Tuesday 10 October 2023

அகவலிமை

 நாம் பல விஷயங்களுக்குப் பழகியிருக்கிறோம். சமூகப் பழக்கங்கள் பல நம்மைச் சூழ்கின்றன. நூறாண்டுகளுக்கு முன்னால் நம் தினசரி வாழ்க்கையில் காஃபி, தேனீர் ஆகிய பானங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. வீடுகளில் நம் உணவில் அவை இல்லை. பின்னர் பல்வேறு காரணங்களால் மக்கள் அதனைப் பழக ஆரம்பித்தனர். இன்று நாம் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தேனீர் அல்லது காஃபி அருந்துகிறோம். நண்பர்கள் உறவினர்களை தேனீர் அல்லது காஃபி அளித்து உபசரிக்கிறோம். பால், சர்க்கரை, காஃபித் தூள் ஆகிய மூன்றுமே வயிற்றின் செரிமான சுரப்பிகளுக்கு அவ்வளவு உகந்தவை அல்ல எனத் தெரியவந்தாலும் நம்மால் தேனீர் , காஃபி பழக்கத்திலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை. 

இந்த முறை 21 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப் பின் முழுமையாக பால், காஃபி, தேனீர் ஆகியவற்றைத் தவிர்க்கலாம் என இருக்கிறேன். 

21 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப் பின் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டும் எடுத்துக் கொள்ள உள்ளேன். காலை 7 மணிக்கு ஒரு வேளை. மாலை 5 மணிக்கு ஒரு வேளை. வாரத்தில் ஒருநாள் வியாழக்கிழமை முழுமையான உபவாசமிருக்க எண்ணியுள்ளேன். வாரம் ஒரு நாள் எனில் ஆண்டுக்கு 52 தினங்கள் முழுமையாக உணவு தவிர்த்த நாட்களாக அமையும். வீட்டில் இருக்கும் போது என்னால் சில நிமிடங்கள் கூட பசி பொறுக்க முடியாது என்பதே எனது இயல்பு. சில விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். கடுமையாக முயற்சி தேவைப்படும் என்றாலும் அதனை அளிப்பதே சரி என்று படுகிறது. 

இந்த முயற்சிகள் அனைத்துமே மார்க்க சகாயமாக விளங்கக்கூடியவை என்பதை அறிவு ஏற்றுக் கொள்கிறது. உடலும் மனமும் ஏற்க வேண்டும். 

பெரிய லௌகிக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். பொதுப்பணிகளில் ஆற்றுவதற்கென ஏகப்பட்ட பணிகளும் திட்டங்களும் உள்ளன. படைப்புச் செயல்பாடுகளையும் ஆற்றுகிறேன். முயற்சிகளையும் பணிகளையும் செயல்பாடுகளையும் தீவிரமாக்கிக் கொள்ள அகவலிமையைக் கூட்ட வேண்டும். இந்த 21 நாட்கள் அதற்கு உதவும் என்று கருதுகிறேன். 

ஆழி சூழ் உலகின் ஒவ்வொரு கணப்பொழுதும் அரியவை. இந்த உணர்வு வாழ்வின் கடைசிக் கணம் வரை இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.