எப்போதுமே ஒரு துளி நெருப்புதான் பெரும் காட்டை எரிக்கிறது. தீவிரமான அடர்த்தி மிக்க சிலரின் தன்னம்பிக்கைதான் மாபெரும் சமூக மாறுதல்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றது.
அறிவுச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பவனாக நான் எப்போதுமே மனிதர்களைச் சந்திப்பதிலும் மனிதர்களுடன் உரையாடுவதிலும் ஆர்வம் மிக்கவன். மேலும் பொதுப்பணி சார்ந்து எப்போதும் மக்கள் திரளுடன் இணைந்திருக்கிறேன். பொதுப்பணிகளில் நான் கவனித்த விஷயம் ஒன்று உண்டு. முன்னேற்றம் என்பதை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள். முயற்சி செய்தல் என்பதை வாழ்வின் அடிப்படையான இயல்பாக பெண்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். சமூக மாற்றம் முன்னேற்றம் குறித்த சொற்கள் அவர்கள் முகங்களுக்கு ஒளி தருவதை நான் எப்போதும் காண்கிறேன். எத்தனை தடைகள் இருந்தாலும் எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் இமைப்பொழுதும் ஓயாமல் அவர்கள் முயல்கிறார்கள். உண்மையில் அவர்கள் பண்பாடு அவர்களுக்கு அளித்திருக்கும் கொடை அது ; ஆசி அது. இந்த மண்ணில் பெண் தெய்வங்களே பேராற்றல் மிக்கவை. மாரியம்மனையையும் துர்க்கையையும் காளியையும் எப்போதும் உபாசிப்பவர்கள் என்பதால் முழுமை நோக்கிய வளர்ச்சி மீதான விருப்பம் என்பது அவர்களிடம் எப்போதும் இருக்கிறது.
நேற்றும் இன்றும் நண்பர் ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நம்பிக்கையும் உற்சாகமுமே அவரது இயல்புகள். நம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்த ஒருவர் தனது சூழல் முழுவதையும் நம்பிக்கையாலும் உற்சாகத்தாலும் நிறைக்கிறார். தனது நுண்ணிய அறிவுத் திறனாலும் தீரா உழைப்பாலும் தனது துறையில் தனி இடம் பெற்றிருப்பவர் அவர். பொதுப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது அவரது பெரும் விருப்பம். அதற்கான செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது செயல்திட்டங்களை அவர் சொல்லி கேட்ட போது என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த மானுடமும் மகிழ்ச்சி அடையும் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை என் மனதில் எழுந்தது.
அவர் காட்டை வெந்து தணிக்கும் துளி நெருப்பு.