Saturday 28 October 2023

அன்புள்ள நண்பனுக்கு

அன்புள்ள நண்பனுக்கு,

நலமாக இருக்கிறாயா? நான் நலமாக இருக்கிறேன். 

இன்றுடன் ஐந்து நாட்கள் உண்ணாமல் இருந்திருக்கிறேன். இன்று மிகவும் சோர்வாக இருந்தது. சோர்ந்தது உடலா மனமா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. மனச்சோர்வு இருக்கும். லௌகிகமான பல பணிகள் இருக்கின்றன. பல பொறுப்புகள் இருக்கின்றன. முழுக்க முழுக்க நான் மட்டுமே செய்யக் கூடிய பணிகள். உடல் சோர்வும் இருக்கிறது. மாடிப்படி ஏறினால் கூட உடல் சோர்வடைவதை உணர முடிகிறது. 

அகம் விதவிதமான உணர்வுகளால் கொந்தளிக்கிறது நண்பா. ஜூரம் வந்து படுத்திருக்கும் போது நம் அகம் யோசிக்கும் அல்லவா. அதைப் போன்ற சிந்தனைகள். உடன் உடல் சரியாகி எழுந்து நாம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய வேண்டும் என்று நினைப்போம். அதைப் போன்ற எண்ணம். என்னால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்த 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற முடிவை ஏன் எடுத்தேன். இப்போது இருக்கும் மனநிலையில் எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. நீண்டநாள் விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். விரதத்துக்கு முன் விரதத்துக்குப் பின் என வாழ்க்கை இரண்டாக மாறும் என்று எதிர்பார்த்தேன். உலகில் எல்லா சமயங்களும் உண்ணாவிரதத்தை வலியுறுத்துகின்றன. இந்த 5 நாட்கள் எனக்கு எவ்வளவோ விஷயங்களை உணர்த்தியுள்ளன. என் மனம் பயணிக்கும் பாதையை உன்னால் எளிதில் கண்டு கொள்ள முடியும் என்பதால் உன்னிடம் இவற்றைக் கூறுகிறேன். 

பசியுற்று இருக்கும் இந்த காலத்தில் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் மகத்தானவை என்பதை உணர்கிறேன் நண்பா. அகங்காரம் என்பது பெருஞ்சுமை. அதனைக் கைவிட்டோம் என்றால் அகமெங்கும் நிறையும் இனிமையை உணர முடியும். 

அகங்காரம் நம் உடல் இயக்கத்தைச் சூழ்ந்து கொள்கிறது. நம் மனம் முழுதும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவ்வளவு பெரிய உலகைக் காண முடியாமல் திரைக்குள் இருப்பவர்கள் என ஆகிறோம். 

நாம் ஒவ்வொரு விஷயத்தையும் அறிய நேரும் போதும் அகங்கார அறியாமையின் சுமைகள் சிலவற்றைக் குறைத்துக் கொள்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அறிதலுக்குத் தயாராக இருப்பவன் இனிமை கொண்டவனாக இருப்பான். 

நீ அறிவாய். நான் என்றுமே வாழ்க்கை மேல் மனிதர்கள் மேல் பெரும் பிரியமும் நம்பிக்கையும் கொண்டவன் என்பதை. நம்மையும் நம் சக மனிதர்களையும் நுகர்வு எல்லா திசைகளிலும் சூழ்ந்துள்ளது. மிதமிஞ்சிய நுகர்வு சமூகமெங்கும் நோய்மையைப் பரப்புகிறது. உடல் சார்ந்த நோய்மைகள், உள்ளம் சார்ந்த நோய்மைகள். இந்த நோய்மை நீக்கப்பட வேண்டும் நண்பா. எல்லா மனிதர்களும் இனிய ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமாக வேண்டும் நண்பா. சாத்தியமாக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது.

அன்புடன்,
பிரபு