அமைப்பாளர் ரூஃப் கான்கிரீட் முடிந்த பின் ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும் என எண்ணி சில தனிப்பட்ட விஷயங்களைத் திட்டமிட்டிருந்தார். ஒரு நாளும் இல்லாத திருநாளாக சிறு சிறு பணிகள் வருவதும் அவை முழுமையாக நிறைவு பெற கூடுதல் நாட்களை எடுத்துக் கொள்வதும் கான்கிரீட்டுக்குப் பின் சற்று கூடுதலாகவே நிகழ்கிறது. 3 ஏக்கரில் தேக்கு பயிரிட்டு தேக்கு பண்ணையை உருவாக்கியிருக்கும் ஐ டி கம்பெனி ஊழியர் தனது பண்ணைக்கு கான்கிரீட் காலம் அமைத்து அதில் கேட் போட வேண்டும் என்று அமைப்பாளரிடம் அவர் வணிக வளாகம் அஸ்திவாரப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போதிலிருந்து சொல்கிறார். தரைத்தளம் ரூஃப் கான்கிரீட்டே முடிந்து விட்டது. இப்போது தான் அந்த பணியைச் செய்யவிருக்கிறார். கேட் பட்டறையிலிருந்து சென்று விட்டது. நாளை ஜல்லி , மணல் இறக்கி பணி ஆரம்பிக்க வேண்டும்.
அமைப்பாளரின் ஒரு நண்பர் தனது இடத்தில் ஒரு சிறு அறை ஒன்றை அமைத்துத் தர சொன்னார். அறை கட்டப்பட்டு விட்டது. பூச்சு வேலை செய்து டைல்ஸ் ஒட்டித்தர நண்பர் சொல்கிறார். தேக்குப் பண்ணை பணி முடிந்ததும் அதனையும் செய்ய வேண்டும்.
அமைப்பாளருக்கு ‘’கடலில் எப்போது அலை ஓய்வது ? எப்போது ஸ்னானம் செய்வது ?’’ என்னும் பழமொழி ஏன் கான்கிரீட்டுக்குப் பின் அடிக்கடி ஞாபகம் வருகிறது என்பது புரியவே இல்லை.