Sunday 26 November 2023

நம்பிக்கை விண்மீன்

இங்கே மாவட்ட நிர்வாகத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டேன். அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. மின்னணுத் தகவல் தொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்ற பின் உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றனுக்கு கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கையிலேயே பணி நியமனம் பெற்றிருக்கிறார். உச்சபட்சமான ஊதியம். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் என ஏழு ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் ஊதியமாகக் கிடைத்த பெருஞ்செல்வம் கையில் இருக்கிறது ; மேலும் மேலும் நிறுவனத்தில் பதவி உயர்வு அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்னும் நிலையில் இத்தனை இருந்தும் மனம் உணரும் ஒரு போதாமை அவரை மாற்றுப்பணி குறித்து சிந்திக்கச் செய்திருக்கிறது. தனது தகவல் தொழில்நுட்ப பணியை ராஜினாமா செய்து விட்டு குரூப் -1 தேர்வுக்கு தயார் செய்ய முனைந்திருக்கிறார். புத்தகம் தேர்வு பரீட்சை ஆகியவை கல்லூரி இறுதி ஆண்டு இறுதி செமஸ்டருக்குப் பின் கிரமமாகக் கையில் எடுக்கக்கூட இல்லை என்னும் நிலையில் துவ்க்க நிலைத் தேர்வு , பிரதானத் தேர்வு ஆகியவற்றுக்குத் தயார் செய்யத் துவங்குகிறார். தான் எடுத்த முடிவு சரிதானா என்ற ஐயமும் குழப்பமும் அவ்வப்போது ஏற்பட்டது எனக் கூறும் அவர் தன் மன உறுதியால் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு பரீட்சைக்கான தயாரிப்பில் மட்டும் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார். துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெறுகிறார். பிரதானத் தேர்விலும் வெற்றி. நேர்காணலிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். தேர்வு முடிவுகள் வருகின்றன. குரூப் - 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக அரசில் பணி நியமனம் ஆகிறார்.   

தொழில்நுட்ப நிறுவனப் பணியில் சக ஊழியர்கள் அனைவரும் பெருந்திறன் கொண்டவர்கள். தனக்கு உகந்த மிக உகந்த நபர்களே தேவை என்பதனால் நிறுவனத்தின் பல கட்ட தேர்வுகளுக்குப் பின்னால் வந்து சேர்ந்தவர்கள். வளர்ந்து கொண்டேயிருக்கும் துறை குறித்த அறிவை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர்கள். இப்படியான பணிச்சூழலில் இருந்து விட்டு மாநில சர்க்கார் பணிக்கு வருவது என்பது மலைக்கும் மடுவுக்குமான தூரம் கொண்டது. மாநில சர்க்கார் பணிகள் என்றால் ஒரு நாளில் நடக்க வேண்டிய பணி என்பது தொண்ணூறு நாள் ஆனாலும் நடக்காது என்னும் தன்மை கொண்டது. பொதுமக்களுக்கு மாநில சர்க்கார் அலுவலகத்துக்கு வருவது என்றாலே தயக்கமும் அச்சமும் மட்டுமே இருக்கிறது. 

தொழில்நுட்ப நிறுவனப் பணியை ராஜினாமா செய்து விட்டு மாநில சர்க்கார் பணிக்கு வருவதற்கு பெரும் மனத்தெளிவும் மனத்திடனும் மன உறுதியும் தேவை. அந்த தெளிவுடன் திடனுடன் உறுதியுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரி இளைஞர்களுக்கு ‘’ நம்பிக்கை விண்மீன்’’ எனத் திகழ்பவர். 

நான் எப்போதுமே சர்க்கார் மீது நம்பிக்கை வைப்பவன். சர்க்கார் எந்திரம் சீராக இயங்கினால் பொதுமக்கள் பயன் அடைவார்கள் என்பது நிதர்சனம். ஜனநாயக அமைப்பில் சாமானியர்களே மிகப் பெரும்பான்மையான பொதுமக்கள். ‘’சட்டத்தின் ஆட்சி’’ என்பதே ஜனநாயகத்தின் உயர்ந்த தன்மை. 

பல விஷயங்களுக்காக அரசு ஊழியர்கள் மீது பல்வேறு விதமான புகார்களைப் பதிவு செய்திருக்கிறேன். நிகழும் தவறுகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குத் தொடர்ச்சியாகக் கொண்டு சென்றிருக்கிறேன். ஒரு குடிமகனாக அது என் கடமை. என் கடமையையே நான் செய்கிறேன். அதை எப்போதும் செய்வேன். 

மாநில சர்க்கார் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறார் என்பதைக் காண முடிகிறது. இத்தகைய மனிதர்கள் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்கள். நல்விஷயமாகும் அது.