Sunday 3 December 2023

காவிரி போற்றுதும் - பணிகளின் நிதிநிலை

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. அதன் அமைப்பாளரே அதன் செயல்களை ஆற்றும் செயலாளரும். அமைப்பாளரின் நண்பர்களே அமைப்பின் ஆதரவாளர்கள். இந்த பின்னணியிலேயே ‘’காவிரி போற்றுதும்’’ செயல்கள் நிகழ்ந்தன. நிதிநிலையின் அடிப்படையில் அவை எவ்விதம் நிகழ்ந்தன என்பதை அமைப்பு முன்னெடுத்த ஒவ்வொரு செயல்பாடுகளையும் அடிப்படையாய்க் கொண்டு தொகுத்துக் கொள்வது இந்த தருணத்தில் உபயோகமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு நுண் அமைப்பு எவ்விதம் தன் செயல்களை திட்டமிட்டது செயல்படுத்தியது என்பதை புறவயமாக அறிந்து கொள்வது நமக்கு மட்டுமன்றி இவ்வகையான செயலை முன்னெடுக்க நினைக்கும் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்த விஷயம் பதிவு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறேன். நாட்டில் உலகத்தில் நடக்கும் எல்லா விதமான பொதுப்பணிகளையும் அவை திட்டமிட்டு செயல்படுத்தப்படும் விதங்களையும் என்னுடைய கவனத்துக்கு வருபவற்றை ஒரு அமைப்பாளனாக கூர்ந்து   நோக்குகிறேன். 

நாம் நமது செயற்களமாக ஒரு கிராமம் என்பதைக் கொண்டோம். நாடு , மாநிலம், மாவட்டம் ஆகிய அலகுகளுடன் ஒப்பிட்டால் கிராமம் என்பது சிறிய அலகே. எனினும் அமைப்பாளரே செயலாளராகவும் இருக்கும் நுண் அமைப்புக்கு கிராமம் என்பது மிகப் பெரிய பேரலகு ஆகும். 

நாம் இதுவரை செய்திருக்கும் பணிகளை நினைவில் இருந்து வரிசைப்படுத்திக் கொள்கிறேன். அவை எவ்விதம் திட்டமிடப்பட்டன ; . எவ்வளவு நிதி தேவைப்பட்டது : அது எவ்விதம் திரட்டப்பட்டது. அந்த பணிகளின் மூலம் நிகழ்ந்த விளைவுகள் என்ன என்பதை ஒவ்வொன்றாகக் கூறுகிறேன். 

1. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் மரக்கன்றுகள்

2. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் முன்னால் மலர்ச்செடிகள்

3. கிராமம் முழுவதும் தீபம் ஏற்றிய நிகழ்வு

4. கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

5. இரண்டாம் கிராமம் : கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

6. இரண்டாம் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் மலர்ச்செடிகள்

7. குடியரசு தினத்தன்று முதல் நாள் எல்லா வீடுகளுக்கும் நந்தியாவட்டை செடிகள்

8. குடியரசு தினத்தன்று மாலை எல்லா வீடுகளும் தீபம் ஏற்றுதல்

9. ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவரின் 3 ஏக்கர் வயலை முழுமையாக தேக்குத் தோட்டமாக மாற்றுவதில் ஆலோசனை வழங்கியது

10. இரண்டாம் கிராமத்தில் இரு விவசாயிகளின் வயலில் கணிசமான தேக்கு மரக்கன்றுகள் நட ஆலோசனை வழங்கியது . கூட இருந்து உதவியது. 

11. இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மழைக்காலத்தில் ஒரு வாரம் உணவளித்தது. 

12. இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் வருடம் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கியது

13. மாவட்டத்தில் இருக்கும் எல்லா சலூன்களுக்கும் ஏழு புத்த்கங்கள் கொண்ட தொகுப்பை அளித்தது

14. கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் பூசணி, சுரை, பரங்கி, பீர்க்கன் ஆகிய விதைகளை ஆடிப்பட்டத்தில் வழங்கியது

15. நண்பர் ஒருவரின் தந்தையின் நினைவு தினத்தையொட்டி கிராமம் முழுதுக்கும் நெல்லி மரக்கன்றுகளை வழங்கியது. 

16. நண்பர் ஒருவரின் தந்தையின் நினைவாக ஒரு விவசாயிக்கு 100 எலுமிச்சை கன்றுகளை வாங்கித் தந்தது. 

