டம்’’ நிகழ்வுக்கு பலரிடமும் உரையாடினேன். சென்ற ஆண்டு நாட்டு காய்கறி விதைகளை கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் அளித்து மூட்டை மூட்டையாக காய்கறிகள் விளைந்த அனுபவம் நமக்கு இருக்கிறது. அந்த அனுபவத்திலிருந்து இம்முறை காய்கறி நாற்றாக அளிக்க முடிவு செய்தோம். விதையை அளிப்பதில் நமக்கு உள்ள வசதி என்பது நாம் அவற்றை எளிமையாக வழங்கி விடலாம் ஆனால் சில விதைகள் முளைக்காமல் போக வாய்ப்பு உண்டு. நாற்றாக வழங்கும் போது விதை முளைத்து நாற்றாகி நல்ல வளர்ச்சி பெற்று விட்டது என்பதால் முளைக்குமா முளைக்காதா என்ற ஐயம் தேவையில்லை. முளைப்புத்திறன் சிறப்பாக உள்ள விதைகளே நாற்றாக விவசாயியைச் சென்றடையும். இந்த முறையில் நாம் நாற்றங்கால் தயாரிக்க வேண்டும் என்பது நம் முன் உள்ள பெரிய பணி. குழித்தட்டு நல்ல முறை எனினும் அதனினும் எளிய முறை ஏதேனும் இருக்குமா என தேடிக் கொண்டிருந்தேன். 

நர்சரியில் பணி புரியும் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து எனது செயல்திட்டத்தைக் கூறிக் கொண்டிருந்தேன். அடிக்கடி நர்சரி செல்வதால் அங்கு பணி புரியும் அவர் எனக்கு நண்பரானார். அவர் என்னிடம் சொன்னார் . ‘’சார் ! டீ கடையில் பேப்பர் டீ கப் இருக்கும். நீங்க பாத்திருப்பீங்க. அந்த மாதிரி பேப்பர் கப் வாங்கிக்கங்க. அந்த கப்ல மக்குன சாண எருவை நிரப்புங்க. ஒண்ணு ஒண்ணுலயும் மூணு விதை போடுங்க. லேசா தண்ணி ஸ்பிரே பண்ணுங்க. ஒரு வாரம் பத்து நாள்ல முளைச்சுடும்.’’

’’பூசணி, பீர்க்கன், சுரை, பரங்கின்னு நாலு வகை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்னொன்னுலயும் மூணு நாத்து. அப்ப மொத்தம் 12 நாத்து. ஒரு வீட்டுக்கு 12 பேப்பர் கப். இல்லயா?’’

’’ஏன் சார் 12? நாலு கப் போதும். இது அத்தனையுமே கொடி வகை தான். ஒரு கப்ல மூணு பூசணியை விதையைப் போட்டா மூணுமே கப்ல முளைக்கும். அப்படியே பேப்பர் கப்போட பூமியில புதைச்சுட்டா மூணு பூசணியும் மூணு திசையில பரவும். அதே போலவே பரங்கி, சுரை,  பீர்க்கனும் ஒவ்வொரு டைரக்‌ஷன்ல அதுங்களுக்குள்ள அட்ஜஸ்ட் பண்ணிட்டு பரவிக்கும்.’’

கல்வி என்னும் பெயர்ச்சொல்லை ஏன் கல்லுதல் என்னும் வினைச்சொல்லில் இருந்து உருவாக்கிக் கொண்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.