தென்னாற்காடு மாவட்டம் பண்ணுருட்டிக்கு அருகில் உள்ள எனது நண்பர் ஒருவரைச் சந்திக்க இன்று சென்றிருந்தேன். நண்பர் என்றால் மிகப் பல வருடங்களாக எனது நண்பர். நாங்கள் சந்தித்துக் கொள்வதற்கும் பேசிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அவரிடம் தொலைபேசியோ அலைபேசியோ இல்லை. சந்திக்க வேண்டும் என்றால் நேராக அவருடைய வீட்டுக்குச் சென்றால்தான் உண்டு. விவசாயியான அவர் கடுமையான உழைப்பாளி. வீடு வயல் மாடுகள் என இருப்பவர். சந்தித்து ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டதால் இன்று காலை செல்வது என முடிவு செய்தேன்.
பைக்கில் செல்லலாம் ; ஆனால் பைக்கை விட அவரைப் பேருந்தில் சென்று சந்திப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. காலை எழுந்து குளித்து விட்டு கிளம்பினேன். இன்று சற்று முன் நேரத்திலேயே காலை உணவு தயாராக இருந்தது. உணவருந்தி விட்டு பேருந்து நிலையத்துக்கு நடக்கத் தொடங்கினேன். வீட்டிலிருந்து பேருந்து நிலையம் 2.25 கி.மீ தூரம் இருக்கும். மெல்ல நடந்து கொண்டிருந்தேன். இவ்வாறு பேருந்து நிலையத்துக்கு நடந்து செல்வது என்னை ‘’பொதுஜனம்’’ என உணர வைக்கும். பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று பேருந்தில் ஏறிச் சென்று தங்கள் பணிகளை ஆற்றும் ஆயிரக்கணக்கான பொதுஜனங்களில் நானும் ஒருவன் என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் இருக்க வேண்டும் என எண்ணிக் கொள்வேன். இதைப் போன்ற எண்ணங்களும் செயல்களும் குறியீட்டு ரீதியிலானவை தான். நான் தினமும் பேருந்தில் செல்பவன் அல்ல. எப்போதாவது ஒருநாள் செல்பவனே. பெரும்பாலும் 40 கி.மீ சுற்றளவுக்குள் செல்ல பைக்கை பயன்படுத்துபவனே. எனினும் பேருந்தில் செல்லவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன். கல்லூரியில் படித்த போது ரயிலிலும் பேருந்திலும் தினமும் சென்று வந்த அனுபவம் உண்டு. ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தவாறு மக்கள் திரளை கவனித்தவாறே இருக்கும் பழக்கம் சின்ன வயதிலிருந்தே உண்டு. 1.75 கி.மீ தூரம் சென்றதும் எனது நண்பர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் என்னருகே வந்தார் ; பேருந்து நிலையம் செல்கிறேன் என்று சொன்னதும் ‘’டிராப்’’ செய்கிறேன் என்றார். முதலில் ஒரு ஸ்வீட் கடைக்கு செல்லச் சொன்னேன். நண்பருக்கு இனிப்புகள் வாங்கிச் செல்லலாம் என எண்ணினேன். மணிக்கூண்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றோம். கடை மூடியிருந்தது. நண்பர் கடை திறக்க 9 மணி ஆகி விடும் என்றார். எனவே ஸ்வீட் வாங்காமல் பேருந்து நிலையம் சென்றோம்.
சிதம்பரம் பேருந்து தயாராக இருந்தது. ஏறி அமர்ந்து கொண்டேன். பத்து நிமிடம் கழித்து வண்டி எடுத்தார்கள். மெல்ல வண்டி போய்க் கொண்டிருந்தது. 15 கி.மீ ல் இருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் தாண்டுவதற்குள் இரண்டு பிரைவேட் பேருந்துகள் எங்கள் வண்டியை தாண்டிச் சென்று விட்டது. எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் சிதம்பரம் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்து மாறி பணிக்குச் செல்ல வேண்டியவர். மிகுந்த அதிருப்தியுடன் இருந்தார். இரு பேருந்துகள் முந்தித் சென்றதால் நன்மையா இடரா என அறிய பிரபஞ்சம் இயங்கும் விதிகளை முழுமையாகத் தெரிந்து கொண்டால்தான் இயலும் என நான் மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். பிரபஞ்ச விதிகள் தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டத்தில் இருக்கும் கயிறுகள் போல இருக்குமா என்ற திசையில் எனது யோசனை சென்றது.
பழைய தென்னாற்காடு மாவட்டம் மிகப் பெரிய மாவட்டம். அந்த மாவட்டத்தின் சிதம்பரம் , காட்டுமன்னார்குடி வட்டங்கள் வீராணம் ஏரி பாசனம் பெறுபவை. எனவே அந்த இரண்டு தாலுக்காக்களின் மக்கள் பழக்க வழக்கங்கள் காவிரி டெல்டாவைப் போல இருக்கும். மற்ற தாலுக்காக்கள் முற்றிலும் வேறு பின்னணி கொண்டவை.