இந்த செயல்கள் எவ்விதம் திட்டமிடப்பட்டன ; எவ்விதம் நிகழ்ந்தன ; அவற்றின் மூலம்  பெறப்பட்ட அனுபவம் என்ன அது எவ்விதம் அடுத்த பணிகளுக்கு உதவியது என்பதை பதிவு செய்கிறேன். என்னுடைய வலைப்பூவில் அவ்வப்போது நிகழும் பணிகள் குறித்து பதிவு செய்கிறேன் என்றாலும் ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பார்ப்பது எல்லாவற்றுக்கும் நலன் பயப்பது என்பதால் இந்த பதிவில் விரிவாகப் பதிவிடுகிறேன். 

1. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கியது

நாம் முதலில் துவக்கிய பணி இது. பொதுப்பணி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பல ஆண்டுகளாக இருந்ததேயன்றி ஒரு அமைப்பாக உருவாகி செயல்பட்ட அனுபவம் இல்லை. மக்களை நம்பி ஒரு பொதுப்பணி அமைப்பை துவங்கினேன். அது ஒரு நிமித்தம் மட்டுமே. பலரும் இணைவதற்கு ஒரு தளம் தேவை என்பதால் அமைப்பு உருவாக்கப்பட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிடப்பட்டது. 

ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களையும் சந்தித்து அவர்கள் ஏதும் மரக்கன்றுகள் வளர்க்க விரும்பினால் அவர்களுக்கு அந்த மரக்கன்றுகளை ஏற்பாடு செய்து வழங்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஒரு கிராமத்தின் விவசாயக் குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் வீட்டில் இருக்கும் ஆண்களில் ஒருவருக்கு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் அவர்கள் அருகில் உள்ள நகரத்தில் உள்ள நர்சரிகளுக்கு சென்று வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் நடுவார்கள். பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ ஆர்வம் இருந்தால் அவர்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் சொல்லி அவர்கள் வாங்கி வருவதற்கு சாத்தியம் உச்சபட்சமானது இல்லை என்பதால் அப்படி விருப்பப்படுபவர்களுக்கு நாம் மரக்கன்றுகளை வழங்கினால் அவர்கள் ஆர்வமும் விருப்பமும் நிறைவேறும் ; கிராமத்தில் இருக்கும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று உத்தேசித்தேன். எனது உத்தேசம் சரியாக இருந்தது. கிராமத்தின் குடும்பங்களில் இருந்த அனைவருக்குமே வீட்டின் தோட்டத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாறாத தன்மை கொண்ட விவசாயப் பணிச்சூழலால் நகருக்குச் சென்று நர்சரியில் வாங்கி நடுவதில் சுணக்கம் கொண்டிருந்தனர். நாம் அவர்களை அணுகி அவர்களுக்குத் தேவையான மரக்கன்றுகள் என்ன எனக் கேட்டு கணக்கெடுத்த போது அதனை ஒரு நன்நிமித்தமாகக் கொண்டு ஆர்வத்துடன் தேவையான மரக்கன்றுகளைக் கூறினர். எனது உத்தேசம் என்ன என்பதை ஒவ்வொருவரிடம் கூறினேன். அதன் மூலம் எனக்கும் மக்களுக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உருவானது. தேக்கு குறித்து அவர்களிடம் எடுத்துச் சொன்ன போது அவர்களின் குடும்பத்தின் பொருளியல் கஷ்டத்தைத் தீர்க்க வந்த ஒருவனாக என்னைப் பார்த்தார்கள். அடியேன் எளியவன். மிக அளியவன். என்னிடம் அவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அவர்களுக்கு வழங்க ஆலோசனை மட்டுமே இருந்தது. அதைத் தாண்டி என்னிடம் ஏதும் இருக்கவில்லை. 

500 குடும்பங்களைச் சந்தித்தேன். ஒரு இடத்தில் கூட ஒருவர் கூட என்னை அன்னியமாக நினைக்கவில்லை. ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் மட்டுமே ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒதுக்க முடியும் என்ற நிலையிலும் அந்த குறைந்த நிமிடங்களிலேயே உணர்வுபூர்வமான பிணைப்பு உருவானது. 

அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பை முடித்த போது அந்த கிராமத்து மக்களுக்கு 20, 000 மரக்கன்றுகள் தேவைப்படுகின்றன என்ற எண்ணிக்கை கிடைத்தது. அதாவது, சராசரியாக ஒரு கிராமத்துக்கு 20,000 மரக்கன்றுகள் நடும் அளவுக்கு இடமும் நட்டு வளர்க்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட கிராம விவசாய மக்களும் இருக்கிறார்கள். 

கணக்கெடுப்பைத் தொடங்கிய போது அந்த கிராமத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை ‘’T''  எனக் கொண்டால் கணக்கெடுப்பு நிகழ்ந்த பின் அந்த கிராமத்தில் மக்கள் கோரிய வண்ணம் அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டால் அந்த கிராமத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கை ‘’ T + 20,000'' என்றாகும். அந்த எண்ணிக்கை உண்மையிலேயே மிகப் பெரியது. சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போன்றது. இதே கணக்கை ஒரு புரிதலுக்காக விரிவுபடுத்தினால் எங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருக்கும் மொத்த மரங்களின் எண்ணிக்கையை ''DT'' எனக் கொண்டால் , தோராயமாக 300 கிராமங்களைக் கொண்ட எங்கள் மாவட்டத்தின் சாத்தியம் ‘’DT + 60,00,000'' என்றாகும்.  

ஒரு கிராமத்தில் ‘’T + 20,000'' என்பது சாத்தியம் எனில் ஒரு மாவட்டத்தில் ''DT + 60,00,000 '' என்பதும் சாத்தியமே என்பதை 15 நாட்கள் கணக்கெடுத்து மக்கள் மனநிலையை அவர்களுடன் உணர்வுபூர்வமாகத் தொடர்பு கொண்டு உரையாடியதன் மூலம் முழுமையாக அறிந்தேன். இந்த அறிதலும் புரிதலும் ஏற்பட்டது எனக்கு முக்கியமான அனுபவமானது. பொதுப்பணியில் இவ்வாறு களத்தில் ஏற்படும் அனுபவங்களே பொதுப்பணியாளனின் மனத்தை உறுதிப்படுத்துகின்றன. 

இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள எனக்கு பெரிதாக எந்த செலவும் ஆகவில்லை. செயல் புரியும் கிராமம் ஊரிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இருந்தது. மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கிராமம் அது. அதற்கு அடுத்த கிராமம் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தது. ஊருக்கு அருகில் கிராமத்தில் பொதுப்பணி செய்வதை விட கணிசமான தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பணி புரிந்தால் சற்றே கடின இலக்கொன்றை எட்டிய நிறைவு இருக்கும் என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தேன். அந்த முடிவு சரியானதே என்பதை பின்னாட்கள் உணர்த்தின. 

காலை 6.30 மணிக்கு காலை உணவை அருந்தி விட்டு அந்த கிராமத்துக்குச் செல்வேன். சென்று சேர காலை 7.15 ஆகும். அப்போதிலிருந்து மதியம் 2 மணி வரை கணக்கெடுப்பேன். ஏழு மணி நேரத்தில் இழுத்துப் பிடித்து 50 வீடுகளில் கணக்கெடுப்பேன். சில வீடுகளில் அமரச் சொல்லி தேனீர் தயாரித்து அளிப்பார்கள். சிலர் அருந்த மோர் கொடுப்பார்கள். சிலர் சோடா கலர் வாங்கி வந்து தருவார்கள். அவர்கள் உபசரிப்பை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும் ; அதே நேரம் அடுத்தடுத்து தேனீர் மோர் சோடா என அருந்துவதும் சாத்தியம் இல்லை என்பதால் உபசரிப்புகளை மென்மையாகத் தவிர்த்து விட்டு கணக்கெடுப்பை நிறைவு செய்து விட்டு மதியம் 3 மணிக்கு வீடு திரும்பி மதிய உணவருந்துவேன். இந்த 15 நாட்கள் கணக்கெடுப்புக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த வகையில் ரூ. 1000 ( ரூபாய் ஆயிரம் மட்டும்) செலவாகியிருக்கும். 

கணக்கெடுப்பை முடித்த பின் தான் 20,000 மரக்கன்றுகள் தேவை என்ற எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டது. அப்போது என்னிடம் ஒரு மரக்கன்று கூட கைவசம் இல்லை. 

