தொழில் நிமித்தம் அறிந்த தொழிலாளர் ஒருவருக்கு என்னுடைய கட்டுமானப் பணி நிமித்தம் இன்று அலைபேசியில் பேசினேன். நண்பர் மிகவும் துயருற்றிருக்கிறார் என்பதை அவரது குரலில் இருந்த பாதிப்பு உணர்த்தியது. என்ன விஷயம் என்று விசாரித்தேன். அவருடைய அன்னைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று சொன்னார். பக்கவாதத்தால் பல ஆண்டுகள் பாதிக்கப்பட்டிருந்தவர். ஐந்து நாட்களுக்கு முன்னால் உடல்நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. இரண்டு மூன்று மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார். இனி சிகிச்சை ஏதும் அளிப்பதற்கு இல்லை என்று மருத்துவமனையில் தெரிவித்து விட்டனர். திட திரவ உணவு எதனையும் உடல் ஏற்கவில்லை. இன்று காலை வீட்டுக்கு தன் அன்னையை அழைத்து வந்து விட்டார்.
படுக்கையில் இருந்த நண்பரின் அன்னையை சென்று பார்த்தேன். நண்பரின் உறவினர்களும் அண்டை வீட்டுக்காரர்களும் குழுமியிருந்தனர். மூச்சு சீராக இயங்கிக் கொண்டிருந்தது. மூச்சு மட்டும் இருக்கிறது. கண்கள் மூடியிருக்கின்றன. அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை. சூழலின் ஒலிகள் ஏதும் அவருக்குக் கேட்கிறதா என்பதும் தெரியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முதியோர் இல்லத்தில் என் நண்பரின் அன்னை இருந்தார். அவரைப் பார்க்க நண்பருடன் அடிக்கடி செல்வேன். அந்த முதியோர் இல்லத்தைப் பராமரிக்கும் பெண்மணி முதியோர்கள் மரணப் படுக்கையில் இருக்கையில் எவ்விதம் அவர்கள் மூச்சு நிகழும் என்பதைக் கூறினார். அவர் தன்னார்வலராக அந்த முதியோர் இல்லத்தைப் பராமரித்தவர். தனது பணியில் நூற்றுக்கணக்கான மரணத்தை தன் கண் முன் கண்டிருப்பதாகக் கூறினார். நினைவு தப்பி மூச்சு மட்டும் சீராக இருந்தால் ஓரிரு நாளில் மூச்சு மிக வேகமாக நிகழ ஆரம்பிக்கும். பின்னர் சில மணி நேரங்களில் நின்று விடும் என்று கூறினார். நேரில் பார்த்த அனுபவம் அவருக்கு.
உடல் உறுப்புகள் செயலிழந்த பின்னும் பிராணன் இயங்குகிறது.
நமது யோக மரபில் பிராணனை அவதானிப்பது என்பது மிக முக்கியமான பயிற்சி. பிராணனுக்கும் மனத்துக்கும் உடலுக்கும் இடையே துல்லியமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் பிரமிக்கத்தக்க அளவில் செயல் விளைவுகளை உருவாக்க முடியும் என்பதும் நம் யோக மரபின் முடிபு.
நண்பரிடம் ‘’ நீங்கள் உங்கள் அன்னைக்குச் செய்ய சாத்தியமான எல்லா கடமைகளையும் பணிகளையும் செய்து விட்டீர்கள். அன்னை அருகிலேயே இருங்கள்’’ என்று கூறினேன்.