’’காவிரி போற்றுதும்’’ அமைப்பு தொடங்கப்பட்டவுடனேயே தனது செயல்களைத் தொடங்கியது. ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுத்த முதல் செயலின் மூலமே நாம் ஒரு கிராமத்தின் மக்களின் முழுமையான ஏற்பையும் அன்பையும் பெற்றோம். நாம் ஒரு கிராமத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வரும் பண்பாட்டின் பகுதியாகக் காண்கிறோம். சிறு மேகக் கூட்டம் கூட சில பொழுதுகள் சூரியனை மறைக்க இயலும் விதமாக கிராமங்களின் செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் சிறு தொய்வுகள் மக்கள் ஒற்றுமையாலும் மக்களின் கூட்டுச்செயல்பாடாலும் நீங்கி செழுமை பெறும் என்பதை நாம் அனுபவபூர்வமாக உணர்கிறோம். கிராமத்தின் எல்லா குடும்பங்களும் எல்லா மனிதர்களும் பொருளீட்ட வேண்டும் என விரும்புகின்றனர். பொருட்செல்வம் மனித வாழ்வை பெருமளவு முன்னகர்த்தக் கூடியது. பொருட்செல்வம் மனித வாழ்வுக்கு மகிழ்ச்சியைத் தர வல்லது. பொருட்செல்வம் மனிதனின் பல அக மற்றும் புறத்தடைகளை நீக்க வல்லது. ‘’காவிரி போற்றுதும்’’ தனது பணியின் அடித்தளம் என ‘’கிராம மக்களின் பொருளியல் நிலையை உயர்த்துவது’’ என்பதையே கொள்கிறது. இந்த அடிப்படையைக் கொண்டே தனது செயல்கள் அனைத்தையும் முன்னெடுக்கிறது.
கிராமத்தில் பெருநிலக் கிழார்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். சிறு விவசாயிகளும் பெரு விவசாயிகளும் பலர் இருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எவருமே தங்களால் விவசாயத்தில் ஈட்டக்கூடிய முழுமையான வருமானத்தை ஈட்டிவிடவில்லை. ஒரு விவசாயத் தொழிலாளியால் மாதம் ரூ. 10,000 வருமானம் ஈட்ட முடிகிறது எனில் அவரால் ஏதேனும் எளிய வழிகள் மூலம் அதனை மாதம் ரூ.20,000 ஆக்குவார் எனில் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் அது பேருதவியாக இருக்கும். அவர் தனது வருமானத்தை கிராமத்து விவசாய வேலை மூலமே உருவாக்கிக் கொள்வார் எனில் அது அவருக்கு இன்னும் உதவிகரமாக இருக்கும். வருமானத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்னும் ஆவலுடன் 100 பேர் இருப்பார்கள் எனில் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் அவர்களில் 10 பேரை மட்டுமே சென்றடையும் என்றாலும் அது நலன் பயப்பதே. நாம் 10 பேரின் சிக்கலைத் தீர்க்கும் போது மீதி 90 பேருக்கும் ஒரு வழிவகை செய்ய ஒரு வழியினை உருவாக்கியிருக்கிறோம் என்றே கொள்ள வேண்டும்.
கிராம மக்கள் ‘’காவிரி போற்றுதும்’’ மீது பெரும் பிரியம் கொண்டிருக்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். மதிப்பு வைத்திருக்கிறார்கள். இது உன்னதமான விஷயம். ஒரு செயல்பாட்டாளனாக அதனைப் புரிந்து கொள்கிறேன் எனினும் இதனினும் முக்கியமானது ‘’காவிரி போற்றுதும்’’ நோக்கங்கள் முழுமையாக நிறைவேறி விவசாயக் குடும்பங்கள் பொருளியல் பயன் அடைவதே ஆகும். அந்த நோக்கத்தை மட்டும் ‘’காவிரி போற்றுதும்’’ தன் சிந்தையில் கொண்டிருக்கிறது.
‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்காக ஒரு மாதத்தில் ஐந்து நாட்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களை கிராமத்தில் அளிக்க இருக்கிறேன். அதற்கான காலம் உருவாகி விட்டது என்பதை உணர்கிறேன்.
ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு செயல் என வரும் ஆண்டு 12 செயல்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.
1. கணக்கெடுப்பு : கிராமத்தில் 500 குடும்பங்கள் இருக்கும். எல்லா குடும்பத்தினரையும் மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள எல்லா நபர்களையும் நேரில் விடுபடல் இன்றி சந்திப்பது என்பது எளிதல்ல. சிலர் வெளியூர் சென்றிருப்பார்கள். சிலர் பணி நிமித்தம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்றிருப்பார்கள். கல்லூரிப் படிப்புக்காக கல்லூரி விடுதிகளில் தங்கியிருப்பார்கள். உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றிருப்பார்கள். மேலும் பல பல காரணங்கள். அனைவருடனும் ஒரு அறிமுகம் இருப்பது செயல்பாடுகளுக்கு நலம் பயப்பது என்ற விதத்தில் ஒரு முழுமையான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.
2. தைப்பட்டம் : தைப்பட்டத்தின் போது கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கன்காய், பரங்கிக்காய் ஆகிய காய்கறி விதைகளை வழங்குதல்.
3. கிராமத்து விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி அளித்தல்
4. கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கால்பந்து, பேட்மிட்டன், ரிங் பால், வாலிபால் ஆகிய விளையாட்டு உபகரணங்களை வழங்குவது.
5. கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நம் நாட்டின் மாநிலங்களின் பெயரையும் அவற்றின் தலைநகரங்களையும் எழுதுதல், தேசிய கீதத்தை எழுதுதல், தேசியப் பாடலான ‘’வந்தே மாதரம்’’ பாடலை எழுதுதல், நமது தேசிய சின்னங்களை எழுதுதல் என அவற்றில் போட்டி வைத்து பங்கு பெறும் அனைவருக்கும் நூல்களைப் பரிசளித்தல்.
6, கிராமத்துக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ’’சமையல் கலை’’ முகாம்கள் நடத்துதல் . ( இந்த பயிற்சி மிகவும் முக்கியமானது என்பது என் எண்ணம். பலர் பணி நிமித்தம் வெளியூர் செல்லும் போது சமையல் தெரியாது என்பதால் ஹோட்டல்களையே நம்பி இருக்க நேரிடுகிறது. ஹோட்டல் உணவு ஒத்துக் கொள்ளவில்லை எனில் வெளியூரில் பணி புரிய இயலாமல் போகிறது. சுயமாக சமைக்கத் தெரிந்த ஒருவன் எந்த சூழ்நிலையையும் எளிதில் எதிர்கொள்கிறான்)
7. கிராமத்துக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் எலெக்ட்ரிகல், பிளம்பிங், டூ வீலர் மெக்கானிசம் ஆகியவற்றின் அடிப்படை விஷயங்களைப் போதித்தல். இது அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும்
8. ஆடிப்பட்டத்தில் பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய், பீர்க்கன்காய் விதைகளை வழங்குதல்
9. கிராமத்தின் எல்லா குடும்பங்களும் பங்கேற்கும் விதத்தில் ஒரு மரம் நடு விழாவை நடத்துதல்
10. கிராமத்தின் பொது இடங்களில் வேம்பு, புங்கன், வில்வம், ஆல், அரசு, இலுப்பை ஆகிய மரங்களை நடுதல்
11. மேலும் இரு தென்னை மரம் ஏறும் பயிற்சி நடத்துதல்
12. கிராமத்தில் ஒரு ‘’உடல் நலன் முகாம் ‘’ நடத்துதல்
’’காவிரி போற்றுதும்’’ தம்மால் இயன்ற செயல்களை செய்து வந்தது. தற்போது அதன் செயல் வேகத்தை பல மடங்கு உயர்த்த முனைந்துள்ளது. கிராம மக்களின் பேரன்பும் நண்பர்களின் பெரும் ஆதரவுமே இதுவரை நாம் செய்த விஷயங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. நாம் திட்டமிடும் பணிகளும் அவ்வாறே நிகழும் என எண்ணுகிறோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.