என்னுடைய நம்பிக்கையையும் தீவிரத்தையும் பார்த்த எனது நெருங்கிய நண்பர்கள் தங்கள் ஏற்பாட்டில் 20,000 மரக்கன்றுகளை வழங்கினர். கிராம மக்கள் அனைவரின் தோட்டத்தையும் அவை சென்றடைந்தன. 

அத்தனை மரக்கன்றுகளும் வளர்ந்து விட்டதா என்ற கேள்வி எப்போதும் எழுப்பப்படும், ஒரு மரக்கன்று நடப்பட்டு முதல் 6 மாத காலத்தில் தொடர் மழை, புயல் , வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைக் கடந்து வர வேண்டும். அது ஒரு பொது உண்மை. ஐந்து நாட்கள் தொடர்மழை பெய்து தண்ணீர் நின்றால் கன்றுகளின் வேர் அழுகும். இவை விவசாயத்தில் எப்போதும் உள்ளவை. அவற்றைத் தாண்டி பிழைத்த மரங்களின் எண்ணிக்கையே மிக மிக அதிகம். 

2. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் முன்னால் மலர்ச்செடிகள் 

20,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்ட போது அந்த கிராமமே புத்தெழுச்சி பெற்றிருந்தது என்பதை இப்போது நினைவுபடுத்திக் கொள்கிறேன். இன்னும் நுணுக்கமாக நோக்கினால் , கணக்கெடுப்பு தொடங்கிய நாளிலிருந்தே அந்த கிராமமும் கிராம மக்களும் உற்சாகமும் எழுச்சியும் கொண்டார்கள். என் அகத்தில் எழுந்த யோசனை என்பதால் அதன் மீது நான் பெரும் நம்பிக்கையும் தீவிரமும் கொண்டிருந்தேன். மக்களின் ஆர்வத்தையும் அன்பையும் காணக் காண என் செயலூக்கம் மேலும் மேலும் அதிகமானது. என் அகமும் கிராம மக்களின் அகமும் எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றானது. ஒற்றுமை என்பது அதுதான். ஒருமைப்பாடு என்பது அதுதான். அந்த அனுபவத்தை இந்த எளியவனுக்கு அந்த கிராம மக்கள் வழங்கினார்கள். 

பணியின் பெரும்பகுதி நிறைவுற்ற போது அந்த கிராமத்தின் ஆலயம் ஒன்றில் கிராமத்தில் பணிக்கு உதவிய தன்னார்வலர்களின் கூடுகையொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் நான் பேசினேன் ‘’ ஒட்டு மொத்த பிரபஞ்சமும் இறையின் வடிவம் என பக்தன் உணர்ந்திருந்தாலும் ஆலயத்தின் கருவறை விக்ரகத்தையே பிரபஞ்ச ரூபமான இறைவன் என வணங்குகிறான். பக்தன் ஒருவனுக்கு தெய்வ விக்ரகம் எவ்வாறோ அதைப் போன்றது எனக்கு இந்த கிராமம். இந்த கிராமத்தை நான் தேசம் என்றே பார்க்கிறேன் ; உணர்கிறேன்’’ என்று சொன்னேன். இந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு மலர்ச்செடி பூத்திருக்குமானால் நான் மிகவும் மகிழ்வேன் என்று சொன்னேன். மேலும் இத்தனை நாட்கள் நாம் இணைந்து செயல்பட்டிருப்பதன் அடையாளமாக நம் ஒற்றுமையைக் குறிக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அனைவரும் அவ்வாறே செய்து விடலாம் என்று சொன்னார்கள்.

3. கிராமம் முழுவதும் தீபம் ஏற்றிய நிகழ்வு

 அடுத்த இரண்டு நாட்களில் 500 பூமரக் கன்றுகளை நண்பர் ஒருவர் அளித்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் அளித்து 7 தீபங்கள் குறித்து தகவல் தெரிவித்தேன். குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களும் தங்கள் வீட்டு வாசலில் 7 தீபங்கள் ஏற்றினார்கள். அந்த ஒளி வெள்ளம் நம்பிக்கையின் நல்லெண்ணத்தின் அடையாளம். 

500 பூமரக் கன்றுகளை நண்பர் ஒருவர் வழங்கியதால் கிராமமே ஒருங்கிணைந்த அந்த அபூர்வ நிகழ்வுக்கு பொருட்செலவு என எதுவும் இல்லை.