சிதம்பரம் சென்றதும் ஒரு பிரைவேட் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். அந்த வண்டி வழக்கமான பாதையாக இல்லாமல் ஒரு புதிய பாதையில் சிறு சிறு கிராமங்கள் வழியாக பண்ணுருட்டி சென்றது. செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் பத்து நிமிடம் வண்டி நின்றது. வண்டி டிரைவருக்கு உணவு கொண்டு வந்து கேரியரில் கொடுத்து விட்டு செல்கிறார்கள். இன்று ஏதோ தவிர்க்க இயலாத காரணத்தால் பத்து நிமிடம் உணவு தயாரிப்பதில் தாமதம் என கொண்டு வந்தவர் டிரைவரிடம் சொல்லி விட்டு போனார். வண்டி நின்ற சமயத்தில் இறங்கி அங்கிருந்த சிறு கடைத்தெருவில் ஒரு மூதாட்டி வைத்திருந்த மாம்பழத்தில் ஒரு கிலோ வாங்கிக் கொண்டேன். இரண்டு மாம்பழங்கள் இருந்தன. பொதுவாக எனக்கு இந்த மாதிரி விஷயங்களில் பழக்கம் கிடையாது. ஆனால் ஸ்வீட் வாங்கிச் செல்வதை விட மாம்பழம் வாங்கியது நிறைவளித்தது. ஒரு விவசாயிக்கும் ஒரு சிறு வணிகருக்கும் வாய்ப்பு தருகிறோம் என்ற நிறைவு. உண்மையில் கையில் ஒரு சிறு துணிப்பை கொண்டு சென்றிருந்தேன். மடித்து பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தேன். மாம்பழம் அதில் வாங்கியதும் மேலும் இருபது ரூபாய்க்கு வெள்ளரிப் பிஞ்சு வாங்கி பையில் போட்டுக் கொண்டேன். என் கையில் துணிப்பை இருப்பதைக் கண்டு அந்த வணிகர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை மேலும் சில பிஞ்சுகளை அளித்தார்.
ஒரு காலத்தில் தென்னாற்காடு மாவட்ட பஸ் டிரைவர்கள் வாகனத்தை மிக வேகமாக இயக்குவதற்கு பெயர் போனவர்கள். தமிழ்நாட்டு அரசுப் பேருந்துகளில் தென்னாற்காடு ஓட்டுநர்களுக்கு என ஒரு சிறப்புப் பெயர் உண்டு. இப்போது முக்கிய சாலைகள் மேம்பட்டிருப்பதால் எல்லா பேருந்துகளும் ஏறக்குறைய ஒரே விதமாக செல்கின்றன. காத்திருந்த பத்து நிமிடத்தை தனது வேகத்தில் சரி செய்து பண்ணுருட்டி கொண்டு சேர்த்தார்.
அங்கிருந்து ஒரு அரசுப் பேருந்தில் ஏறி சில கி.மீ தூரத்தில் இருந்த அவரது கிராமத்துக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்தார். அவருடைய குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ந்தார்கள்.
உண்மையில் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருவரை பத்து ஆண்டுகள் கழித்து சந்தித்தால் கூட கடைசியாக நேற்று சந்தித்தது போல உரையாடிக் கொண்டிருப்பேன். அன்பும் பிரியமும் உணர்வுகள். அவை அடிக்கடி சந்தித்தாலும் எப்போதாவது சந்தித்தாலும் எனக்கு ஒரே விதமாகவே இருக்கும்.
என்னுடைய மோட்டார்சைக்கிள் பயணம் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அவருக்கும் எனக்கும் பொது நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். நான் அவரிடம் என பயண அனுபவங்கள் சிலவற்றை சொன்னேன். அவர் ஆர்வத்துடன் விருப்பமாகக் கேட்டுக் கொண்டார். பருவமழைக்கும் இந்திய விவசாயத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து எனது பயணத்தின் அனுபவங்களின் அடிப்படையில் சொல்லிக் கொண்டிருந்தேன்.
பின்னர் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். தனது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு 2000 தேக்கு மரக் கன்றுகள் வழங்க முடியுமா என்று கேட்டார். அவர் அவ்விதம் கேட்டது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. பருவமழையை ஒட்டி அளிக்க முயல்கிறேன் என உறுதி அளித்தேன்.
குறுகிய நேரத்தில் மதிய உணவு தயார் செய்திருந்தார்கள். மாங்காய் சாம்பார், தக்காளி ரசம், மோர். தொடுகறியாக வத்தல் , மோர்மிளகாய். சாப்பிட்டு விட்டு பயணங்கள் குறித்து பேசிக் கொண்டோம். நடைப் பயணங்கள், மோட்டார் சைக்கிள் பயணங்கள், ரயில் பயணங்கள் என அனைத்துக் குறித்தும் பேச்சு வந்தது. நீண்ட நடைப்பயணம் ஒன்றை மேற்கொள்ள விரும்புவதாகக் கூறினேன். நாளும் பொழுதும் அமைய வேண்டும்.
நான்கு மணி நேரம் அங்கு இருந்திருப்பேன். மதியம் 3.30 மணி அளவில் புறப்பட்டேன். நண்பர் தனது வாகனத்தில் கொண்டு வந்து பண்ணுருட்டியில் டிராப் செய்தார். ஒரு டவுன் பேருந்தில் ஏறி சிதம்பரம் வந்தேன். அந்த வாகனத்தில் ஓட்டுநர் டவுன் பேருந்தை இயக்குவதில் ஏற்படும் நஷ்டங்கள் குறித்து தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார். சிதம்பரத்திலிருந்து ஒரு பிரைவேட் பஸ். பேருந்து ஊரை நெருங்குகையில் நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து என்னை ‘’பிக் அப்’’ செய்யுமாறு சொன்னேன். நண்பர் வந்து அழைத்துச் சென்றார்.
மக்கட் பெருகடல் பார்த்து மகிழ்ச்சி கொள் ; மானுட சமுத்திரம் நானென்று கூவு என்கிறான் ஒரு கவிஞன்.