Sunday 7 May 2023

கம்பனில் நுழைதல்

கம்ப இராமாயணம் நமக்கு பள்ளியில் தமிழ்ப் பாடநூலின் ஒரு பகுதியாக அறிமுகம் ஆகியிருக்கும். அதன் பின்னர் மேடைப் பேச்சாளர்கள் கம்பனின் காவியத்திலிருந்து பேசும் பட்டிமன்றங்களையோ அல்லது வழக்காடு மன்றங்களையோ கேட்டிருப்போம். பட்டிமன்றங்களில் பேசுபவர்கள் தங்கள் நினைவிலிருந்தே பல பாடல்களைக் கூறுவதைக் கேட்கும் போது நமக்கு வியப்பாக இருந்திருக்கும் . ஒருவரால் எப்படி இத்தனை பாடல்களை நினைவில் வைத்திருக்க முடிகிறது என்று எண்ணி எண்ணி வியப்போம். பின்னர் எப்போதாவது ஒருமுறை கம்பராமாயண நூலை பார்க்க நேர்ந்தால் அதன் பக்க எண்ணிக்கையும் நூலின் அளவும் நம்மை மலைக்கச் செய்து விடும். நூலின் சில பக்கங்களை புரட்டிப் பார்த்து விட்டு எடுத்த இடத்தில் வைத்து விடுவோம்.  

சிறுவயதில் நான் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் காரைக்குடி கம்பன் கழக கம்பன் விழா உரைகளை பலமுறை கேட்டிருக்கிறேன். எனினும் பின்னாட்களில் நான் கம்பனில் நுழைய ஒரு சம்பவம் காரணமாக இருந்தது. 

எனது நண்பர் ஒருவருடன் நான் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்றனுக்குச் சென்றிருந்தேன். நண்பர் கம்பராமாயணத்தில் ஆர்வம் உடையவர். கோவிலுக்குள் நுழையும் போது அவர் ஒரு பாடலைச் சொன்னார் : ‘’ நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்து ‘’ என்ற பிரபலமான கம்பன் பாடல். கும்பகர்ணம் விபீஷணனிடம் கூறியது. வீடணன் ராமனது சேனையில் வந்து இணைந்து கொள் என கும்பகர்ணனிடம் கூறுகிறான். அப்போது கும்பகர்ணன் சொல்லும் பதில் அது. நண்பர் சொன்னார் : நீர்க்கோலம் போன்ற அழகிய வாழ்வை விரும்பி நான் இராவணை விட்டு வர மாட்டேன் என்று கும்பகர்ணன் சொன்னதாக. அவர் கூறியவற்றை என் மனம் கேட்டுக் கொண்டது. என்றாலும் ஆலயத்தில் இருக்கும் நேரமெல்லாம் ‘’நீர்க்கோலம் நீர்க்கோலம் நீர்க்கோலம்’’ என அந்த வார்த்தையே மனதில் ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆலய வழிபாடை நிறைவு செய்து ஆலயத்தில் இருந்த விருட்சம் ஒன்றின் அடியில் அமர்ந்தோம். நான் நண்பரிடம் சொன்னேன். ‘’இந்த நீர்க்கோலம் ங்கற வார்த்தையை கம்பன் அழகிய கோலம்னு சொல்ல சொல்லியிருப்பான்னு நினைக்கறீங்களா’’ என்றேன். நண்பர் யோசித்தார். நான் சொன்னேன் : ’’ஒரு குமரகுருபரர் செய்யுள் இருக்கு. நீரில் குமிழி இளமை நெடுஞ்செல்வம் நீரில் சுருட்டு நெடுந்திரைகள் நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் வழுத்தாது எம்பிரான் மன்று’’. கம்பன் வாழ்ந்த காலத்துக்கு ஐந்நூறு வருஷம் பிந்தி வந்த குமரகுருபரரோட இந்த பாட்டு கூட கம்பனோட ‘’நீர்க்கோலம்’’ங்கற சொல்லோட இன்ஸ்பிரேஷனா இருக்கலாம். கம்பன் ‘’நீர்க்கோலம்’’னு சொல்லி அர்த்தப்படுத்தறது ‘’நீர்க்கோலம் போன்ற அழகிய வாழ்வு’’ன்னு இல்ல. ‘’நீர்க்கோலம் போன்ற நிலையில்லாத வாழ்வு’’ன்னு தான் அர்த்தப்படுத்தறான்னு தோணுது. தண்ணீரில் போடப் படும் கோலம் போல நிலையில்லாத வாழ்வு’’ நாங்கள் இருவரும் இந்த விஷயத்தை யோசித்தவாறு அமைதியாக சில நிமிடங்கள் இருந்தோம். தொடர்ந்து நான் சொன்னேன் ‘’ இந்த வார்த்தை மூலமா கும்பகர்ணனை பெரிய ஹைட்டுக்கு கம்பன் கொண்டு போறார். அவன் அதிகமா சாப்டுட்டு எப்போதும் தூங்கிக் கிட்டே இருக்கற ஆள்னு எல்லாரும் நினைக்கறாங்க. அவன் அறிஞன். வாழ்க்கையோட அர்த்தம் அவனுக்கு தெரியும். இராமன் கூட இருந்தா இலங்கை அரசாங்கமே கிடைக்கும்னு தெரிஞ்சும் ‘’உலக வாழ்க்கை நிலையில்லாதது’’ங்கற வைராக்கியம் அவன் ட்ட இருக்கறதால அது தேவையில்லைன்னு சொல்றான்.’’ நாங்கள் இருவருமே அந்த கம்பனின் சித்திரத்துக்குள் சென்று விட்டோம்.

