இன்று காலை 10 மணிக்கு பணியிடத்துக்கு சென்றிருந்தேன். கான்கிரீட்டில் நீர் நிறுத்த நேற்று மாலையே ‘’பாத்தி கலவை’’ அமைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை நல்ல மழை எனவே கான்கிரீட்டின் மேல் நீர் தேங்கி நின்றது வசதியாகிப் போனது ; தனியாக தண்ணீர் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை.
வீட்டிலிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது. எனது நண்பர் ஒருவர் மூத்த குடிமகன். பணி ஓய்வு பெற்று பத்து ஆண்டு ஆகிறது. அவரது மனைவி நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி என்னிடம் தெரிவிக்கப்பட்டது. உடன் மருத்துவமனைக்கு விரைந்தேன். நண்பரைச் சந்தித்தேன். அரசு மருத்துவமனையில் படிவங்கள் சிலவற்றை நிரப்பிக் கொண்டிருந்தார். ஆதார் அட்டையின் நகலையும் ரேஷன் கார்டு நகலையும் அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் சென்று நண்பரின் மனைவியைப் பார்த்தேன். அவர் மயக்க நிலையில் இருந்தார். அவர் வீட்டில் பணி புரியும் பெண்மணி அவருடன் இருந்தார். எனது நண்பர் ஒருவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிகிறார். அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். விபரம் சொன்னேன். அவர் உடன் மருத்துவமனையின் எமர்ஜென்சி பிரிவுக்கு பொறுப்பான மருத்துவரைத் தொடர்பு கொண்டு நோயாளியின் உடல்நிலை குறித்து விசாரித்திருக்கிறார். நோயாளிக்கு ஏற்பட்டிருப்பது ‘’மாசிவ் ஹார்ட் அட்டாக்’’ . இதய அடைப்பை நீக்கும் மருந்து தரப்பட்டுள்ளது. எவ்வளவு விரைவில் தஞ்சாவூர் செல்ல இயலுமோ அவ்வளவு விரைவில் செல்வது நல்லது. இது நண்பரான மருத்துவர் என்னிடம் சொன்ன செய்தி. நான் விபரத்தைப் புரிந்து கொண்டு நண்பரிடம் நாம் ஒரு ஆம்புலன்ஸில் புறப்படுவோம் என்று சொன்னேன். நண்பர் சென்னை செல்லலாம் என விரும்பினார். நான் அவ்வாறே செய்வோம் என்று சொன்னேன். ஒரு இ.சி.ஜி எடுத்தார்கள். அது நார்மலாக இருந்தது. எனவே சென்னை செல்ல இயலும் என புரிந்து கொண்டேன். ஆம்புலன்ஸில் புறப்பட்டோம். இந்த இ.சி.ஜி சென்னையில் உள்ள மருத்துவர் ஒருவருக்கு ஒளிப்படமாக அனுப்பப்பட்டது. அவர் அதனைப் பார்த்து விட்டு சென்னை வரை வர வேண்டாம் ; புதுச்சேரியில் ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கே அட்மிட் ஆகச் சொன்னார். பயணத்தின் வழி புதுச்சேரி என்பதால் எங்கள் திட்டத்தை சென்னை என்பதற்கு பதில் புதுச்சேரி என அமைத்துக் கொண்டோம்.
ஆம்புலன்ஸ் டிரைவர் மிகத் திறமையாக வாகனத்தை இயக்கி எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு சேர்த்தார். நாலைந்து மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்று மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க காத்திருந்தது. சென்னை மருத்துவர் ஃபோன் மூலம் சொல்லியிருக்கிறார் என்பதால் முன்னேற்பாடுடன் இருந்தனர். மருத்துவமனையை அடைந்ததும் ஐ.சி.யு வில் அட்மிட் செய்தனர்.
நண்பரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ஆம்புலன்ஸ் ஊருக்குப் புறப்பட்டது. அதில் நான் ஊர் திரும்பினேன். காலை 10 மணியிலிருந்து அலைச்சல். மாலை 6 மணிக்கு வீடு திரும்பினேன்.
நெருக்கடியான தருணம் ஒன்றில் நண்பருடன் உடனிருந்தது நிறைவை அளித்தது. நண்பரின் மனைவியின் உடல்நிலை மேம்பட்டது மகிழ்ச்சியைத் தந்தது.