பரஸ்பர அன்பும் பிரியமும் நல்லெண்ணமும் மரியாதையும் வெளிப்பட்ட ஒரு கிராமமே இணைந்து உருவாக்கிய அந்த தீப ஒளி வெள்ளத்தின் மதிப்பு என்ன என்பதை உணர்வுபூர்வமாக மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா?

 4. கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

கிராமம் முழுவதும் தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் அவ்வப்போது அந்த கிராமத்துக்குச் சென்று வருவேன். அந்த காலகட்டத்தில் கோவிட் தடுப்பூசி அரசாங்கத்தால் அரசு மருத்துவமனைகளில் இடப்பட்டது. அந்த கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் ஒவ்வொரு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். எளியவனான எனது வார்த்தைக்கு மதிப்பளித்து கிராமத்தின் எல்லா குடும்பங்களும் தீபம் ஏற்றிய நிகழ்வில் பங்கெடுத்ததால் அவர்களுக்கு ஒரு கைமாறு செய்ய வேண்டும் என எண்ணினேன். எனவே எல்லா வீடுகளுக்கும் சென்று கோவிட் தடுப்பூசி இட்டுக் கொள்ள சொன்னேன். எனினும் அப்போது மக்களுக்கு தடுப்பூசி குறித்து தயக்கமும் ஐயமும் இருந்தது. ஆர்வம் கொண்டிருந்த 50 பேரை என்னுடைய காரில் இரண்டு மூன்று நாட்களுக்கு காலை மாலை மதியம் என நகருக்கு அழைத்து வந்து ஊசி போட்டு கிராமத்தில் திரும்பக் கொண்டு சென்று விட்டேன். இதில் எனது வாகனத்தின் பெட்ரோல் செலவு என ரூ. 2000 ( ரூபாய் இரண்டு ஆயிரம்) ஆகியிருக்கலாம். 

5. இரண்டாம் கிராமம் : கோவிட் தடுப்பூசிக்கான முயற்சி

செயல் புரிந்த முதல் கிராமம் ஊரிலிருந்து 45 நிமிட பயண தூரம் என்பதால் ஊரிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை செயல் புரியும் கிராமமாக்கிக் கொண்டேன். அங்கே தொடங்கிய முதல் பணியே கோவிட் தடுப்பூசி பணி தான். முதல் கிராமத்தில் கோவிட் தடுப்பூசி அனுபவம் இருந்தால் இரண்டாம் கிராம மக்களிடம் தடுப்பூசி முக்கியத்துவம் குறித்து எடுத்துச் சொல்லும் முறையில் சற்று மாற்றம் ஏற்படுத்தி அந்த கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் சென்று தகவல் தெரிவித்தேன். நமது பரப்புரையால் தடுப்பூசி முகாம் கிராமத்தில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி இட்டுக் கொண்டனர். அந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது ; அரசு மருத்துவமனை கிடையாது ; எனினும் அந்த கிராமமே மாவட்டத்தில் உள்ள 300 கிராமங்களில் தடுப்பூசி இட்டுக் கொண்ட எண்ணிக்கையில் முதலிடம் பெற்று சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரால் விருது பெற்றது. ஊரின் 95 சதவீத மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர். ( மீதி 5 சதவீத மக்கள் வெளியூர் சென்றிருந்தவர்கள் : வெளியூரில் குடியிருந்தவர்கள் )

இந்த பெருநிகழ்வுக்கும் செலவு என எனக்கு ஏதும் ஆகவில்லை. குறைந்தபட்சமான பெட்ரோல் செலவு தான். 

6. இரண்டாம் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் மலர்ச்செடிகள் 

நமது கோரிக்கையை ஏற்று இரண்டாம் கிராமத்தின் பொதுமக்கள் ஏற்று கோவிட் தடுப்பூசி இட்டுக் கொண்டதால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கிராமத்தின் எல்லா குடும்பங்களுக்கும் அரளி மலர்ச்செடிகளை வழங்கினேன். அரளி ஆடு மாடு மேயாத வறட்சியைத் தாங்கி வளரும் செடி என்பதால் அதனை வழங்கினேன். மேலும் அரளி மலர்கள் சிவ பூசனைக்கும் துர்க்கை பூசனைக்கும் உகந்தவை என்பதும் அதனை வழங்க காரணம். சிலர் வீட்டு வாசலில் வைத்தார்கள். சிலர் வீட்டு தோட்டத்தில் வைத்தார்கள். 

