அனுப்புநர்
ர.பிரபு
&&&&&
பெறுநர்
மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை
ஐயா,
பொருள் : SPECIAL DEPUTY COLLECTOR (&&&&&) மீது புகார்
பார்வை : புகார் எண் : &&&&& - சி.பி.கி.ரா.ம்.ஸ் இணையதளம்
வணக்கம்.
நமது நாடு பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த போது நம் நாட்டு மக்களின் பொருளியல் அதிதீவிரமாக பிரிட்டிஷாரால் சுரண்டப்பட்டது. நம் நாட்டின் விவசாயிகளும் நெசவாளர்களும் மிகப் பெரிய அளவில் அவர்களால் பாதிக்கப்பட்டனர். பெரும் திறன் கொண்டிருந்த நெசவாளிகளின் கட்டை விரல்கள் வெட்டப்பட்டன. நம் நாட்டில் விளையும் பருத்தியை குறைந்த விலைக்கு வாங்கி இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று அங்கிருந்து நூற்பாலைகளிலிருந்து நெய்யப்பட்ட துணியை நம் நாட்டில் விற்றனர். நாட்டு மக்களின் உழைப்பும் உபரியும் எங்கேயோ இருக்கும் சிறு குழுவால் கொள்ளையடிக்கப்பட்டது. நமது நாட்டின் நல்லூழ் நம்மை வழிநடத்த மகாத்மா வந்தார். நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் ஏதோ ஒரு விதத்தில் மகாத்மாவின் தடத்தில் நாம் பயணிக்கிறோம். முழு அளவில் என்று சொல்ல முடியாவிட்டாலும் பகுதி அளவிலாவது. மகாத்மா விரும்பிய பல விஷயங்கள் அவர் விரும்பிய வழிமுறைகளில் இல்லையென்றாலும் கூட ஏதேனும் வேறு ஒரு விதத்தில் செயலாகின்றன. கிராம ஊராட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இன்று அது நடக்கிறது. ஆட்சியும் அரசும் சாமானியர்களின் பங்களிப்பை தன்னுள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இன்று ஆட்சியிலும் அரசிலும் சாமானியனுக்கு ஒரு இடம் இருக்கிறது.
அரசு என்பது பெரும் அமைப்பு ; அந்த எந்திரம் 99 % ஊழியர்களாலும் அதிகாரிகளாலும் ஆனது என்பதே உண்மை. அரசியல் தலைமை என்பது அரசு நிர்வாகம் எத்திசையில் செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கும் அமைப்பே தவிர அது அரசு என்னும் அமைப்பின் முழு முற்றான அதிகாரம் என்றாகி விடாது. ஜனநாயகம் உலகுக்கு வழங்கிய மிக முக்கியமான கருதுகோள் என்பது ‘’சட்டத்தின் ஆட்சி’’ என்பதே. நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கியவர்கள் மத்திய மாநில அரசுத் தலைமைகள் ஐந்து ஆண்டு அகவை கொண்டவை என நிர்ணயித்தார்கள். ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறையும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வர வேண்டும் என நிர்ணயம் செய்தார்கள். எனினும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அவ்விதமான முறை இல்லை. ஏனென்றால் நம் நாட்டின் சட்டம் அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் நம்புகிறது. எந்த அளவுக்கு ஊழியர்களும் அதிகாரிகளும் கொண்ட அரசு அமைப்பு சீராக இயங்குகிறதோ அந்த அளவுக்கு சாமானியர்கள் பயன் பெறுவார்கள் என்று நம் நாட்டின் சட்டம் நம்புகிறது.
அடிப்படையில் நான் அரசு அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன். ஜனநாயக நாட்டின் குடிமகனாக அரசு அமைப்பில் நிகழும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவேன். அதனை எனது கடமை என்று கருதியே செய்கிறேன். தவறுகள் சுட்டிக் காட்டப்படும் போது தான் அவை மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். சமூகத்தில் பொதுமக்கள் 99 % இருக்கிறார்கள். அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் 1 % மட்டுமே இருக்கிறார்கள். அரசின் சீரான இயக்கத்துக்கு ஊழியர்களின் அதிகாரிகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பொதுமக்களின் பங்களிப்பும்.
மேற்படி மூன்று பாராக்களில் நான் இந்த கடிதத்தின் உள்ளடக்கத்துக்கு வெளியே சென்று விடவில்லை. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அன்னிய ஆட்சி நாட்டின் குடிமக்களுக்கு எவ்வித மதிப்பும் அளிக்கவில்லை. அன்னிய ஆட்சியை அகற்றி நாம் உருவாக்கிக் கொண்ட ஜனநாயக அமைப்பு பொதுமக்களை பொதுமக்கள் நலனை அடிப்படையாகவும் முக்கியமாகவும் கொண்டது. பொதுமக்களுக்கு மதிப்பு அளிப்பது.
