இந்த கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம்.
யுத்த காண்டத்தில் கம்பன் ஒரு பாடலில் துமி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். வானர சேனை கடலில் பாலம் அமைக்க பாறைகளைத் தூக்கிப் போட்ட போது கடல் துளிகள் வானுலை அடைந்தன. மீண்டும் அமுதம் கடைகிறார்களோ என்ற ஆர்வத்துடன் தேவர்கள் பூமியைப் பார்ப்பதாக செய்யுள். சோழ மன்னன் இந்த பாடலை இயற்றிய கம்பனைப் பாராட்டுகிறார். மற்ற புலவர்களும் பாராட்டுகின்றனர். ஒட்டக்கூத்தர் ஒரு வினா எழுப்புகிறார். இந்த துமி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்கிறார். கம்பர் சாமானிய மக்கள் துளி என்ற வார்த்தைக்கு துமி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்று கூற தான் கேள்விப்பட்டதில்லை என்கிறார் ஒட்டக்கூத்தர். அவர்கள் விவாதம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் நிறைவடைகிறது. ஓரிரு நாளில் மன்னரும் கூத்தரும் கம்பரும் மாறுவேடத்தில் நகருலா செல்கிறார்கள். அப்போது ஓர் மூதாட்டி மோர் விற்றுக் கொண்டு வருகிறார்கள். அப்போது மூவரும் அவளை நிறுத்தி மோர் வாங்குகிறார்கள். தனது மண்பானையில் இருந்த மோரை மரக்கரண்டி கொண்டு கலக்குகிறாள் அந்த மூதாட்டி. அப்போது மூவரிடமும் சற்று தள்ளி நில்லுங்கள் ; துமி தெரிக்கும் என்கிறாள். கூத்தர் துமியா என்கிறார். ஆம் துமி மோர்த்துமி என்கிறாள் மூதாட்டி. சாமானிய மக்கள் துளி என்கிற வார்த்தையை துமி என்று கூறுவார்கள் என்று கம்பன் சொன்னது உண்மையே என கூத்தரும் அரசரும் உணருகிறார்கள். கம்பர் தனக்காக சொல்லரசியே மோர்க்கார மூதாட்டியாக வந்ததாக எண்ணுகிறார் என்று அந்த கதை செல்கிறது.
எனது நண்பர் ஒருவரின் மகன் பெயர் தவன். தவன் என்கிற பெயர் எனக்கு புதிதாக இருந்தது. இந்த பெயரை எதனால் இட்டீர்கள் என்று கேட்டேன். தவம் செய்யக்கூடியவன் தவன் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் இட்டேன் என்றார். எனக்கு அது நூதனமாக இருந்தது. இதற்கு முன் இவ்வாறு ஒரு பெயரை நான் கேட்டதில்லை. பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு கம்பராமாயணம் வாசித்த போது கம்பர் அகத்தியரை ‘’அரும் தவன்’’ என்ற அடைமொழியுடன் அழைத்திருப்பதைக் கண்டேன். எனக்கு ஒரே ஆச்சர்யம். தவன் என்ற பதம் கம்பன் கையாண்டது என்பதை அறிந்ததால். மறுநாள் நண்பரைச் சந்தித்த போது ‘’தவன்’’ என்ற பெயர் குறித்து யாரும் கேட்டால் அது கம்பன் பதம் என்று சொல்லுங்கள் என்று கூறினேன்.