திருஇந்தளூர் பரிமள ரங்கநாத சுவாமி ஆலய சன்னிதித் தெருவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு அம்சமாக பனைத்தீ எழுப்பினார்கள். பனையோலைகள் அடுக்கப்பட்டிருந்தது. சிறுவர்கள் உற்சாகமாகக் குழுமியிருந்தனர். நேரம் நெருங்க நெருங்க பெண்களும் குழந்தைகளும் திரண்டனர். அக்கினிக் குஞ்சொன்று அடுக்கப்பட்ட பனந்தாள்களின் அடியில் வைக்கப்பட்டது. சில கணங்களில் எழுந்தது செந்தீ. மண்ணில் எழுந்து விண்ணைத் தொடும் வல்லமை தன் பேருருவில் சுடர் விட்டது. தீ ஒரு வசீகரம். அந்த வசீகரத்தை நோக்கிக் கொண்டிருந்தது திரள். உருவாகி நிலைபெற்று திருநீறானது தீ.