ஐந்நூறு அரளிச் செடிகளை எனது சொந்த செலவில் வழங்கினேன். ஒரு செடியின் விலை ரூ. 10 

7. குடியரசு தினத்துக்கு முதல் நாள் எல்லா வீடுகளுக்கும் நந்தியாவட்டை மரக்கன்றுகள் வழங்குதல்  

குடியரசு தினத்துக்கு முதல் நாள் அந்த ஊரின் எல்லா குடும்பங்களுக்கும் நந்தியாவட்டை மரக்கன்றை வழங்கி வீட்டின் முன் நடச் சொன்னேன். நண்பர்கள் மரக்கன்றுகளை வாங்கி அளித்தனர். மக்கள் அனைவரும் நட்டனர். எனது செலவு ஏதுமில்லை. இப்போது அந்த கிராமத்தில் நந்தியாவட்டை மலர்கள் பூத்துக் குளுங்குகின்றன . ஆலய பூசனைக்கு காலையும் மாலையும் மலர்கள் கொய்யப்பட்டு இறைமையிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. 

8. குடியரசு தினத்தன்று மாலை மக்கள் தீபம் ஏற்றுதல்

குடியரசு தினத்தன்று மாலை வீட்டு வாசலில் 7 தீபம் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டோம். மக்கள் அவ்விதமே செய்தனர். இந்த நிகழ்வும் அவரவர் வீடுகளில் கிராம மக்களால் செய்யப்பட்டதால் செலவு என ஏதுமில்லை

9. ஐ.டி நிறுவன ஊழியரின் வயலை தேக்குத் தோட்டமாக்கியது 

‘’காவிரி போற்றுதும்’’ கிராம விவசாயிகள் பலம் பொருந்திய பொருளியல் சக்தியாக எழ வேண்டும் என விரும்புகிறது. எனவே ‘’காவிரி போற்றுதும்’’ தொடர்புக்கு வந்த ஐ.டி நிறுவன ஊழியர் வயலில் மேட்டுப்பாத்தி அமைத்து 1000 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்த தோட்டம் ஒரு மாதிரித் தோட்டமாக அமையும் என்பதால் நான்கு மாத கால அளவில் நண்பருடன் உடனிருந்து வயலை தேக்குத் தோட்டமாக மாற்ற உதவினோம். ஊருக்கு மிக அருகில் இருக்கும் அவரது வயலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த செலவு மட்டுமே இதன் செலவு.

10. இரண்டாம் கிராமத்தில் இரு விவசாயிகளுக்கு தேக்கு நட உதவியது

இரண்டாம் கிராமத்தின் இரு விவசாயிகளுக்கு 200 தேக்கு கன்றுகள் வழங்கி அது இப்போது 10 அடி உயர மரங்களாக உள்ளது. 

11. இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதி மக்களுக்கு மழைக்காலத்தில் ஒரு வார காலம் உணவளித்தது 

‘’காவிரி போற்றுதும்’’ கிராம மக்கள் அனைவருக்கும் சொந்தமானது ; கிராம மக்கள் அனைவருக்கும் பொதுவானது. நமக்கு பெருநிலக்கிழாரும் நண்பரே. விவசாயத் தொழிலாளரும் நண்பரே. நாம் கிராம மக்கள் என்னும் போது ஒட்டு மொத்த கிராமத்தையும் உத்தேசிக்கிறோம் . அவ்வாறான புரிதல் இருப்பதால் தான் - இருப்பதால் மட்டுமே நாம் முழுமையாக ஏற்கப்படுகிறோம். மழைக்காலத்தில் கிராமத்தின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை ஈரத்தின் அசௌகர்யங்களுக்கு ஆளாவார்கள் என்பதால் அவர்கள் சிரமத்தினைக் குறைக்கும் சிறு முயற்சியாக ஏழு நாட்கள் அந்த ஊரின் குடிசைப்பகுதி முழுமைக்கும் ஒரு வார காலம் ஒரு வேளை  உணவளித்தோம். அதன் மூலம் இரண்டாம் கிராமத்தின் குடிசைப்பகுதி மக்கள் அனைவருடனும் நேரடித் தொடர்பு ஏற்பட்டது. எனக்கு சொந்தமான ஃபிளாட் ஒன்றில் மூன்று சமையல்காரர்களைக் கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் செலவை ஒவ்வொருவர் என ஏழு நாள் செலவை ஏழு நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர். 

