Monday 30 October 2023

உண்ணாவிரத நிறைவு - ( நாள் 7)

 கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
-திருக்குறள் (படைச்செருக்கு) (772)
***

21 நாட்கள் திட்டமிட்ட உண்ணாவிரதத்தை இன்றுடன் நிறைவு செய்கிறேன். 

பசி மிகக் கடுமையாக இருந்தது. கடும்பசியுடன் லௌகிகப் பணிகளையும் செய்ய மிகவும் சிரமமாக உணர்ந்தேன். இன்று உணவருந்தி விரதத்தை நிறைவு செய்து கொண்டேன். 

ஒவ்வொரு நாள் ''‘உண்ணாவிரத நாட்குறிப்புகள்’’ என எழுதியிருந்தாலும் இந்த 7 நாட்களின் மொத்த அனுபவத்தை அதன் சாரம் என நான் உணர்வதை பதிவு செய்ய வேண்டும் எனத் தோன்றியது. எனக்கே அது பெரிய அளவில் உதவிகரமாக இருக்கக்கூடும். 

சில ஆண்டுகளுக்கு முன், 6 நாட்கள் உணவருந்தாமல் இருந்தேன். அதன் பின்னர் ஒருமுறை. இப்போது 7 நாட்கள். ஒவ்வொரு முறையும் எனக்கு லௌகிகப் பணிகள் அதிக அளவில் இருந்த சமயத்திலேயே இந்த விரதங்களை மேற்கொண்டேன். இந்த முறை உணவருந்தும் வேளை வரும் போது சில எளிய மூச்சுப்பயிற்சிகள் செய்தேன். அவை அந்த வேளைக்கு வயிற்றின் ஜீரண் சுரப்பிகளை அமைதிப்படுத்தின. உணவருந்தும் வேளைகளில் பசி இல்லை ; ஆனால் அந்த வேளையின் பசி அடுத்த சில மணி நேரங்கள் கழித்து ஏற்பட்டது. பசி கடுமையாக இருந்தது. உண்ணாவிரதமே பசியை உணர்வதற்காகத்தான். அந்த விதத்தில் பசியை மீண்டும் உணர்ந்தது ஒரு முக்கியமான விஷயமே. 

வயிறு காலியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த உண்ணாவிரதம் மூலம் உணர்ந்து கொண்டேன். யோகாசனங்கள் செய்ய வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பது ஓர் அவசியத் தேவை. நாம் காலை எழும் போது வயிறு காலியாக இருக்கிறது. மதிய உணவை 2 மணிக்கோ 3 மணிக்கோ அருந்துவோம் எனில் மாலையில் வயிறு காலியாவதற்குள் தேனீர் அல்லது காஃபி அருந்தி விடுவோம். பின் இரவு உணவுக்கான நேரம் வந்து விடும். இது ஒரு நடைமுறை நிதர்சனம். இந்த 7 நாட்களில் எப்போதுமே காலி வயிறு தான் என்பதால் எந்த நேரமும் பயிற்சிகளுக்கு ஏதுவாய் இருந்தது புதிய புதுமையான அனுபவமாக இருந்தது. 

பால் , காஃபி, தேனீரை இந்த விரதத்துக்குப் பின் முழுமையாக தவிர்த்து விடலாம் என இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை எனக்கு பெரும்பயன் அளிக்கும் ஒரு விஷயம் இது. 

உணவருந்துவதால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியை உடலை வலிமைப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த விரதத்தின் மூலம் கண்டுகொண்டேன். நாம் புத்தகங்களில் படித்திருப்போம். எத்தனையோ பேர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் நமக்கு என அனுபவம் ஆகும் போது தான் ஒரு விஷயம் குறித்து நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். ஓட்டப்பயிற்சி பலவகைகளில் உடலை வலிமைப்படுத்துவது என்று தோன்றுகிறது. ஓட்டத்துக்கான பயிற்சி எடுத்து பலமுறை தோல்வியுற்றிருக்கிறேன். கொஞ்ச தூரம் ஓடினாலே மூச்சு திணறும். வியர்த்துக் கொட்டும். இம்முறை மீண்டும் முயல இருக்கிறேன். ஓட்டப்பயிற்சி எடுப்பது நீண்ட தூரம் நடப்பதற்கும் மலையேறுவதற்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் அதனைப் பழக விரும்புகிறேன். 

விரத காலத்தில் ஒருமுறை ஒரு விஷயத்துக்காக சினம் ஏற்பட்டது. அப்போது சினத்தை வெளிப்படுத்தினேன். அப்போது வயிற்றின் சுரப்பிகள் அடைந்த மாற்றத்தைக் கவனித்த போது அயர்ந்து போனேன். சினம் கொள்ளும் போது உடலின் அத்தனை ஆற்றல் செலவாகிறது. சினம் தவிர்த்தல் என்னும் பண்பைப் பழகிக் கொள்ளுதல் எத்தனை நலம் பயப்பது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன். 

நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஓர் அற்புதப் பரிசு. ஓர் அற்புதமான பரிசு கிடைத்தால் அதனை எத்தனை மகிழ்வுடன் உற்சாகத்துடன் அணுகிக் கொண்டாடுவோமோ அத்தனை கொண்டாட வேண்டியவை நம் ஒவ்வொரு நாளும். 

விரத காலத்தில் 110 நாட்கள் உண்ணாவிரதமிருந்த குழந்தை குறித்த செய்தியை அறிய நேர்ந்ததை நல்நிமித்தமாகவே உணர்கிறேன். அந்த குழந்தையை வணங்குகிறேன். 

அடியேன் எளியவன். அடியேன் மிக எளியவன். இச்சொற்களையே அடியேனைப் பற்றி கூறிக் கொள்ள இயலும். வேறு எதுவும் இல்லை. 

உண்ணாவிரத தினங்களில் எனக்காக இறைமையிடம் பிரார்த்தித்துக் கொண்ட எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.  வாழ்த்து தெரிவித்த ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. 

ராம நாமத்தை வாழ்நாள் முழுதும் உச்சரித்த மகாத்மா காந்தியை இக்கணம் எண்ணிக் கொள்கிறேன்.