இந்த கடிதம் ஒரு புகார் கடிதம்.
சி.பி.கி.ரா.ம்.ஸ் என்ற மத்திய அரசின் இணையதளம் இருக்கிறது. நாட்டின் குடிமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் அரசாங்கம் அரசாங்க சேவை சார்ந்த புகார்களை அதில் பதிவு செய்யலாம். பொதுமக்களுக்கு எவ்விதமான புகார்கள் இருக்கின்றன என்பதையும் அவை எவ்விதம் தீர்வு காணப்படுகின்றன என்பதையும் அந்த தீர்வு பொதுமக்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்பதையும் இணையதளம் மூலம் பதிவு செய்து தொகுத்து தீர்வளித்து தரவுகளிலிருந்து அரசு சேவையை மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும் வகையில் வடிவமைக்க்ப்பட்டது. வீட்டிலிருந்தே புகார் அளிக்கலாம் ; எந்த அரசு அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை என்பது இதில் உள்ள வசதி. அன்றாட வாழ்வில் என் கண்ணில் படும் என் கவனத்துக்கு வரும் நான் முக்கியம் என நினைக்கும் விஷயங்களை அதில் பதிவு செய்வேன்.
15.10.2023 அன்று மயிலாடுதுறை மாவட்டம் &&&&& வட்டம் &&&&& கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் இருந்த உயிர்மரம் வெட்டப்பட்டது. பள்ளி வளாகத்தில் இருக்கும் உயிர்மரம் மாநில அரசாங்கத்தின் சொத்தாகும். அரசாங்க சொத்தான எந்த உயிர்மரத்தையும் வெட்ட வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு தேவை. அந்த உத்தரவு பெறப்படவில்லை. என் கண்ணில் பட்ட இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சியர் , வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு புகாராக விரைவுத் தபாலில் அனுப்பினேன். சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்திலும் பதிவு செய்தேன். பதிவு எண் : &&&&&
25.11.2023 அன்று எனக்கு ஒரு சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதாவது என்னுடைய புகாருக்கு தீர்வு காணப்பட்டதாக. நான் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணையதளத்திற்குச் சென்று புகாரின் பதிவு எண் அளித்து பார்வையிட்டேன். அதில் ‘’எடுக்கப்பட்ட முடிவு’’ என்னும் பகுதியில் ‘’ PLEASE FIND THE ATTACHED FILE'' என இருந்தது. ஆனால் எந்த ‘’FILE''ம் இணைக்கப்படவில்லை. அதாவது எந்த ஆவணத்தையும் பதிவேற்றாமல் ஆவணம் இணைக்கப்பட்டிருப்பதாக பதில் அளித்திருக்கிறார்கள். SPECIAL DEPUTY COLLECTOR (&&&&&) இவ்வாறான செயலைச் செய்திருக்கிறார். இவ்வாறு நிகழ்வது இது முதல் முறை அல்ல ; இது இரண்டாவது முறை. இத்தகைய செயல் முறையானது அல்ல ; நலம் பயப்பது அல்ல என்பதையும் குடிமக்கள் அரசின் மீது வைக்கும் நம்பிக்கையை சிதைக்கும் செயல் என்பதையும் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்து தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இது குறித்து விசாரிக்குமாறு விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
இந்த கடிதம் தங்கள் பார்வைக்கு வந்து சேருமா தங்கள் மேஜையை வந்தடையுமா என்பதை நான் அறியேன். மாவட்டம் ஒன்றின் பலவிதமான பணிகளை காலை முதல் இரவு வரை மேற்கொள்பவர் நீங்கள். இந்த நீண்ட கடிதம் உங்களின் நேரத்தைக் கூடுதலாக எடுத்துக் கொள்ள நேர்வது எனக்கு வருத்தத்தையே அளிக்கிறது. எனினும் வேறு வழி எனக்கு இருக்கவில்லை.
மேற்படி சி.பி.கி.ரா.ம்.ஸ் புகாரின் தீர்வு ஆவணத்தை வழங்கும் படி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பொது தகவல் அதிகாரிக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி வேறு ஒரு தபால் மூலம் கோரியிருக்கிறேன். எளிய வழமையான ஒன்றை SDC (&&&&&) சிக்கலாக்கியிருப்பது மிகவும் துரதிர்ஷ்ட்டவசமானது. இவ்வாறான தவறான அணுகுமுறையால் இனி எந்த குடிமகனும் பாதிக்கப்படக்கூடாது என விரும்புகிறேன்.
நன்றி !
தங்கள் உண்மையுள்ள,
இடம் : மயிலாடுதுறை
நாள் : 25.11.2023
இணைப்பு
1. புகார் எண் : &&&&& ன் விபரம் கொண்ட சி.பி.கி.ரா.ம்.ஸ் பக்கம்