இரு சிறுமிகளின் தாயாரான ஒரு பெண்மணி இவ்வாறு உணவளித்த ஒரு நாளில் என்னிடம் குடிசைப்பகுதிகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள் எனக் கூறினார். நான் அதனைக் கோரிக்கையாக அல்ல மாறாக கட்டளையாகவே கொள்கிறேன். 

12. இரண்டாம் கிராமத்துக்கு மறுமுறை ஒரு வார மளிகைப் பொருள் வழங்கியது

முதல் வருடம் ஒரு வார காலம் உணவளித்தோம். இரண்டாம் வருடம் நிதிப்பற்றாக்குறை. இருப்பினும் துவங்கிய செயலை இரண்டாம் படிநிலையில் நிறுத்துக் கூடாது என்பதால் உணவாக சமைத்து அளிக்கவில்லை என்றாலும் ஒரு வார காலத்துக்கான மளிகைப் பொருட்களாக வழக்கினோம்.  

13. மாவட்டத்தில் உள்ள 400 சலூன்களுக்குச் சென்று ஒவ்வொரு சலூனுக்கும் 7 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை அளித்தது. 

மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களுக்கும் சென்று ஒவ்வொரு சலூனுக்கும் ஏழு புத்தகங்கள் கொண்ட தொகுப்பை அளித்தோம். 

14. கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் ஆடிப்பட்டத்தின் போது நாட்டுக் காய்கறி விதைகளைக் கொடுத்தது

50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, கிராமத்தில் வசிக்கும் மக்கள் கிராமத்தை விட்டு வெளியே சென்று பணிகள் புரிவதற்கோ வேறு லௌகிக விஷயங்களை ஆற்றுவதற்கோ வாய்ப்புகள் சற்று குறைவு. இத்தனை போக்குவரத்து வசதிகள் இல்லை. விவசாயப் பணியாளர்கள் உபரியாக இருப்பர். எனவே ஆடிப்பட்டத்தில் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி விதைப்பது எல்லா வீட்டிலும் நடக்கும். இப்போது போக்குவரத்து வசதிகள் மிகுந்திருக்கும் நிலையில் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி பயிரிடுவது மிகுந்திருக்க வேண்டும். எனினும் மிக மிகக் குறைந்து விட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக பூசணி, பீர்க்கன், பரங்கி, சுரை ஆகிய நாட்டுக் காய்கறி விதைகள் வழங்கப்பட்ட போது அந்த கிராமத்தினர் அதனை தங்கள் தொட்டங்களில் விதைத்து 3 மாதம் கழித்து பொங்கல் சமயத்தில் அறுவடை செய்த காய்கறிகளை அருகில் உள்ள நகரில் விற்பனை செய்தனர். தங்கள் உணவாகவும் பயன்படுத்தினர்.

15. நண்பர் தந்தையின் நினைவாக எல்லா வீடுகளுக்கும் நெல்லி மரக்கன்றுகள் வழங்கியது

நெல்லி மரத்தில் திருமகள் வசிக்கிறாள் என்பது நம் நாட்டின் நம்பிக்கை. எனது நண்பர் தனது தந்தையின் நினைவாக கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் நெல்லி மரக்கன்றுகளை வழங்க விரும்பினார். அவரது விருப்பம் நிறைவேற்றப்பட்டது

16. இன்னொரு நண்பர் தந்தையின் நினைவாக ஒரு விவசாயிக்கு 100 எலுமிச்சைக் கன்றுகள் அளிக்கப்பட்டன  

இந்த பணிகள் அனைத்தும் கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கின்றன என்பது பட்டியலிடப்படும் போது தெரிய வருகிறது. ஏதேனும் சில பணிகள் பட்டியலில் விடுபட்டிருக்கக்கூடும். 

செயல் திட்டமிடல்கள் எவ்விதம் ஒன்றன் பின் ஒன்றனாக நிகழ்ந்தது என்பதையும் அவற்றுக்குள் உள்ள தொடர்புகளையும் நம்மால் உய்த்தறிய முடியும். 

அடுத்து நாம் முன்னகர இருக்கும் பாதையை தீர்மானித்துக் கொள்ள இந்த பட்டியல் உதவக்கூடும்.