Sunday, 1 October 2023

கான்கிரீட்

 நகரில் ஒரு சிறிய வணிக வளாகம் ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுளேன். அந்த கட்டுமானப் பணியிடம் மிகவும் பரபரப்பாக வாகனங்களும் மக்களும் சென்று வரும் ஒரு கடைத்தெருவில் அமைந்துள்ளது. சாலையின் அகலமும் பெரியது அல்ல ; நடுத்தரமானது. அந்த கட்டுமானத்துக்கு மேற்கூரை கான்கிரீட் இன்று செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. கட்டுமானப் பொறியாளரின் வாழ்வில் பணியில் மேற்கூரை கான்கிரீட் பணி செய்யும் நாள் மிகவும் பரபரப்பானது. சிறிய கட்டிடமோ பெரிய கட்டிடமோ கான்கிரீட் பணி நாள் பொழுதில் நிறைவு பெற்றிட வேண்டும். அதாவது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள். எனினும் காலை 6 மணிக்கு பணியாளர்கள் வருவது என்பது துர்லபம். காலை 9 மணி ஆகி விடும். காலை 9 மணிக்குப் பணி துவங்கினால் அது மிகவும் சீக்கிரம் தொடங்கப்பட்டதாக அர்த்தம். கான்கிரீட் போட கம்பி கட்டும் பணி முழுமை பெற வேண்டும். கம்பி கட்டும் பணி சிறிய பரப்பளவு என்றால் 5 நாள் நடக்கும். பெரிய பரப்பளவு என்றால் எட்டிலிருந்து பத்து நாள் நடக்கும். பெரிய பரப்பளவு என்றால் வாரக்கணக்கில் வேலை செய்ய மாட்டார்கள். ஆட்களை அதிகப்படுத்தி எட்டு நாட்களில் வேலையை முடித்து விடுவார்கள். கம்பிப் பணி நிறைவு ஆன பின் எலெக்ட்ரிகல் வேலை செய்பவர்கள் வந்து பி.வி.சி பைப் கூரையில் பதிப்பார்கள். பின்னர் கான்கிரீட் அன்று கான்கிரீட் போடுபவர்களும் கொத்து வேலை செய்பவர்களும் வருவார்கள். கட்டுமானப் பணியில் தச்சர்கள் தவிர மற்ற அனைவரும் பங்களிக்க வேண்டிய வேலை கான்கிரீட் வேலை. கூரை கான்கிரீட் முடிந்ததும் அடுத்த ஒரு வாரத்துக்கு கூரையின் மேற்பரப்பை ஈரமாக வைத்திருப்பதே வேலை. அந்த நாட்களில் வேறு எந்த கட்டுமானப் பணியும் செய்ய முடியாது. எனவே கான்கிரீட் முடிந்த ஒரு வாரம் எவருக்கும் பணி இருக்காது. கம்பி கட்டுபவர் கான்கிரீட் போடும் அன்று காலை வரை தனது பணிகளைச் செய்து கொண்டிருப்பார். எலெக்ட்ரிகல் வேலை செய்பவர்கள் அன்று காலை தான் வந்து மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வேலை செய்வார்கள். கான்கிரீட் போடுபவர்கள் அன்று காலை தான் வந்து 10 அடி உயரத்துக்கு கான்கிரீட்டை மேலே ஏற்றுவதற்கான சாரம் முதலியவற்றை அமைப்பார்கள். சிறிய பரப்பிலான கட்டிட கான்கிரீட் என்றால் கூட குறைந்தபட்சம் 20 பேர் பணி செய்வார்கள். அன்றைய தினம் மிகவும் பரபரப்பானது. சிமெண்ட் மூட்டை அன்று காலை தான் கட்டுமான இடத்துக்கு வரும். இரண்டு மூன்று நாள் முன்னதாக ஜல்லி மணல் சொல்ல வேண்டும். கட்டுமான பணியிடத்தில் அதிக அளவில் ஜல்லி மணல் கொட்டி வைக்க இடவசதி இல்லையெனில் அவை கான்கிரீட் அன்று காலைதான் பணியிடத்துக்கு கொண்டு வர முடியும். கொஞ்ச நேரம் கொட்டி வைத்திருந்து பயன்படுத்தி விடலாம். 

