Friday, 1 December 2023

தஞ்சாவூர் (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் அவரது நண்பர் ஒருவரைச் சந்தித்தார். நண்பருக்கும் அமைப்பாளருக்கும் பல மாதங்களாகப் பழக்கம். எனினும் நேரில் சந்தித்தது இல்லை. முதல் முறையாகச் சந்தித்தார்கள். 

இருவரும் 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும் அந்த 15 நிமிட உரையாடலில் புதிதாக அறிமுகமாகி முதல் முறையாக உரையாடிக் கொள்ளும் இரு நபர்களின்  மனநிலையே இருந்தது. சட்டென அமைப்பாளர் நண்பரிடம் கேட்டார் : ‘’அண்ணன் ! உங்க சொந்த ஊர் என்ன அண்ணன்?’’ 

நண்பர் சொன்னார்: ‘’மன்னார்குடி’’

அமைப்பாளருக்கு முகமெல்லாம் புன்னகை. உற்சாகத்தால் உடல் ததும்பத் தொடங்கியது.

 ‘’என்னது மன்னார்குடியா?’’

’’ஆமாம்’’

‘’அப்ப நீங்க தஞ்சாவூர்காரரா?’’

நண்பர் பெருமிதத்துடன் ‘’ஆமாம் ஆமாம்’’ என ஆமோதித்தார். 

அமைப்பாளர் அமர்ந்திருந்த நாற்காலியின் நுனிக்கு வந்தார். எதிரில் இருந்த மேஜை மீது இரு கைகளையும் வைத்தார். இருக்கையில் மேலும் மேலும் லகுவானார். அமைப்பாளர் நண்பர் இருவரின் சிரிப்பொலியால் அந்த அறையே நிரம்பியது. 

நண்பர் என்ன நினைத்து எதைப் புரிந்து கொண்டு சிரித்தார் என்பதும் அமைப்பாளர் என்ன நினைத்து எதைப் புரிந்து கொண்டு சிரித்தார் என்பதும் அவர்களுக்கும் கடவுளுக்கும்தான் வெளிச்சம். 

நண்பர் அமைப்பாளரிடம் சமீபத்தில் ‘’துவாரகா’’ சென்று வந்ததைக் கூறினார். நண்பர் விஷ்ணு பக்தர் என்பதை அமைப்பாளர் புரிந்து கொண்டார். 

‘’அண்ணன் ! நாங்கூர் 14 திவ்ய தேசத்துக்கு வாங்க அண்ணன். ரெண்டு நாள்ல 14 பெருமாளை சேவிக்கலாம். இதுக்கு முன்னாடி நாங்கூர் சேவிச்சிருக்கீங்களா?’’ 

நண்பர் ‘’இல்ல . சேவிச்சதில்லையே’’ என்றார்.

‘’என்ன அண்ணன்! இப்படி சொல்லீட்டீங்க. திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊர் திருவாலி திருநகரி நாங்கூர் திவ்ய தேசத்துல இருக்கு. தை மாசம் நடக்கற நாங்கூர் கருடசேவை ரொம்ப விசேஷம்’’ 

நண்பர் ’’கூடிய சீக்கிரம் சேவிச்சுடலாம்’’ என்றார். 

பின்குறிப்பு : நண்பரின் சொந்த ஊர் மன்னார்குடி இப்போது திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறது. அமைப்பாளரின் சொந்த ஊர் மயிலாடுதுறையும் தனி மாவட்டமாகி விட்டது. இருந்தாலும் அவர்கள் தங்களை தஞ்சாவூர் என்றே சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. எல்லா பழைய தஞ்சாவூர்காரர்களைப் போல!