Monday, 2 October 2023

கான்கிரீட் பணியாளர்கள்

அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என கட்டுமானம் இருவகையாக வகைப்படுத்தப்படும். எந்த கட்டிடமும் இந்த இரண்டு வகையான நிலைகளைக் கொண்டிருக்கும். அஸ்திவாரம் அதனை ஒட்டிய பணிகள் அடிக்கட்டுமானத்திலும் அஸ்திவாரத்துக்கு மேலே நிகழும் பணிகள் மேற்கட்டுமானத்திலும் சேரும். புவியை அகழ்ந்து புவி மட்டத்துக்கு கீழே சென்று பணி புரிவதால் அடிக்கட்டுமானம் சற்று கடுமையான பணி. புவி மட்டத்திலிருந்து எட்டு அடி ஆழம் செல்கிறோம் என்றாலும் அத்தனை அடி குழி தோண்டி அத்தனை மண்ணையும் வெளியே எடுத்துக் கொட்டுதல் என்பது பெரும் பணி. 

20 ஆண்டுகளுக்கு முன்னால், கட்டுமானப் பணிக்கு வந்த போது கான்கிரீட் பணியாளர்கள் பணி செய்யும் முறையை அறிந்து கொண்டேன். இவர்கள் 30லிருந்து 50 பேர் கொண்ட சிறு சிறு குழுவாக இருப்பார்கள். ஊரில் ஆறு அல்லது ஏழு இடங்களில் குடியிருப்பார்கள். இவர்கள் அனைவரும் சொந்தக்காரர்களாக இருப்பார்கள். 

குடும்பத்தில் இருக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரும் கான்கிரீட் பணியிலும் மண்ணைத் தோண்டும் பணியிலும் ஈடுபடுவார்கள். காலை 7 மணிக்கு பணிகளுக்குப் புறப்படுவார்கள். தூக்கு வாளிகளில் பழைய சோறு எடுத்துக் கொள்வார்கள். பணியிடத்துக்குச் சென்று அங்கே உணவருந்துவார்கள். பின்னர் பணியைத் துவங்குவார்கள். மிகக் கடுமையான உடல் உழைப்புப் பணி. கோடரி, மண்வெட்டி இவற்றைப் பயன்படுத்தி மண்ணை வெட்டி எடுப்பார்கள். இப்பணி புரியும் ஆண்கள், பெண்களின் உடல் வலிமை என்பது அளப்பரியது. சிறு சிரமமும் இல்லாமல் மண், ஜல்லி, மணல் ஆகியவற்றை அள்ளி சுமந்து கொட்டுவார்கள். அனேகமாக ஊரில் நடக்கும் எல்லா அடிக்கட்டுமான கான்கிரீட் பணிகள் சாலைப் பணிகளும் இவர்களின் மூலமே நிகழும். 

இவர்கள் நாள் முழுவதும் செய்யும் பணிகளை சாமானியர்களால் 10 நிமிடம் கூட செய்து விட முடியாது. மூச்சு திணறி மயங்கி விடுவார்கள். இந்த குழுக்கள் விஜயநகரப் பேரரசின் இராணுவத்தில் மிக முக்கியமான போர்வீரர்களாக இருந்திருக்கிறார்கள் என சரித்திரம் சொல்கிறது. 

கிட்டத்தட்ட ஊரின் எல்லா கட்டுமானத்திலும் இவர்களின் பங்களிப்பு இருப்பதால் இவர்களின் பொருளியல் நிலை நன்றாக உள்ளது. எனினும் ஒரு வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்களுக்கு அவர்களுக்கு பணி இருக்கும் என்பதால் பகல் பொழுதில் இவர்கள் குடியிருப்பு முழுவதும் காலியாகி விடும். மாலை பணி முடிந்து தான் வீடுகளுக்கு வருவார்கள். எனவே பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்ள மாட்டார்கள். சிறு குடிசைகளில் வசிப்பார்கள். இவர்களின் சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் இருக்கும். அங்கே ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய பரப்பளவில் அமைந்த வீடுகள் கட்டியிருப்பார்கள். 

இவர்கள் குடும்பங்களின் இளம் தலைமுறையினர் இப்போது தான் கல்விக்குள் வரத் துவங்கியிருக்கின்றனர். இவர்கள் குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கல்விப்பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளேன்.