எனக்கு குமரகுருபரரின் நீரில் குமிழி இளமை பாட்டு தெரிந்ததால் கம்பனின் உத்தேசத்தை நோக்கிச் செல்ல அது உதவியது. மொழிப்பரப்பு என்பது பெருநதி போன்றது. நாம் நம் உள்ளங்கைகளில் அதன் அர்த்தத்தை அள்ளிக் குடிக்கிறோம். 

இந்த சம்பவத்துக்குப் பின் கம்பனின் ஒரு வாயில் எனக்குத் திறந்ததாக எண்ணினேன். அந்த எண்ணமே மகிழ்ச்சி அளித்தது. கம்பனில் நுழைய அறிஞர் பி.ஜி. கருத்திருமனின் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ என்ற நூல் பெருந்துணையாய் விளங்கக் கூடியது. அந்நூலை வாசித்தேன். வாசிக்கத் தொடங்கிய ஓரிரு நாளில் அதனை முழுமையாக வாசித்து முடித்தேன். அழகும் செறிவும் மிக்க எளிய நடை கொண்ட கம்பனின் 930 பாடல்களை அவனுடைய 10,000 பாடல்களிலிருந்து தேர்வு செய்திருப்பார். ஒரு புறம் பதம் பிரிக்கப்பட்ட கம்பன் பாடல். அதன் எதிர்ப்புறம் மிக எளிய விளக்கம். கம்பனின் காவிய அழகுக்கு சிறு ஊறும் செய்யாத விளக்கம். அந்த நூல் கம்பனை மேலும் அணுக்கம் கொள்ளச் செய்தது. இந்த நூல் tamilvu(dot)org இணைய தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. 

குகன் இராமனைக் காணுக் காட்சியை ஒரு நண்பருக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். குகனை கம்பன் சில பாட்ல்கள் முன்னால் ‘’சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்’’ என்கிறான். அதாவது அவன் கோபமில்லாமல் சாதாரணமாகப் பார்த்தால் கூட அவன் பார்வை பற்றி எறிவது போல அனல் கொண்டிருக்கும் என்கிறான். இது சில நிமிடங்கள் முன்பு. இலக்குவனைக் கண்டு அவன் தான் இராமன் என அவன் தாள் பணிகிறார்கள் குகனும் அவன் குடிகளும். இலக்குவன் தான் இராமன் அல்ல இராமன் உள்ளே இருக்கிறார் தங்கள் வருகையை அவருக்கு அறிவிக்கிறேன் என குடிலின் உள்ளே செல்கிறான். குகனை அவன் பார்த்து சில வினாடிகளே ஆகியிருக்கின்றன. இராமனிடம் உங்களைக் காண ஒருவன் வந்திருக்கிறான். என்று கூறி வந்திருப்பவன் ‘’ உள்ளம் தூயவன் தாயினும் நல்லன் எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை’’ எனச் சொல்கிறான். 

ஒரு முறை மட்டுமே சில வினாடிகள் மட்டுமே இலக்குவன் குகனைப் பார்த்தான். அதற்குள் எப்படி உள்ளம் தூயவன் என்றான். இராம இலக்குவர்கள் அன்னையைப் பிரிந்து வந்திருக்கிறார்கள். இலக்குவனுக்கு குகனைப் பார்த்ததும் தன் அன்னையரின் நினைவு வந்து விட்டதா ? ஏன் தாயினும் நல்லன் என்றான். தூய உள்ளம் என்பது மேலான நிலை. தாய் என்பது மேலும் மேன்மையான நிலை. ஆனால் அவன் இந்த அறிமுகச் சொற்கள் மட்டும் போதும் என எண்ணவில்லை. மேலும் சென்று ‘’கங்கை நாவாய்களின் இறை’’ என இறை நிலைக்கு கொண்டு செல்கிறான் என்றேன். நண்பர் இங்கே ‘’இறை’’ என்பதற்கு தலைவன் என்பது பொருள் சொன்னார். இலக்குவன் முதலில் மேன்மையான மனிதன் என்கிறான் ; பின்னர் அன்னையினும் மேலானவன் என்கிறான் ; இந்த உணர்வின் நீட்சியில் ’’கங்கை நாவாய்களின் இறைவன்’’ என்கிறான். இங்கே தலைவன் என்பதிலும் இறைவனே பொருத்தமாக இருக்கும். சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் எவ்வாறு சில கணங்களில் இறைவன் ஆகி விட்டான்? 

கம்பன் வாலி வதைப்படலத்தில் ராமநாமத்தை ‘’தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்’’ என்கிறான். அவன் குடிலை அணுகியதும் குகன் அவ்விதம் ஆனானோ? 


திரு. பி.ஜி. கருத்திருமனின் நூலின் இணைப்பு 


https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ2k0py#book1/


கம்பராமாயணம் - கோவை கம்பன் கழக வெளியீட்டின் இணைப்பு 


https://www.tamilvu.org/ta/library-l3700-html-l3700ind-133880