நான் 4 நாட்களுக்கு முன்னால் ஜல்லி சொல்லியிருந்தேன். எனக்குத் தேவை 3 யூனிட். சப்ளையர் ஃபோன் செய்து 4 யூனிட் வண்டிதான் வருகிறது. 4 யூனிட் சப்ளை செய்யட்டுமா என்று கேட்டார். நான் சரி என்று சொன்னேன். ஆனால் அவருக்கு மருநாள் 6 யூனிட் லாரியில் ஜல்லி வந்து விட்டது. என்னிடம் நடந்ததைச் சொன்னார். நான் 6 யூனிட்டையும் பணியிடத்தில் கொட்டி விடுங்கள் என்றேன். ஜல்லி வந்த அன்றே எம் - சாண்ட் 3 யூனிட் வந்து விட்டது. பணியிடம் முழுக்க மெட்டீரியல்களால் நிறைந்து விட்டது. இன்று காலை சிமெண்ட் வந்தது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் மதியம் 2 மணிக்கு கான்கிரீட் பணியைத் துவங்கலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஞாயிறு மதியம் கடைத்தெரு சற்று ஓய்வாக இருக்கும் என்று கருதினோம். 

இன்று கம்பி கட்டும் பணியாளர்கள் காலை 6 மணிக்கு பணியிடத்துக்கு வந்து பணியைத் துவக்கி விட்டனர். நான் காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். உடன் குளித்துத் தயாராகி பணியிடம் செல்ல எண்ணியிருந்தேன். இருப்பினும் 6 மணிக்கே பணியாளர்களுக்கு ஃபோன் செய்ய என் மனம் ஒப்பவ்ல்லை. 6.40க்கு ஃபோன் செய்தேன். கட்டுமானப் பணியிடத்தில் இருப்பதாகவும் காலை 6 மணிக்கே வந்து விட்டதாகவும் கூறினர். உடன் தயாராகி பணியிடம் சென்றேன். பணிகள் நடந்து கொண்டிருந்தன. நான் சென்ற 5 நிமிடத்துக்குள் எலெக்ட்ரிக்கல் பணியாளர்கள் வந்து விட்டனர். அவர்களிடம் அவர்கள் செய்ய வேண்டியவற்றைக் கூறினேன். கான்கிரீட் வேலை செய்பவர்கள் 10 பேர் வந்து சாரம் அமைக்கத் தொடங்கினர். சிமெண்ட் கடைக்காரரிடமிருந்து ஃபோன் வந்தது. சிமெண்ட் வந்து கொண்டிருப்பதாக. சிமெண்ட் இறக்க வேண்டிய இடத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன். அவரவர் பணியை அவரவர் செய்து கொண்டிருந்தனர். 

பணியிடத்துக்கு அருகில் ஒரு சிவாலயம் உள்ளது. அங்கே சென்றேன். இறைவனை கை கூப்பி வணங்கினேன். இறைவன் சர்வேஸ்வரன். சர்வத்துக்கும் இறைவன். மாந்தர் அனைவருமே அவன் முன் சிறு தூசி. அவன் முன் நிற்க நிற்க அந்த உணர்வு பெருக வேண்டும் என எண்ணுவேன். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என உச்சரிப்பேன். காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி என துதிப்பேன். 

பணி நடந்து கொண்டேயிருந்தது. உச்சி வெயில் 12 மணி ஆனது. அப்போது தான் துவங்கினோம். நாங்கள் உத்தேசித்திருந்த 2 மணிக்கு இரண்டு மணி நேரம் முன்னதாக பணி துவங்கப்பட்டது. மாலை 4 மணி வரை கான்கிரீட்டிங் பணி நடந்து நிறைவு பெற்றது. 

இப்போது கட்டுமானத் துறையில் ரெடி மிக்ஸ் கான்கிரீட் வந்து விட்டது. இருப்பினும் கான்கிரீட் மெஷின் வைத்து 4 மணி நேரம் நடந்த பணி 2 மணி நேரத்தில் நடந்திருக்கும். கான்கிரீட்டை பைப் வழியாக மேலேற்றும் பணியும் நேரமெடுக்கும் பணி தான். அதில் எதிர்பாராத இடர்கள் ஏற்பட்டாலும் மேலும் ஓரிரு மணி நேரம் தாமதம் ஏற்படும். எனவே இரண்டும் சமமான நேரம் எனக் கருதி பழைய முறை மெஷின் கான்கிரீட் பக்கம் எங்கள் மனங்கள் சாயும். 

இப்போது கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் தரைத்தள மேற்கூரை இன்று நடைபெற்றது. இன்னும் ஒரு மாதத்தில் முதல் தள மேற்கூரை கான்கிரீட் நிகழும். அதை காலைப் பொழுதிலேயே துவங்க வேண்டும் என எண்ணிக் கொண்டோம். 

ஒவ்வொரு கான்கிரீட்டையும் காலையிலேயே துவங்கிட வேண்டும் என கட்டுமானத் துறைக்கு வந்த நாள் முதல் நினைக்கிறோம். இன்றும் அவ்வாறே நினைத்துக் கொண்டோம்.