Saturday 28 October 2023

உண்ணாவிரத நாட்குறிப்புகள் - (நாள் 5)

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது பூர்வீகம் ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில். பணி நிமித்தம் இங்கே இருக்கிறார். அவரது பெற்றோர் பூர்வீகத்தில் வசிக்கின்றனர். அவர்களை அடிக்கடி சென்று பார்த்து வருவார். அவ்வப்போது நானும் அவருடன் செல்வதுண்டு. நான் விரதமிருப்பது அறிந்து என்னைக் காண வந்திருந்தார். ஊருக்குச் சென்று பெற்றோரைச் சந்திக்க உள்ளேன் என்று சொன்னார். ஒரு சிறிய பயணம் செய்யலாமே என்ற ஆர்வத்தில் நானும் உடன் வருகிறேன் என்று சொன்னேன். நண்பரின் காரில் நாங்கள் இருவரும் புறப்பட்டோம். 

ஐந்தாம் நாளான இன்று சோர்வாக இருக்கிறது என்று நண்பரிடம் சொன்னேன். காரில் பயணிக்கும் போது நிறைய மனிதர்களைக் காண நேர்வது சற்று உற்சாகம் அளிக்கக்கூடும் என்பதால் இந்த பயணத்தை விரும்பினேன். நான் விரும்பியது போல நிகழவும் செய்தது. நண்பருடன் உண்ணாவிரதம் குறித்து உற்சாகமாக பேசிக் கொண்டு சென்றேன். 

நண்பரின் தந்தை ஒரு தேவார ஓதுவார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூர் ஆலயம் ஒன்றில் தினமும் தேவாரம் பாட இவரை அழைத்திருந்தார்கள். இவரும் சென்றிருந்தார். அவரை எனக்கு பல ஆண்டுகள் தெரியும். சிங்கப்பூர் சென்று வந்ததும் மிகவும் உற்சாகமாக இருந்தார். தினமும் காலை , மதியம், மாலை, இரவு என நான்கு வேளையும் பல தேவாரப் பதிகங்களைப் பாடுவதும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேவாரம் குறித்து எழுப்பும் வினாக்களுக்கு விடையளித்து சம்பாஷிப்பதும் பெரும் மகிழ்ச்சியை அவருக்குத் தந்திருக்கின்றது என்பதை உணர முடிந்தது. சிங்கப்பூரில் சுயமாக சமையல் செய்து மூன்று வருடமும் சாப்பிட்டிருக்கிறார். இங்கிருந்து செல்லும் போது அவருக்கு சமையல் தெரியாது. சிங்கப்பூரில் அவரே சமைத்து உண்ண வேண்டிய கட்டாயம். சமையல் கற்றுக் கொண்டார். 

யக்‌ஷ பிரசன்னத்தில் யக்‌ஷன் யுதிர்ஷ்ட்ரனிடம் கேட்கிறான். ‘’யுதிர்ஷ்ட்ரா ! உலகில் கவலையில்லாத மனிதன் யார் ?’’ . யுதிர்ஷ்ட்ரன் அதற்கு பதில் சொல்கிறான். ‘’எந்த மனிதன் சுயமாக சமைத்து உண்கிறானோ அவன் கவலை இல்லாதவன்’’ 

எனக்கு நானாக சமைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணம் உண்டு. பலரிடம் சமையல் குறித்து கேட்டிருக்கிறேன். அவர்கள் சர சர என்று கூறுவார்கள். அவர்கள் பல வருட பழக்கத்தை எளிதில் சொல்லி விடுவார்கள். ஒரு எளிய சமையல் நடைமுறையை சொல்லித் தர வேண்டும். அப்போது தான் அதனை செய்து பார்த்து நம்மால் செய்ய முடிகிறது என்ற நம்பிக்கை வந்து செய்து பார்க்க முடியும். ஒரு சில முறை செய்து சமைக்க வருகிறது என்ற நம்பிக்கை உண்டானால் மேலும் மேலும் சமையலில் நேர்த்தியைக் கொண்டு வரலாம். நண்பரின் தந்தையிடம் சாம்பார் வைப்பது எப்படி என்று கேட்டேன். அவர் சமீபத்தில் கற்றுக் கொண்டவர் என்பதால் எளிமையாக அதனை என்னிடம் சொன்னார். 

‘’முதலில் துவரம்பருப்பை தூய்மை செய்து கொண்டு ஒரு பாத்திரத்தில் அதனை இட்டு அதிக அளவில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். துவரம்பருப்பு வேகும் போது அதிக தண்ணீர் எடுத்துக் கொள்ளும். எனவே அதிக தண்ணீர் தேவை. அந்த தண்ணீரிலேயே கொஞ்சம் எண்ணெய் மஞ்சள்தூள் சேர்க்க வேண்டும். பாத்திரத்தை குக்கரில் வைத்து சூடாக்கவும். குக்கரை மூட வேண்டாம். துவரம்பருப்பு வேகும் நேரத்தில் வாணலியில் எண்ணெய் எடுத்துக் கொண்டு சூடாக்கவும். லேசாக சூடானவுடன் அதில் கடுகு , வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆக வேண்டும். பின்னர் தாளித்த பொருட்களை நன்றாக வெந்திருக்கும் துவரம்பருப்பில் சேர்த்து கொதிக்க வைக்கவும் வாழைக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் என காய்கறிகளை வெட்டி கொதிக்கும் துவரம்பருப்பில் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நன்றாகக் கொதிக்க விடவும். அடுப்பில் இருந்து இறக்கும் போது பெருங்காயப் பொடி தூவிக் கொள்ளவும்’’ 

சாம்பார் தயாரிக்க இந்த முறை எளிதாக இருக்கிறது என நான் எண்ணினேன். 

உண்ணாவிரதம் முடிந்த பின்னர் சுயமாக சமைத்து சாப்பிட வேண்டும் என இருக்கிறேன். உலகில் கவலையில்லாத மனிதனாக இருக்க.